Digital Time and Date

Welcome Note

Wednesday, August 29, 2012

மனிதக் கரங்களால் மாசுபட்ட பைபிள் - ஒரு சரித்திர ஆய்வு

மனிதக் கரங்களால் மாசுபட்ட பைபிள் - ஒரு சரித்திர ஆய்வு
.
மூலம்: M.M. அக்பர் .....................................தமிழில்: தேங்கை முனீப், பஹ்ரைன்

இறைவெளிப்பாட்டின் அடிப்படையில் சமுதாயத்தை வழிநடத்திய இறைதூதர்கள் மற்றும் அவர்களுக்கு அருளப்பட்ட இறைவசனங்களின் தாக்கத்தை உட்கொண்ட ஒரு நூலே பைபிள் என்பதில் முஸ்லிம்களுக்கு மாற்று அபிப்பிராயம் இல்லை. இறைவசனங்களும் தீர்க்கதரிசிகளின் உபதேசங்களும் வரலாற்றாசிரிய
ர்களின் அபிப்பிராயங்களும் புரோகிதக் கருத்துக்களும் சேர்ந்த ஒரு கலவையே பைபிள். தீர்க்கதரிசிகளின் வாழ்க்கைப் புராணங்கள் பைபிளின் முதுகெலும்பு எனலாம். இந்த வாழ்க்கைப் புராணங்களின் மேல் புரோகிதக் கருத்துக்களைப் பொதிந்து உருவாக்கப்பட்டதே இன்று நடைமுறையில் உள்ள பைபிள் என்று கூறினால் வியப்படையத் தேவையில்லை.

பைபிளில் காணப்படும் பல வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் திருக்குர்ஆனில் உள்ள தகவல்களை ஒப்ப அமைந்திருப்பதைக் காணலாம். பைபிளில் காணப்படும் அத்தகைய தகவல்கள் இறைவசனங்கள், கண்ணால் கண்ட காட்சிகள் மற்றும் பிறர் கூறக் கேட்ட கருத்துக்களின் அடிப்படையில் பிற்கால எழுத்தாளர்களால் பதிவுசெய்யப்பட்டவை ஆகும். புரோகிதர்களின் மனித அபிப்பிராயங்கள் பைபிளில் மலிந்து காணப்படுவதால் முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்களும், அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களும் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றது.

திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள வரலாற்றுத் தகவல்கள் இதிலிருந்து முற்றிலும் வேறபட்டுள்ளது. அது அருளப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை எந்த மனிதக் கரங்களாலும் மாசுபடாமல் அதன் பரிசுத்தத் தன்மையிலேயே நிலைத்திருக்கின்றது. எனவே அது கூறும் வரலாற்றுத் தகவல்கள் முற்றிலும் உண்மையானவையகவும் முரண்பாடுகளற்றவையாகவும் பரிபூரணத் தன்மை வாய்ந்ததாகவும் நிலைத்து நிற்கின்றன. எனவே திருக்குர்ஆனில் எந்த முரண்பாடுகளையும் விமர்சகர்களால் கூறமுடியாது. அவ்வாறு விமர்சித்தாலும் சான்றுகளின் துணையோடு அவற்றை நிரூபிக்க இயலாது என்பதே உண்மை.

இறைவசனங்களின் தாக்கம் உள்ள பைபிளிலும் இறைவசனங்களை மட்டுமே கொண்ட திருக்குர்ஆனிலும் வரலாற்றுத் தகவல்கள் அடிப்படையில் ஒன்றாகத் தோன்றினாலும் அவற்றை விளக்கும் தொனியில் இரண்டிற்கு மத்தியிலும் பாரிய வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்தகைய வேறுபாடுகள் திருக்குர்ஆன் இறைவாக்கு என்பதை உண்மைப் படுத்துவதோடு பைபிள் மனிதக் கற்பனைகளின் கலவை என்பதையும் நிரூபிக்கின்றன. சில உதாரணங்களைக் கொண்டு இதனை நிரூபிப்போம்.

1. இறைக் கொள்கை மற்றும் இறைவனைப் பற்றிய தகவல்கள்.

திருக்குர்ஆனில் இறைவனைக் குறித்துக் கூறப்படும் தகவல்கள் யாவும் அவனது வல்லமையையும் மகத்துவத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளன. ஆனால் பைபிளில் பல இடங்களிலும் இறைவனின் மகத்துவத்திற்குக் களங்கம் ஏற்படும் வகையில் கருத்துக்கள் அமைந்துள்ளன. யஹோவாவின் பகத்துவம் பற்றிக் கூறினாலும் இஸ்ரவேலிய இனஉணர்வின் தாக்கங்கள் வரும் இடங்களில் இறைவனின் மகத்துவத்தைச் சிறுமைப் படுத்தும் விதத்தில் கருத்துக்கள் காணப்படுகின்றன.

உதாரணமாக ஆதியாகமம் 1:26 மனிதனை தனது சாயலில் இறைவன் உருவாக்கினான் என்று கூறி மனிதனுக்கு இறைவனை ஒப்பாக்கி தரம் தாழ்த்துகின்றது.

ஆதியாகமம் 2:23 கடவுள் ஓய்வு எடுத்தார் என்ற தகவலைக் கூறி களைப்பும் ஓய்வும் உடைய இறைவனை பைபிள் அறிமுகப்படுத்துகின்றது.

ஆதியாகமம் 3:8 முதல் 13 வரை ஏதேன் தோட்டத்தில் ஒளிந்துகொண்ட ஆதாமையும் ஏவாளையும் கடவுள் தேடி அலைந்தார் என்று கூறி முற்றிலும் பரிபூரணமடைந்த அவனது ஞானத்தைக் களங்கப்படுத்துகின்றது.

தான் செய்து விட்ட காரியத்திற்காக வருத்தப்படும் கடவுள் என்ற ஆதியாகமம் 6:6ல் கூறப்பட்டுள்ள தகவல் பின்விளைவை அறியாதவனாக இறைவனைச் சிறுமைப் படுத்துகின்றது.

தான் முனரே தீர்மானித்து உறுதிப்படுத்திய ஒரு காரியத்தைச் செய்யாமல் மனம் மாறிவிட்ட தெய்வத்தைப் பற்றி யாத்திராகமம் 32:14 கூறுகின்றது.

இஸ்ரவேல் இனத்தின் பிதாவாகிய யாக்கோபுடன் மல்யுத்தம் நடத்தி இறைவன் தோற்றுவிட்டதாக ஆதியாகமம் 32:28 கூறுகின்றது. மேலும் இஸ்ரவேல் இனஉணர்வின் ஆதிக்கம் பைபிளில் மேலோங்கியுள்ளது என்பதற்கு மேற்படி வசனம் ஒரு சான்றாகும்.

ஆனால் திருக்குர்ஆனில் இப்பேரண்டத்தின் படைப்பாளனும் ஆட்சியாளனும் ஆகிய அல்லாஹ்வைப் பற்றி எடுத்துக் கூறும் இடங்களில் அவனது மகத்துவத்திற்கோ வல்லமைக்கோ களங்கம் கற்பிக்கும் எந்தக் குறிப்புகளும் இல்லை. மாறாக இறைவனைக் குறித்த தகவல்கள் யாவும் அவனது வல்லமையையும் மகத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதுடன் அவற்றைப் படிப்பவர்களின் இறைநம்பிக்கையையும் பயபக்தியையும் அதிகப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. அல்லாஹ்வாகிய அவ்விறைவன் அரபிகளுக்கு மட்டும் உள்ள இறைவனாகத் திருக்குர்ஆன் அவனைக் குறித்து அறிமுகப்படுத்தவில்லை. திருக்குர்ஆன் அறிமுகப்படுத்தும் இறைவன் அரபிகளையும் அரபியல்லாதவரையும் இன நிற வேறுபாடின்றி அனைவரையும் படைத்தவன்இ அகில உலகத்தாரின் இரட்சகன்.


சில வசனங்கள்:

அல்லாஹ் அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் உயிரோடிருப்பவன். என்றென்றும் நிலைத்திருப்பவன். அவனை சிறுதுயிலோஇ உறக்கமோ பீடிக்கா. வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியது. (அல்குர்ஆன் 2:255)

இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும் உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான். (அல்குர்ஆன் 6:3)

வானங்களையும் பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான் அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (அல்குர்ஆன் 42:11)

நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (அல்குர்ஆன் 112: 1-4)

2. தீர்க்கதரிசிகளின் வரலாறு

வரலாற்றுத் தகவல்களைப் பொறுத்தவரை விவரிக்கும் விதம் தெய்வீகத் தன்மை ஆகியவற்றில் பைபிளும் திருக்குர்ஆனும் முற்றிலும் வேறுபடுகின்றது. முதலாவதாக ஆதிபிதாவாகிய ஆதமுடைய வரலாற்றைப் பற்றி பைபிள் மற்றும் திருக்குர்ஆன் தரும் தகவல்களைக் காண்போம்.

1. ஆதமிடமும் அவரது மனைவியிடமும் உண்ணக் கூடாது என்று விலக்கப்பட்ட கனியானது நன்மை தீமை குறித்து அறிவிக்கக் கூடிய கனி என்று பைபிள் கூறுகின்றது. (ஆதியாகாமம் 2:17)

பைபிளின் கூற்றுப்படி விலக்கப்பட்ட கனியைப் புசித்ததன் காரணமாகவே மனிதனுக்கு நன்மை தீமைகளைப் பற்றிய அறிவு கிடைக்கின்றது. (ஆதியாகமம் 3:6,7 மற்றும் 3:22) (கனியைப் புசிப்பதற்கு முன் நன்மை தீமைகளைப் பிரித்தறியாத நிலையில் இருந்த மனிதனிடம் விலக்கப்பட்ட கனியைப் புசிக்க வேண்டாம் என்று எவ்வாறு கட்டளையிட முடியும்? ஏவல் விலக்கல்களெல்லாம் நன்மை தீமையைக் குறித்து அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் என்பதல்லவா உண்மை? இதன் காரணமாகவே விலங்கினங்களிடம் ஏவல் விலக்கல்கள் செல்லுபடியாவதில்லை என்பதை கவனத்தில் கொள்க.)

ஆனால் திருக்குர்ஆன் விலக்கப்பட்ட கனியைக்குறித்து பேசும் இடத்தில் அது நன்மை தீமைகளைப் பிரித்தறிவிக்கும் அறிவின் கனி என்று குறிப்பிடவில்லை.

நன்மை புரிந்து உயர்நிலை அடையக்கூடிய அல்லது தீமை புரிந்து இழிநிலை அடையக்கூடிய நிலை இயற்கையாகவே மனுதனின் படைப்பில் அமைந்துள்ளது என்ற உண்மையை திருக்குர்ஆன் எடுத்தியம்புகின்றது. நன்மை தீமைகளைக் குறித்த அறிவு விலக்கப்பட்ட கனியைப் புசிப்பதற்கு முன்னரே இறைவனால் மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு அதனால் ஒவ்வொரு பொருளையும் பிரித்தறிந்து அதன் தன்மைகளுக்கு ஏற்ப பெயரிட்டு அழைக்கக் கூடிய ஒரு உன்னதமான ஒரு படைப்பாகவே திருக்குர்ஆன் மனிதனை அறிமுகப்படுத்துகின்றது.(அல்குர்ஆன் 2:30-33) விலக்கப்பட்ட கனியையும் நன்மை தீமைகளைப் பிரித்தறிதலையும் எந்த இடத்திலும் திருக்குர்ஆன் சம்மந்தப்படுத்தவே இல்லை.

2. விலக்கப்பட்ட கனியைப் பற்றிய இறைவனின் கட்டளையை பைபிள் எடுத்துக் கூறும்போது '' அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்'' (ஆதியாகமம் 2:17) என்று ஆதமிடம் கர்த்தர் கூறியதாகக் குறிப்பிடுகின்றது. ஆனால் இறைக் கட்டளைக்கு மாறு செய்யத் தூண்டிய சர்ப்பமோ ''நீங்கள் நன்மை தீமையை அறிந்து தேவர்களைப்போல இருப்பீர்கள் என்று (ஆதியாகமம் 3:5) கூறியது. அவவாறு விலக்கப்பட்ட கனியை உண்டபோது ஆதம் சாகவில்லை. மாறாக சர்ப்பம் கூறியது போன்று நடந்தது. (பார்க்க. ஆதியாகமம்: 3:6,7 & 3:22)

இறைவன் பொய் கூறி ஆதமை பயமுறுத்தினான் என்றும் பாம்பு ஆதமுக்கு உண்மையை எடுத்துக் கூறியது என்றும் இக்கதை மூலம் விளங்க முடிகின்றது. இவ்வாறு இறைவனின் மகத்துவத்துக்குக் களங்கம் கற்பிக்கும் கதைகள் திருக்குர்ஆனில் இல்லை.

3. நன்மை தீமைகளைப் பகுத்துணரும் அறிவு தரும் கனியைப் புசித்த மனிதனைப் பற்றிய அச்சத்தால் மனிதன் தன்னைப் போல் ஆகாதிருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும் பலவீனமானவனாக இறைவனை பைபிள் காட்டுகின்றது. (ஆதியாகமம் 3:22)

விலக்கப்பட்ட கனியைப் புசித்தன் காரணமாக இறைதன்மை மனிதனிடம் ஊடுருவி விட்டதாக எந்த இடத்திலும் திருக்குர்ஆன் கூறவில்லை. இவ்வாறு இறைவனின் மகத்துவத்துக்குக் களங்கம் ஏற்படுத்தும் இக் கதைகளை விட்டும் திருக்குர்ஆன் பரிசுத்தமானது!

4. விலக்கப்பட்ட கனியை உண்ணுமாறு மனிதனைத் தூண்டியது பாம்பு (சர்ப்பம்) என்று பைபிள் கூறுகின்றது. (ஆதியாகமம் 3:1-5 & 3:13) இதன் காரணமாகவே பாம்பு இறைவனின் சாபத்துக்கு ஆளாகியது என்றும், அச்சாபத்தின் காரணமாகவே அது தன் வயிற்றினால் (ஊர்ந்து) சஞ்சரிக்கிறது என்றும், அதன் காரணமாகவே மனிதனுக்கும் பாம்புக்கும் பகை ஏற்பட்டது என்றும் பைபிள் கூறுகின்றது. (ஆதியாகமம் 2:35, 36)

ஆனால் திருக்குர்ஆனோ மனிதனை வழிகெடுத்து அவனைச் சுவனத்திலிருந்து வெளியேற்றியவன் ஷைத்தான் என்று கூறுகிறது. (அல்குர்ஆன் 2:35, 36) இச்சம்பவத்தைப் பற்றி திருக்குர்ஆன் குறிப்பிட்டுக்காட்டும் எந்த இடத்திலும் பாம்பைப் பற்றிய தகவல் இல்லை.

இறைசாபத்தின் காரயமாகவே பாம்பு வயிற்றினால் ஊர்கின்றது என்பதும் அச்சாபத்தின் காரணமாகவே அது மனிதனால் வெறுக்கப்பட்டது என்பதுவும் உண்மையாயின் இறைசாபத்துக்கு முன் உள்ள பாம்பு எந்த நிலையில் இருந்தது ? கால்களால் நடந்து சென்றதா ? மனிதனால் விரும்பப்பட்டதா? இது குறித்த எந்த விளக்கமும் பைபிளில் இல்லை.

5. விலக்கப்பட்ட கனியை உண்டதோடு அதனை உண்ணத் தூண்டியவள் பெண், இதன் காரணமாக அவள் இறைவனால் சபிக்கப்பட்டு அச்சாபத்தின் காரணமாகவே பெண்ணுக்கு கற்பகால சிரமங்களும் பிரசவ வேதனையும் ஏற்படுகின்றது என்று பைபிள் (ஆதியாகமம் 3:16) கூறுகின்றது. இன்றுவரை தாய்மார்கள் அனுபவித்து வரும் கற்பகால சிரமங்களுக்கும் பிரசவவேதனைக்கும் ஆதிமாதாவின் பாவம் காரணமாம் ? (அப்படியாயின் மனிதனல்லாத இதர ஜீவிகள் அனுபவிக்கும் பிரசவ வேதனைக்கு யார் செய்த பாவம் காரணமாம்?)

தாய்மார்களுக்கு ஏற்படும் பிரசவ வேதனை பாவத்திற்காக வழங்கப்பட்ட தண்டனை என்று திருக்குர்ஆன் கூறவில்லை. மாறாக அதனை ஓர் அருட்கொடையாகவே குறிப்பிடுகின்றது. தாயின் தியாகத்துக்கு எடுத்துக்காட்டாக அச்சம்பவத்தைக் குறிப்பிடுகின்றது. (அல்குர்ஆன் 29:8, 46:15, 31:14) இதன் காரணமாகவே மனிதன் தனது தாய்க்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும் எனவும் கட்டளையிடுகின்றது.

விலக்கப்பட்ட கனியையும் கற்ப காலசிரமங்கள் மற்றும் பிரசவ வேதனையையும் திருக்குர்ஆன் எந்த இடத்திலும் சம்மந்தப்படுத்தவே இல்லை.

6. மனிதனுடைய உழைப்பு, பொருளீட்டல், விவசாயம் போன்றவை எல்லாம் விலக்கப்பட்ட கனியை உண்டதன் காரணமாக ஏற்பட்ட சாபம் என்று பைபிள் (ஆதியாகமம் 3:18, 19) ஆனால் திருக்குர்ஆன் உழைப்பு, பொருளீட்டல் எல்லாம் மனிதனின் திறமையை வெளிப்படுத்தும் அருட்கொடை என்று கூறுகின்றது. (அல்குர்ஆன் 62:10) (இதன் காரணமாகவே குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கி ஒரு ஆண்மகனை கண்ணியப்படுத்துகின்றது (அல்குர்ஆன் 4:34)) மனிதனின் கடின உழைப்பையும் முயற்சியையும் எந்த இடத்திலும் விலக்கப்பட்ட கனியுடன் திருக்குர்ஆன் தொடர்பு படுத்தவில்லை.

7. விலக்கப்பட்ட கனியை உண்ட ஆதமும் ஹவ்வாவும் பாவமன்னிப்புக் கோரியதாகவோ இறைவன் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கியதாகவோ எந்தத் தகவலும் பைபிளில் இல்லை. ஆனால் திருக்குர்ஆன் ஆதி மாதா பிதாக்கள் இருவரின் மனமுருகிய பிரார்த்தனையையும் பாவமன்னிப்புக் கோரலையும்இ அவர்களுக்கு மன்னிப்பு வழங்கிய இறைவனின் மகத்தான கருணையையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார் ; (இன்னும் அவற்றின் முலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும் கருணையாளனும் ஆவான். (அல்குர்ஆன் 2:37)

அதற்கு அவர்கள்; '' எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 7:23)

No comments:

Post a Comment