Digital Time and Date

Welcome Note

Thursday, April 12, 2012

இந்தியாவை அச்சுறுத்தும் சாலை விபத்துகள் !!!


    




உலகின் மொத்த வாகன எண்ணிக்கையில், ஒரு சதவீதம் மட்டுமே கொண்டுள்ள இந்தியாவில், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையோ 13 சதவீதமாக உள்ளது. இதற்கு, அரசின் மெத்தனப் போக்கும், சாலை விதிகளை வாகன ஓட்டிகள் சரிவர கடைபிடிக்காததும் காரணம்.

இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் ஏற்பட்ட சாலை விபத்துகளில், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இது இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்டதில் உயிரிழந்தவர்களை விட அதிகம் என்பது அதிர்ச்சியான தகவல். இந்தியாவில், தமிழகத்தில் தான் சாலை விபத்துகள் அதிகம் நடக்கின்றன. 2010ம் ஆண்டில், தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,409 பேர். இந்த மாதிரியான விபத்துக்கள் இன்று வரை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது கடந்த ஐந்து வருடங்களாக இங்கு சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் 20 சதவீதம் பேர் முதியவர்கள்.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சிங்கப்பூர், சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்தி, சாலை விபத்துகளை பெருமளவில் குறைத்துள்ளன. ஆனால், இந்தியாவில் சாலை விபத்துகளை தவிர்ப்பதில், தொடர்ந்து மெத்தனப் போக்கே காணப்படுகிறது. இந்தியாவில், செய்தித்தாள்களில், நாள் தவறாமல் சாலை விபத்து தகவல்கள் இடம்பெறுகின்றன. சாலை விபத்துகளில் 10 பேர் பலி, 20 பேர் பலி என்ற செய்திகள் மக்களுக்கு சாதாரணமாகி விட்டன.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக் கொண்டு ஓட்டுவது, அசுர வேகத்தில் வாகனத்தில் செல்ல விரும்புவது போன்றவை விபத்து ஏற்பட முக்கிய காரணங்களாக அமைகிறது. சரக்கு மற்றும் டேங்கர் லாரிகள் குடியிருப்பு நிறைந்த பகுதிகளில், செல்வதும் சாலை விபத்துகளை கணிசமான அளவுக்கு ஏற்படுத்துகிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம். உதாரணமாக, சென்னையில் மட்டும் 2009ம் ஆண்டில் இருந்ததை விட, 2010ல் வாகனங்களின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

இந்தியாவின், சந்தையை புரிந்து கொண்டு தான் பன்னாட்டு கார் நிறுவனங்கள் இங்கு தொழிற்சாலைகளை தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட தங்க நாற்கர சாலைகள் திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பிறகும், சாலை விபத்துகள் அதிகரித்து கொண்டு தான் உள்ளன. வசதியான சாலைகள் வாகன ஓட்டிகளை விரைவாக செல்லத் தூண்டுவதே இதற்கு காரணம். எனவே, சாலை வசதிகளை அமைத்துக் கொடுப்பதில், அரசு கவனம் செலுத்துவதைப் போல, போக்குவரத்து விதிகளை தீவிரமாக கடைபிடிக்க உரிய கண்காணிப்பு மேற்கொள்ளவும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

சாலை விதிகளை மீறுவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழப்பு ஏற்படுத்தியோர் மற்றும் நான்கு அல்லது ஐந்து முறை சாலை விதிகளை மீறுபவர்களது வாகன ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வது போன்ற கடும் நடவடிக்கை எடுத்தால், வாகன விபத்துகளை பெரும் அளவில் குறைக்கலாம். இந்தியாவில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தீவிரப்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகளும் தனியார் பங்களிப்புடன் போக்குவரத்து விதிகளை மிகவும் தீவிரமாக அமல்படுத்தி, மனித உயிர்களை காப்பாற்ற வேண்டும். இது அரசின் முக்கிய கடமையாக கருதி செயல்படுவது அவசியம்.

No comments:

Post a Comment