Digital Time and Date

Welcome Note

Thursday, April 12, 2012

காயிதே மில்லத்’ இஸ்மாயில் சாகிப் அவர்களை பற்றிய தகவல் !!!!!


    
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் சனாப் காயிதேமில்லத் முகம்மது இசுமாயில் சாகிப்இந்தியாவின் பெரும் முசுலிம் தலைவர்களுள் ஒருவர். காயிதேமில்லத் என்ற அரபி சொல்லுக்கு மக்களின் வழிகாட்டி என்று பொருள். திருநெல்வேலி யைச் சார்ந்த ஊராகிய பேட்டையில் 5.6.1896-ல் பிறந்தவர். இவர் மனைவியின் பெயர் சமால் கமீதாபீவி. இவரின் ஒரே மகன் சமால் முகம்மது மியாகான்.

தனது பி. ஏ. பொதுத்தேர்வை எழுதாமல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டுஇந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட துவங்கினார். இந்தியாவில் முசுலிம் மக்களுக்காக 1906-ல் நவாப் சலீம் முல்லாகான் "அகில இந்தியன் யூனியன் முசுலிம்லீக் 'கை ஆரம்பித்தார். அவருக்கு பின்னர் முகமது அலி சின்னா, அதனை நடத்தி வந்தார். பாகிசுதான் பிரிவினைக்குப்பின், இதன் தலைவரானார் காயிதேமில்லத். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

1971 ல் பாகிஸ்தான் இந்தியாவோடு போர் தொடுத்தபோது தனது ஒரேமகனை போர்க்களத்திற்கு அனுப்ப தயார் எனக்கூறி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். நெய்வேலியில் எடுக்கப்படும் நிலக்கரியில் மாநில அரசுக்கு உரியபங்கு கோரி பெற்றுத் தந்தவர்.

இந்திய அரசியல் நிர்ணயஅவையில் உறுப்பினராக இருந்து மாநிலங்களுக்கு அதிக ஆட்சியுரிமை வழங்கப் படவில்லையென்றால் அவை “மினுமினுக்கும் நகராட்சி போன்றவைகளே” என்று நயம்பட உரைத்தவர். இந்திய நாட்டு அரசின் தேசிய மொழியாகும் தகுதி தமிழுக்கு மட்டுமே உண்டு என ஓங்கி முழங்கியவர்.

கேரளா மஞ்சேரி மக்களவை தொகுதியிலிருந்து மூன்றுமுறை தொகுதிக்கு சென்று வாக்கு சேகரிக்காமலே வெற்றி பெற்ற மகத்தான தலைவர். அன்றையசென்னை மாநிலத்தின் சட்டமன்ற பிரதான எதிர்கட்சி தலைவராகவும் சிறப்பாக பணியாற்றினார். 1967ல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை கைப்பற்ற முக்கிய பங்காற்றினார்.

அரசியலில் கவனம் செலுத்தியதோடு, தொழிற்துறையிலும் காயிதெ மில்லத் புகழ் பெற்று விளங்கினார். தோல் பொருட்கள் மற்றும் இறைச்சி ஏற்றுமதி மற்றும் விற்பனையில் கொடிகட்டி பறந்தார். தொழிற்துறையில் புகழ் பெற்றதால் சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், சென்னை வர்த்தகத் துறை, தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில், தொழில் திட்டக்குழு, சுங்கவரிக் கழகம், தென்னிந்திய தொழில் வர்த்தக சபை உட்பட ஏராளமான அமைப்புகளில் உறுப்பினராக விளங்கினார்.

சென்னை மாநில மட்டன் விற்பனையாளர்கள் சங்கத் தலைவராக 1946-ம் ஆண்டு முதல் 1972-ம் ஆண்டு வரை இருந்தார். மத்திய தோல் மற்றும் தோல் பொருட்கள் கமிட்டித் தலைவராகவும், தென்னிந்திய தோல் வியாபாரிகள் சங்க துணைத் தலைவராகவும் இருந்தார். தென்னிந்திய இசுலாமிய கழகத்தின் துணைத் தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழ் வளர்ச்சிக் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தார்.

சிறுபான்மையினரின் நலனில் அக்கறை கொண்டவர். தமிழகத்தில் 14 இசுலாமியக் கல்வி நிறுவனங்களை அமைத்தவர். அடக்கமும் ஒழுக்கமும் நிறைந்த நன்னடத்தையால் அனைத்து தரப்பினராலும் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் எனஅன்புடன் அழைக்கப்பட்டார். இவர் 5-4-1972ல் மரணித்தார். இவரின் மகன் சமால் முகம்மது மியாகான் தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றியவர்.

காயிதே மில்லத்" இஸ்மாயில் சாகிபுக்கு 1972 மார்ச் 25_ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றில் கடுமையாக வலி ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

குடல் புண் (அல்சர்) நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர் யு.முகமது தலைமையில் 15 டாக்டர் கள் கொண்ட குழு சிகிச்சை அளித்தார்கள். 31_ந்தேதி காலை அவர் ரத்த வாந்தி எடுத்தார். கல்லீரலும் சரிவர வேலை செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து உணர்வு இழந்தார். உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. டாக்டர்கள் இரவு பகலாக அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

ஏப்ரல் 4_ந்தேதி சிறுநீரகம் சரிவர இயங்கவில்லை. அதை சீராக்க ஒரு மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. ஆயினும் அவர் உடல் நிலை தேறவில்லை. தொடர்ந்து மோசம் அடைந்தது.அன்றைய தினம் (4_4_1972) இரவு 10 மணி அளவில் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியது. உறவினர்கள்

அவரைச் சுற்றி அமர்ந்து "குர்ஆன்" ஓதினார்கள்.நள்ளிரவு 1_15 மணிக்கு இஸ்மாயில் சாகிப் மரணம் அடைந்தார். உயிர் பிரிந்தது
இஸ்மாயில் சாகிப் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள அவர் வீட்டுக்கு காரில் கொண்டு போகப்பட்டது. மரணம் அடைந்தபோது காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபுக்கு வயது 76.

மறுநாள் (5_ந்தேதி) காலை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வசதியாக ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. கல்லூரியின் கலை அரங்கின் மத்தியில் ஒரு மேடை அமைத்து அதில் இஸ்மாயில் சாகிப் உடல் வைக்கப்பட்டது. உடல், முஸ்லிம் லீக் கொடியால் போர்த்தப்பட்டு இருந்தது. காலையில் இருந்தே மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து, இறுதி மரியாதை செலுத்தினார்கள்.