Digital Time and Date

Welcome Note

Sunday, September 1, 2013

இந்தியன் முஜாஹிதீனுக்குப் பெயர் சூட்டியவர் யார் ?

இந்தியன் முஜாஹிதீனுக்குப் பெயர் சூட்டியவர் யார் ?

இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு ஒரு பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருந்தார்:

மார்க்கண்டேயர் கட்ஜு :

அநேக நேரங்களில் மக்களை பிளவுபடுத்துகிறது ஊடகங்கள். ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் குண்டு வைத்தது இந்தியன் முஜாஹிதின் அல்லது ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல்ஜிஹாத் அமைப்பு என ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பின் பெயரை சேனல்கள் சொல்கின்றன. அதற்கு ஆதாரமாக எஸ்.எம்.எஸ். அல்லது இமெயில் வந்தது என்கிறார்கள்.

எஸ்.எம்.எஸ், இ.மெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு விஷமி கூட அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக தொலைக் காட்சிகளில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரித்து முஸ்லிம்கள் எல்லாருமே குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என ஒரு மதத்தையே ஒட்டு மொத்த கொடூரகாரர்களாக மாதிரி சித்தரிக்கின்றன ஊடகங்கள். எந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.

ஊடகங்கள் இந்த விஷயத்தில் அலட்சியமாகவோ, தகவல் உண்மையா என்பதை சரி பார்க்காமல் பொறுப்பற்ற முறையில் செய்தி வெளியிடுகிறது என்று நான் நினைக்கவில்லை. மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த ஊடகங்கள் வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது."

குண்டு வெடித்த சிறிது நேரத்திலேயே எஸ்.எம்.எஸ். வந்தது என்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக ஊடகங்கள் சித்தரிப்பதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்?"

முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் கூற்றில் உண்மை இல்லாமலில்லை.

தீவிரவாதச் செயல்கள் என்றாலே அதை செய்தவர்கள் முஸ்லிம்கள்தான் என்ற கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன இந்திய ஊடகங்கள். இதில் மிக முனைப்புடன் செயல்படுபவர்களில் ஒருவர் ஹிந்து நாளிதழின் பிரவீன் சுவாமி. இந்தியன் முஜாஹிதீன் என்ற முகவரியில்லாத அமைப்புப் பற்றி எல்லா புள்ளிவிவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர் அவர்.

சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் யாசின் பட்கல் என்பவரைப்பற்றி இந்திய முஜாஹிதீன் அமைப்பின் தலைவர், கமாண்டர், ஃபவுண்டர், கோ ஃபவுண்டர் என பலவித பதவிகளை சூட்டியே அல்லாமல் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதில்லை. பிரவீன் சுவாமியும் யாசின் பட்கலின் சரித்திரத்தை புட்டுப் புட்டு வைக்கும் விதத்தில் நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அப்படியானால் இ.மு. அமைப்பைப் பற்றியும் யாசினுக்கும் அந்த அமைப்பிற்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் பிரவின் சுவாமிக்கு கட்டாயம் தெரிந்திருக்கும்தானே?

பேட்டியின் எழுத்து வடிவம்:

கேள்வி: இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைமையகம் எங்கே இருக்கிறது? அதன் தலைவர் யார்? செயலாளர் யார்? அதன் உள்கட்டமைப்பு எப்படிப் பட்டது? அதன் அமைப்பு விதிகள் என்னென்ன?

பிரவீன் சுவாமி: அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளையும், உரையாடல்கள் மூலம் தெரியவந்த தகவல்களையும் வைத்துப் பார்த்தால் அவர்கள் ஒரு நிறுவன அமைப்பாக எக்காலமும் இருந்ததில்லை என்று தெரிகிறது.

கே: அதன் தலைவர்கள் யாவர்?

பி.சு: அதன் தலைவர்கள் என சில பெயர்கள் சொல்லப் படுகின்றன. நானறிந்தவரையில் (அந்த அமைப்பின் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்காக) தேர்தல் எதுவும் நடத்தப்பட்டிருக்கவில்லை.

கே: அப்படியென்றால் அது ஒரு பெயரும் சில நபர்களும் மட்டும்தானா?

பி.சு: ஆம். மற்றவர்களிலிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டுவதற்காக அவர்கள் இந்தப் பெயரை உபயோகிக்கிறார்கள். ஒரு நல்ல அடையாளம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அக்குழுவினரைக் குறிப்பதற்கு நாம் இந்தப் பெயரை உபயோகிக்கிறோம்.

கே: அவர்கள் இந்தப் பெயரை ஏதாவது ஆவனங்களில் பயன்படுத்தியிருக்கிறார்களா?

பி.சு: பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் செய்தித்தாள் அலுவலகங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் மற்றும் அறிக்கைகளில்...

கே: இவை மட்டும்தான் ஆதாரங்களா?

பி.சு: பல்வேறு ஒப்புதல் வாக்குமூலங்களிலும், நீதிமன்றங்களில் அளிக்கப்பட்ட அறிக்கைகளிலும் கூட.. அதறான விசாரணைகள் இன்னும் நடந்துக் கொண்டிருக்கின்றன.

கே: 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற பெயரைப் பற்றி நான் குறிப்பாகக் கேட்கிறேன். மின்னஞ்சல் தவிர்த்து வேறு எந்த ஆவனங்களிலாவது நீங்கள் இந்தப் பெயரை பார்த்திருக்கிறீர்களா?

பி.சு: யாருடைய ஆவனங்கள்?

கே: உதாரணமாக அறிக்கைகள், பதிப்பிக்கட்ட அமைப்பு விதிகள் போன்றவை..

பி.சு: நான் அறிந்தவரை அமைப்பு விதிகள் என்று எதுவும் இல்லை. ஆனால் மின்னஞ்சல்களில் பல பக்கங்களைக் கொண்ட அறிக்கைகள் இருக்கும். அவற்றில் தாங்கள் ஏன் இந்தக் காரியங்களைச் செய்கிறோம் என்பதை விளக்கமாக விவரித்திருப்பார்கள்.

கே: உதாரணமாக, ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பிற்குப் பிறகு குருஅல்ஹிந்த்ஜெய்ப்பூர் என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்ததே..!

பி.சு: ஆம். அவர்கள் புனைப்பெயர்களால் தங்களை அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள். இது பொதுவாக நடப்பதுதானே?

இந்தப் பேட்டியை கவனமாகப் பார்த்தீர்களென்றால் பிரவீன் சுவாமி கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலம் தெளிவாகப் புலப்படும். அது 'இந்தியன் முஜாஹிதீன் என எந்த அமைப்பும் கிடையாது. போலி முகவரிகளிலிருந்து அனுப்பப்பட்ட சில மின்னஞ்சல்களைத் தவிர்த்து வேறு எந்த ஆவனங்களிலும் 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற இப்பெயர் பயன்படுத்தப் பட்டிருக்கவில்லை. ஒவ்வொரு குண்டு வெடிப்பின்போதும் சில முஸ்லிம்களை அடையாளப் படுத்துவதற்காக பிரவீன் சுவாமி போன்ற ஊடகத்தினர்தான் இப்பெயரை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.'

இப்போது திரு. மார்க்கண்டேய கட்ஜுவின் குற்றச்சாட்டை நினைவுகூர்ந்து பாருங்கள்:

எஸ்.எம்.எஸ், இ.மெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு விஷமி கூட அனுப்பியிருக்கலாம்.

ஊடகங்கள் இந்த விஷயத்தில் அலட்சியமாகவோ, தகவல் உண்மையா என்பதை சரி பார்க்காமல் பொறுப்பற்ற முறையில் செய்தி வெளியிடுகிறது என்று நான் நினைக்கவில்லை. மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த ஊடகங்கள் வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.

நன்றி : இப்னு பஷீர், இந்நேரம்