அணு உலையிலிருந்து மட்டும்தான் மின்சாரம் பெற முடியுமா?
இல்லை. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பல்வேறு மின் தயாரிப்பு முறைகள் இருந்தாலும் நீடித்த சூழலுக்கு உகந்த நீர்நிலை (புனல் மின்சாரம்), சூரியசக்தி, காற்றாலை போன்ற மாற்று வழிகளும் இருக்கின்றன.
அணு உலை மின்சாரம் மலிவானதா? இல்லை.
1. அதிக மூலதனம் தேவை.
2. இயக்கும் செலவு அதிகம்.
3. எரிபொருள் விலை அதிகம்.
4. கழிவுகளைப் பாதுகாக்க அதிக செலவாகும்.
5. திட்டத்தைவிட நடைமுறையில் செலவும் அதிகம் சிக்கல்களும் அதிகம்.
மேற்கூறிய காரணங்கள், அணு உலை அமைக்க வங்கிகள் ஏன் கடன் தரக்கூடாது என்று சிட்டி பேங்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து பெறப்பட்டவையாகும்.
அணு உலைகளிலிருந்து அதிகப்படியான மின்சாரத்தைப் பெற முடிகிறதா?
இல்லை. இந்தியாவின் 40 வருட அணு மீக்தி வரலாற்றில் எந்த ஒரு உலையும் ஒரே ஒருமுறைகூட அதன் முழுமையான மின் உற்பத்தியை எட்டியதில்லை. பலநேரங்களில் மின் உற்பத்தியைவிட உலையை இயக்குவதற்கே அதிக அளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அணு உலைகள் பாதுகாப்பானவைதானே?
இல்லை. உலகில் எந்த அணு உலைக்கும் எந்த ஒரு காப்பீட்டு நிறுவனமும் காப்பீடு வழங்குவதில்லை. அதனால்தான் இந்திய அரசின் அணு உலை விபத்து சட்டங்கள் அணு உலை தொடர்பான சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கின்றன. எனவேதான் குறைந்த அளவு இழப்பீட்டை அளிக்க மட்டுமே அந்த நிறுவனங்கள் உடன்படுகின்றன.
அணு உலைகள் மின்சாரம் தயாரிக்க மட்டும்தானா?
இல்லை. அணு உலைகள் மின்சாரம் தயாரிக்க மட்டுமில்லை, அணு குண்டுகளைத் தயாரிக்கவும்தான். அதனால்தான் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் இயற்றப்படும்போது விஞ்ஞானிகளும் அணு குண்டு ஆதரவாளர்களும்கூட அணு உலைகளை மக்கள் பயன்பாட்டிற்கென்று தனியாகவும் பிரிக்க முடியாது என மறுத்தனர்.
எல்லா தொழில்துறை விபத்துகளும் அணு உலை விபத்துகளும் ஒன்றேதானா?
இல்லை. பேருந்து விபத்தில் சிலர் பலியாகலாம். அது அத்துடன் முடிந்துவிடும். போபால் யூனியன் கார்பைடு ஆலை விஷவாயு விபத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பலியானார்கள். பாதிக்கப்பட்ட பலர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். அந்த ஆலைப்பகுதி 25 ஆண்டுகளுக்குப் பிறகும் மனிதர்கள் பயன்படுத்த முடியாத நிலையில்தான் இருக்கிறது. ஆனால், கல்பாக்கத்திலோ கூடங்குளத்திலோ அணு உலை விபத்து நடந்தால் 50 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் மனிதர்கள் ஒருபோதும் வசிக்க இயலாத நிலை உருவாகும். பலநூறு கிலோமீட்டர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை உடனடியாக உருவாக்கும் கதிரியக்கம் இருந்துகொண்டே இருக்கும். உடனடி உயிர்பலி அதிக எண்ணிக்கையில் இருக்கும்.
No comments:
Post a Comment