Digital Time and Date

Welcome Note

Monday, June 4, 2012

தோல்விகளால் துவண்டு போயிருக்கிறீர்களா உங்களுக்காக இதோ சில உற்சாக டானிக் வரிகள்; Best Quotes

எல்லோருக்கம் வணக்கம், சில தினங்களுக்கு முன்பு பின்னிரவு வேலையில் தூக்கம் வராமல் புத்தகம் ஒன்றை புரட்டிக்கொண்டிருந்த போது அந்த புத்தகத்தில் இடம் பெற்றிருந்த சில நல்ல கருத்துக்கள் என்னை கவர்ந்தது, தோல்விகளால் துவண்டு கவலைகளில் ஆழ்ந்திருக்கும் நம்மில் பலருக்கு அந்தக் கருத்துக்கள் உற்சாக டானிக் வரிகளாய் அமையும் என்ற எனது நம்பிக்கையின் காரணமாக அந்த கருத்துக்களை இங்கே பதிவிடுகிறேன். கருத்துகளுக்கு செல்வோம் வாருங்கள். 

முடியும் வரை முயற்சி செய்.., உன்னால் முடியும் வரை இல்லை. நீ நினைத்தது முடியும் வரை. நீ தோற்கடிக்கப்படும் அந்த நாட்கள் உனக்கு சில அனுபவங்களையும் சுமந்து வருகிறது என்பதை நீ மறக்க வேண்டாம். அந்த அனுபவங்கள்தான் நாம் அடையப்போகும் வெற்றிக்கான படிக்கட்டுகள். தோல்வி தரும் அனுபவ வேதனைகளை ஜீரணிக்க கற்றுக்கொண்டாலே போதும் வெற்றி தானாய் உங்களை தேடி வரும்.

வெட்டியாய் பேசி நேரத்தை வீணாக்கிக்கொண்டிருக்கும் போது சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் கடிகாரத்தை பாருங்கள் அதில் ஓடுவது முள் இல்லை உங்களது வாழ்க்கை என்பதை உங்களால் உணர முடிந்தால் எதிர்காலத்தில் வெற்றிபெற்ற மனிதர்கள் வரிசையில் நீங்களும் ஒருவராய் இருப்பீர்கள்.


பூட்டு தயாரிக்கும் தொழிற்ச்சாலைகளில் பூட்டுகள் மட்டும் தயாரிக்கப்படுவதில்லை அந்த பூட்டுக்களோடு சேர்ந்து சாவிகளும் தயாரிக்கப்படுகின்றன. அதுபோல் கடவுள் ஒருபோதும் நமக்கு பிரச்சனைகளை மட்டும் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்ப்பதில்லை, அந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் சேர்த்தே தருகிறார். பிரச்சனைகளுக்கான தீர்வு என்னும் சாவியை உபயோகப்படுத்துவதும் உபயோகபடுத்தாமல் இருப்பதும் நம்முடைய கைகளில் தான் இருக்கிறது, இதில் இறைவனின் பங்கு என்று எதுவும் இல்லை.

ஒருவரை துன்புறுத்தி மகிழ்ச்சியடைய நினைப்பவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு முயற்சி செய்தாலும் வெற்றிபெற மாட்டார்கள். உதாரணத்திற்கு டாம் அண்ட் ஜெர்ரி நிகழ்ச்சியை எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு தெரிந்து முப்பது வருடமாக அந்த பூனை அந்த எலியை துரத்திக்கொண்டிருக்கிறது. ஒரு முறை கூட அந்த பூனையால் வெற்றிபெற முடிந்தது இல்லை. இது குழந்தைகளுக்கான கதையாக இருக்கலாம் ஆனால் இக்கதையின் நீதி உண்மையில் பெரியவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஆகும்.


வாழ்க்கை என்பது ஒரு நாணயம் போன்றது. ஒரு நாணயத்திற்கு எவ்வாறு பூ.., தலை என்று இருபக்கம் இருக்கிறதோ அதுபோல மனிதர்களின் வாழ்க்கைக்கும் இன்பம் துன்பம் என்ற இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் ஒரே நேரத்தில் நம்மால் பார்க்க இயலாது. அதுபோல வாழ்வில் துன்பம் என்கிற ஒரு பக்கத்தை நாம் பார்த்துக்கொண்டிருக்கும் போது இன்பம் என்கிற இன்னொரு பக்கம் அருகிலேயே நமக்காக காத்துக்கொண்டிருக்கிறது என்கிற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது.

உங்களுடைய கடந்தகால அனுபவங்களிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ளுங்கள், அந்த பாடங்களை அவ்வப்போது நினைத்து பாருங்கள் அவை உங்களுக்கு எதிகாலத்தில் நல்ல வழிகாட்டியாய் அமையும். நடந்து முடிந்த ஒரு விசயத்திற்காக தொடர்ந்து வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பதை தவிருங்கள் ஏனெனில், ஒரு மனிதன் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தால் அந்தக் கவலையே அந்த மனிதனை கரைத்துவிடும். கவலைகளை ஜீரணிக்க கற்றுக்கொண்ட மனிதனது நிகழ்கால வாழ்க்கை மகிழ்ச்சியாய் நகர்ந்து கொண்டிருக்கும்.

கோபம் என்பது மனிதர்களின் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மோசமான வைரஸ் ஆகும். ‘நான் செய்வதும்.., சொல்வதும் தான் சரியானவை, மற்றவர்கள் செய்வது எல்லாம் தவறு' என்கிற மனித எண்ணத்தின் சிறு புள்ளியில் இருந்துதான் பெரும்பாலான கோபங்கள் பிறக்கின்றன. இந்த உலகில் எல்லாமுமே நம்முடைய விருப்பப்படியும் நம்முடைய திட்டத்தின்படியும் நடக்கப்போவதில்லை என்கிற யதார்த்த உண்மையை யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் இருக்கும் திசைப்பக்கம் கூட கோபம் எட்டிப்பார்க்காது. கோபம் இல்லாத மனிதனது வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் தித்திப்பாய் நகர்ந்துகொண்டிருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம் உண்டு. எல்லோரும் அவரவர் விருப்பப்படிதான் இருப்பார்கள். நீங்கள் எக்காரணத்தை முன்னிட்டும் அடுத்தவர் விசயத்தில் தலையிட வேண்டாம். அவர்கள் தவறானவர்களாகக் கூட இருக்கலாம் குறை கூறாதீர்கள். பிறரை குற்றவாளி என்று தீர்மானிக்கும் உரிமையை கடவுள் உங்களுக்கு கொடுக்கவில்லை. நீங்கள் உங்கள் சொந்த வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.

உங்களை விமர்சனம் செய்பவர்களை பற்றி நீங்கள் ஒரு போதும் கவலைப்பட வேண்டாம். அவர்கள் மீது கோபமோ பகைமை உணர்ச்சியோ கொள்ளாதீர்கள். வெளிப்படையாய் கோபத்தை காட்டுவதை விட மோசமாது உள்ளுக்குள்ளேயே கோபத்தை வளர்த்துக்கொள்வது. ஒருவர் மீது நீங்கள் உள்ளுக்குள்ளேயே பகைமையை வளர்த்துக்கொண்டால் உங்களால் சரிவர தூங்க முடியாது. ரத்தம் நஞ்ஞாகும் இதனால் படபடப்பும், ரத்தக்கொதிப்பும் ஏற்படும். பசி பாதியாய் குறையும். சில அற்ப விசயங்களுக்காக உங்களை சுற்றியுள்ளவர்கள் மீது நீங்கள் கோபப்படுவீர்கள். அந்த கோபம் அவர்களிடமிருந்து உங்களை தனிமைப்படுத்திவிடும். ஒவ்வொரு நாளும் மகிழ்ச்யோடும் நிம்மதியோடும் நீங்கள் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டால் நீங்கள் உங்களுக்குள் சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம் ஆகும்.


சமமான தரையில் மண்மேடு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் வேறு ஏதாவது ஒரு இடத்தில் இருந்து மண்ணைத்தோண்டி எடுத்துதான் இன்னொரு இடத்தில் மண்மேட்டை உண்டாக்க முடியும் என்ற உண்மையை புரிந்துகொள்ளுங்கள். பள்ளம் இன்றி மேடு இல்லை, கண்ணீர் இன்றி சந்தோசமும் இல்லை. எனவே துன்பத்தையும் இன்பத்தையும் சமமாக பாவியுங்கள்.

வாழ்கையில் எல்லோரையும் நேசியுங்கள். ஏனென்றால் நல்ல மனிதர்கள் உங்களுக்கு சந்தோசத்தை தரலாம், மோசமான மனிதர்கள் உங்களுக்கு நல்ல அனுபவத்தை தரலாம். அனுபவம் தான் ஒரு மனிதனை முழுமையாக்கும் ஆக இருசாராருமே நமக்கு வேண்டியவர்கள் தான். ஆகையால் எல்லோரையும் நேசியுங்கள். ஒருவரை வெறுப்பது கூட உண்மையாக இருக்கலாம். ஆனால் நேசிப்பது மட்டும் போலியாக இருந்துவிடக்கூடாது.

எக்காரணத்தை முன்னிட்டும் யாரிடமும் விவாதம் செய்யாதீர்கள் அந்த விவாதத்தில் வெற்றிபெற வேண்டும் என்றும் நினைக்காதீர்கள், அந்த வெற்றி உங்களுக்கு எந்தவிதத்திலும் பயன்தராது மாறாக அந்த வெற்றி உங்களது ஆணவத்தை அதிகப்படுத்தி மற்றவரை புண்படுத்தும் நண்பர்களிடேயயே பிரிவை உண்டாக்கும். ஒரு சில நம்பகமான நண்பர்களிடம் மட்டுமே நெருங்கிப்பழகுங்கள், அதே நேரத்தில் எவருடனும் ரொம்பவும் நெருங்கிப்பழக வேண்டாம். அதிக நெருக்கம் சில நேரங்களில் அலச்சியத்தை உண்டாக்கி உணர்ச்சிகளை காயப்படுத்தி மன அமைதியை கெடுத்துவிடும்.


ஒரு ஆப்பிள் பழத்திற்க்குள் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதை நாம் சுலபமாய் சொல்லிவிடமுடியும். ஆனால் ஒவ்வொரு விதைக்குள்ளும் எத்தனை ஆப்பிள் இருக்கிறது என்பதை எவராலும் கணக்கிட்டு கூறிவிட முடியாது. கண்ணுக்கு தெரியாத எதிர்காலத்தை பற்றி நினைத்து கலங்கிக்கொண்டிருக்காமல் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாய் வாழ பழகிக்கொள்ளுங்கள்.

ஒருவன் நல்லவனாய் இருப்பதும் கெட்டவனாக மாறுவதும் அவனவன் விருப்பத்தை சார்ந்தது மட்டுமல்ல அவனை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை பொருத்தும் ஆகும். ஆகவே உங்களை சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை ஓரக்கண்களினால் கவனித்துக்கொண்டே வாருங்கள், ஒரு சில நேரத்தில் அது உங்களை தேடிவரும் பிரச்சனைகளுக்கு தடுப்புச்சுவராய் இருக்கலாம்.

No comments:

Post a Comment