Digital Time and Date

Welcome Note

Tuesday, April 3, 2012

சும்மா வருமா சம்பளம். நடிக நடிகைகளின் சம்பளப்பட்டியல்

ஒரேயொரு இரவிலேயே உங்களை உச்சத்துக்குக் கொண்டு செல்லும்; அடுத்த நொடியில் உலகப் பிரபலமாக்கும்; கேமராக்களின் ஃப்ளாஷ் மழையில் நனைய வைக்கும். போகுமிடமெல்லாம் ஆட்டோகிராஃப் போட வைத்து கனவுகளில் மிதக்க வைக்கும்.
காஸ்ட்லியான பி.எம்.டபிள்யூ., ஆடி, ஃபெராரி போன்ற சொகுசு கார்களில் ரவுண்ட்ஸ் அடிக்க வைக்கும். சனிக்கிழமைகள் கொண் டாட்டமாக அமையும். புதிதாக ஒரு பங்களா கட்ட வைக்கும். புகழ், அங்கீகாரம் கூடவே உங்களது வங்கிக் கணக்கில் வருமானம் எகிறும்... இவையெல்லாம் ‘தொட்டதெல்லாம் பொன்னாகும்’ மைதாஸின் விரல்களைப்போல் உங்களை பொன்னாக்கி செழிக்க வைக்கும்.
இதுபோல், திடீரென அறிமுகமாகி சட்டென்று உச்சத்தைத் தொட்ட அல்லது அந்தப் போட்டியில் இருக்கிற தமிழ் சினிமாவின் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்களின் சம்பளம் பற்றிய ஸ்பெஷல் ஸ்டோரிதான் இது...
சூப்பரோ சூப்பர்!
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்களின் சம்பளம் இந்தளவுக்கு கோடிகளில் புரள்வதற்கு வித்திட்டவர்கள் அல்லது முன்னோடிகளாக இருந்தவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாஸன். 1980-களில் ரஜினியும், கமலும் இணைந்து பல படங்களில் நடித்தபோதுகூட அவர்கள் இருவரும் பெரும் சம்பளத்தை வாங்கவில்லை. காரணம், இருவருக்கும் இடையே இருந்த நட்பு, அன்று இருந்த சூழ்நிலை. அப்போது இயக்குநர்களின் கையில் இருந்ததால், இவர்கள் இருவரும் மெகா ஸ்டார்களாக விஸ்வரூபம் எடுப்பதற்கான விதை இந்தக் காலகட்டத்தில்தான் விதைக்கப்பட்டது. இருவரும் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளை இணைந்த கைகளாக இருந்தே எதிர்கொண்டு சமாளித்தார்கள். ஆரம்பத்தில் ரஜினிக்கு பல நல்ல வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தது கமல்தான். இதுபற்றி ரஜினியே தனக்கு நெருங்கிய நட்பு வட்டாரத்தில் சிலாகித்துப் பேசியது உண்டு. இந்த நட்பே அவர்களை இன்னும் உயரத்திற்குக் கொண்டு சென்றது. ‘நாம் இருவரும் இணைந்து நடித்தால், அது நம் இருவருக்குமே நன்றாக இருக்காது. சினிமா வாழ்க்கைப் பயணத்தில் இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டுமானால் இருவரும் ஆரோக்கியமான போட்டிக்குத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று ரஜினியிடம் கமல் கூறியதாகவும் சில செய்திகள் உண்டு. இந்தப் புள்ளியில் இருந்துதான் தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களுக்கான முக்கியத்துவம் ஆரம்பித்தது என்று விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
இருவருக்கும் இருந்த இந்தப் புரிதலே அவர்களை தனி ராஜபாட்டையில் பயணிக்க வைத்தது. இந்தப் போட்டியில் இருவருக்குமான மார்க்கெட் உயர்ந்தது. தொடர் வெற்றிகள் இவர்களது கமர்ஷியல் வேல்யூவை அதிகமாக்கின. இருவரின் சம்பளமும் உயர்ந்தது. 1980-களின் பின்பகுதியில் ஒரு படத்திற்கு 10 லட்சம் சம்பளம் பெறுவது என்பது முக்கியமான சாதனை! தயாரிப்பாளர்கள் சங்கத்தில்கூட 10 லட்சமும் அதற்கு மேலும் சம்பளம் வாங்குபவர்களின் பெயர்களே ‘டாப் 10’ நடிகர்களுக்கான பட்டியலாக முணுமுணுக்கப்பட்டது.
யூத்ஃபுல் ப்ளஸ் பிரமாண்டம்!
1990-களின் ஆரம்பத்தில் மணிரத்னம், பிறகு ஷங்கர் போன்ற படைப்பாளிகளின் வருகை இயக்குநர்களுக்கான புது மார்க்கெட்டையும், நடிகர்களுக்கான புது பரிமாணத்தையும் கொடுத்தன. இவர்களுக்குப் பிறகு வந்த பாலா, அமீர், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, கே.வி.ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் இவர்களது படத்தில் நடித்தால் அந்த நடிகர்களுக்கான இமேஜ் மாறும், அடுத்தகட்டத்திற்குப் போக முடியும் என்று எழுதப்படாத ஒரு புதிய விதி உருவானது. இன்றைய படைப்பாளிகளின் தனித்துவம், அவர்களது புதிய அணுகுமுறை, மேக்கிங் ஸ்டைல் இவையெல்லாமே மெகா பட்ஜெட் படங்களை எடுப்பதற்கும், நடிகர்களின் மார்க்கெட்டை உயர்த்துவதற்கும், சம்பளத்தை ஏற்றுவதற்கும் வசதியாகிவிட்டது.
சில வருடங்களுக்கு முன்புவரை ‘இந்திய சினிமா - ஹிந்தி சினிமா; ஹிந்தி சினிமா - இந்திய சினிமா’ என்றே உலகம் முழுவதும் அறியப்பட்டு வந்தது. இதனால் ஹிந்திப் படங்களுக்கு உலகளாவிய வரவேற்பும், அதற்கான வியாபாரமும் வசூலும் இருந்தது. இதனால் ஹிந்தி நட்சத்திரங்கள் காட்டில் கரன்ஸி மழை கொட்டியது. கால மாற்றத்தில் தமிழ் சினிமாவுக்கும் இப்போது ஒரு தனி அடையாளமும் வரவேற்பும் கிடைத்திருக்கிறது. காரணம், இந்தியாவைத் தவிர உலகமெங்கும் வியாபித்து இருக்கும் தமிழ் மக்களும், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த நம் ரத்த உறவுகளும்தான்.
விண்ணைத் தாண்டி வருமானம்!
முன்பெல்லாம் நடிகர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் இடத்தில் ‘முதலாளி’களான தயாரிப்பாளர்கள் இருந்தார்கள். படம் வெற்றி பெற்றால், அவர்களே மனம் விரும்பி சம்பளம் அதிகம் கொடுத்த காலமும் இருந்தது. இன்று நிலைமை தலைகீழ். ஹிட் கொடுத்தால் அடுத்த படத்திற்கு சாதாரணமாக 20, 30 லட்சம் முதல் 2 கோடி வரை ஏற்றிக் கேட்பது சாதாரணமாகிவிட்டது. இதேபோல், ஒரு நடிகர் ஹிட் கொடுத்துவிட்டால், அவருக்கு மார்க்கெட்டில் போட்டியாக இருக்கும் நடிகர் வாங்கும் சம்பளத்தைவிட 50 லட்சம் முதல் 2 கோடி வரை கூடுதலாக சம்பளம் கேட்பதுதான் இன்றைய ட்ரெண்ட். இது தவிர, சில இளம் நடிகர்கள் தங்களது கைச்செலவுக்காக பாக்கெட் மணியாக சில லட்சங்களை மாதச் சம்பளம்போல கேட்பதும் நடக்கிறது. இந்த பாக்கெட் மணி அவர்களது சம்பளத்தில் அடங்காது என்பதுதான் ஹைலைட்!
இந்த சம்பள ரேஸில் ரஜினியும், கமலும் பெரிய உயரத்தில் இருக்கிறார்கள். இவர்களை அடுத்து அஜித், விஜய் இருவருமே தவிர்க்கவே முடியாத சக்திகள். இதில் விஜய் தனக்கேற்ற கலகலப்பான அதிரடியான கமர்ஷியல் ரூட்டில் பயணிப்பதாலும், ரஜினியைப்போலவே காமெடியிலும் நன்றாக பெர்ஃபார்ம் பண்ணுவதாலும் இவரது மார்க்கெட் இன்றும், இன்னும் பக்காவாக இருக்கிறது. அஜித்தைப் பொறுத்தவரை ‘பாக்ஸ் ஆபீஸ் கிங்’காக இருக்கிறார். இவரது படங்களுக்குக் கிடைக்கும் ஓபனிங் ஒரு மேஜிக்காகவே இருக்கிறது. தனது ரசிகர் மன்றங்களைக் கலைத்த பிறகும் இவரது ‘மங்காத்தா’வுக்கு கிடைத்த ஓபனிங் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அஜித், விஜய் இவர்கள் இருவரும் முன்னிலையில் வரக் காரணம், வேறெதையும் நம்பாமல் தங்களது முகத்தை மட்டுமே நம்பியதுதான். எந்தவிதமான படங்களாக இருந்தாலும் இவர்கள் இருவரும் தங்களது முகங்களை மாற்றிக்கொள்ளவில்லை. ஏற்கெனவே இருக்கும் கமர்ஷியல் ரூட்டில் தங்களது நிலையை தக்கவைத்துக்கொள்ள போராடியது, அவர்களுக்கு இன்று சூப்பர் அந்தஸ்தையும், சம்பளத்தையும் கொடுத்திருக்கிறது.
கமர்ஷியல் ரூட்டிலேயே கொஞ்சம் புதுமை, அதிக மெனக்கெடல் என்பது விக்ரம், சூர்யாவின் பாணி. படத்திற்குப் படம் வித்தியாசம், தோற்றத்திலும் புதுமை என்பதே இவர்களைக் கொண்டாடுவதற்கு முதல் காரணம். சூர்யாவின் பெரிய ப்ளஸ் தெலுங்கு மார்க்கெட்டிலும் கால் பதித்ததுதான். இவரது படங்கள் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது, இவரது சம்பள உயர்வுக்கு முக்கியக் காரணம். இதுவரை நான்கைந்து படங்கள் மட்டுமே நடித்தாலும், சூர்யாவின் தம்பி கார்த்தியும் தெலுங்குப் பக்கம் தெரிந்த நட்சத்திரமாகிவிட்டார். இது கார்த்தியை முன்னணி நடிகர்கள் பட்டியலில் கொண்டு வந்திருக்கிறது.
இன்றைய தலைமுறையில் அடுத்த விஜய், அஜித் என்கிற ’இரட்டை சூப்பர் ஸ்டார் போட்டி’க்கு முட்டி மோதுபவர்கள் சிம்பு, தனுஷ் இருவரும்தான். சிம்பு இயக்கத்தையும் கையிலெடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர... இவரது சம்பளமும் ஏறியது. தனுஷும் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர ஆரம்பித்திருக்கிறார். இவர்களைப்போலவே விஷால், ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா ஆகியோர் சம்பளப் பட்டியலில் முந்திக்கொண்டிருக்கிறார்கள்.
நடிகைகளுக்கு வேண்டும் ‘ஹிட்!’
நடிகர்களின் சம்பளம் கோடிகளில் இருந்தாலும், அவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகளின் சம்பளம் இன்னும் பெரிய புரட்சியை ஏற்படுத்திவிடவில்லை. நடிகைகளைப் பொறுத்தவரை ஹிட்டாகும் கமர்ஷியல் படங்களில் இருந்தாலே போதும் என்ற ஐடியாவில்தான் இருக்கிறார்கள். முன்னணி ஹீரோக்களுடன் கமர்ஷியல் படத்தில் நடித்தால் 60 லட்சம் முதல் ஒண்ணேகால் கோடி வரை மட்டுமே நடிகைகளால் சம்பளத்தை ஏற்ற முடியும். இன்றைய நட்சத்திரங்கள் தங்களது சீனியர்களிடமிருந்து கற்றுக்கொண்டதை, புத்திசாலித்தனமாக கையாள்வதால் மட்டுமே இந்த சம்பளத்தையும், உயரத்தையும் தொட முடிந்திருக்கிறது என்பதே உண்மை. இவர்களது உழைப்பும், அர்ப்பணிப்பும் மிக அதிகமிருப்பதாலேயே ‘கரன்ஸியின் வாசத்தை’ இவ்வளவு அதிகம் முகர்ந்து கொண்டாட முடிகிறது.
நட்சத்திரங்களின் இந்த கவர்ச்சிகரமான சம்பளம் உங்களது புருவங்களை உயர்த்த வைத்தாலும், அவர்கள் தங்களது மன்றங்கள் மூலம் செய்யும் நற்பணிகளும் மதிப்பிடமுடியாதவை. இப்போதும்கூட ‘தானே’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய மாதச் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். அதேபோல், நமது நட்சத்திரங்களும் ஒரு நாள் கால்ஷீட் சம்பளத்தைக் கொடுத்தால், நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் சூப்பர் ஸ்டார்கள்தான்!