உலக அதிசியத்தில் இதவும் ஒன்று .பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 7-ம் நூற்றாண்டில் இட்ஸா என்று அழைக்கப்பட்ட வீரர் கூட்டம், வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் நகரம் ஒன்றைக் கைப்பற்றியது. அன்று முதல் அந்த நகரம் சிசென் இட்ஸா என்று வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் அந்த நகரில் ஏராளமான மாளிகைகளையும், கோவில்களையும், நினைவுச் சின்னங்களையும் கட்டினார்கள். மாயர்கள் என வரலாற்றில் குறிக்கப்படும் அந்நகர மக்கள் சிறந்த போர் வீரர்கள் மட்டுமின்றி அறிவில் சிறந்தவர்களாகவும் இருந்தனர். வானில் உள்ள நட்சத்திரங்களை ஆராய்வதற்காக அவர்கள் கட்டியுள்ள ஆய்வகமே இதற்கு சாட்சி. நத்தை வடிவில் உருவாக்கப்பட்ட இந்த ஆய்வகத்தின் அறைகளில் விழும் நிழலை வைத்தே அவர்கள் பல்வேறு வானிலைகளை கணித்தனர்.
வரலாற்றை எழுதி வைக்கும் அரிய பழக்கமும் மாயர்களிடம் இருந்திருக்கிறது. பந்து விளையாட்டுகளிலும் இவர்கள் அதிக ஈடுபாடு காட்டினர். எனவே இதற்கென நீண்ட விசாலமான பல மைதானங்களையும் உருவாக்கியுள்ளனர். அதில் ஒன்றின் நீளம் 545 அடி, அகலம் 232 அடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த மைதானத்தின் உட்புற சுவர்களில் வீரர்கள் பந்து விளையாடுவது போலவும், தோற்ற அணித் தலைவரின் தலை வெட்டப்படுவது போலவும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த நகரின் மையப்பகுதியில் பிரமிட் வடிவில் அமைந்துள்ள குகுல்கன் கோவில் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கிறது. குகுல்கன் எனப்படும் இறக்கை முளைத்த பாம்புதான் மாயர்களின் முக்கிய கடவுள். எனவே அதற்காக இந்த பிரம்மாண்ட கோவிலை உருவாக்கியுள்ளனர். கோட்டை என்றும் அழைக்கப்படும் இந்த கோவிலின் நான்கு புறங்களிலும் உச்சியை நோக்கி படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிக்கட்டுகளின் கைப்பிடி சுவரின் அடிப்பாகம் ராட்ச பாம்பைப் போல உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இதன் நிழல் அருகில் உள்ள சுவரில் விழும் விதத்தில் மிக நேர்த்தியாக, ஆச்சரியப்படும் படி, இந்த கோவிலை வடிவமைத்துள்ளனர்.
சிசென் இட்ஸாவைச் சுற்றி இரண்டு ராட்சத கிணறுகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது பலி கிணறு. இது மாயர்களின் மழைக் கடவுளான சாக்கை (சிலீணீணீநீ) வழிபட்டவர்களின் புனிதக் கிணறு. இந்த கிணற்றில் பானை முதல் விலை உயர்ந்த நவரத்தினங்கள் வரை பல பொருட்களை மக்கள், சாக் தெய்வத்திற்கு படையலாக போட்டு உள்ளனர். பஞ்ச காலங்களில் நரபலியும் கொடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இவை தவிர போர் வீரர்களை நினைவு கூறும் வகையில் ஆயிரம் தூண்களுடன் கோவில், தாடி மனிதன் கோவில், மான் கோவில் என பல கோவில்கள் இங்கு காணப்படுகின்றன.
இவ்வளவு சிறப்பான கட்டிடங்களை உருவாக்கிய மாயர்கள் திடீரென ஒருநாள் இந்த நகரைவிட்டுச் செல்ல முடிவெடுத்தனர். இதற்கான காரணம் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. ஆனால் சிசென் இட்ஸாவை சுற்றியுள்ள குகைகளில் அவர்கள் பயன்படுத்திய பானை உள்பட பல்வேறு அபூர்வ பொருட்கள் இன்னும் அப்படியே உள்ளன. இவை காண்போரை வியப்பில் ஆழ்த்துகின்றன.
No comments:
Post a Comment