Digital Time and Date

Welcome Note

Thursday, June 21, 2012

அல்குர்ஆனை வாசித்தபோது அதில் நேர்வழி உள்ளது என்பதை அறிந்தேன் - யூசுப் இஸ்லாம் (கேட் ஸ்டீபன்ஸ்)

அல்குர்ஆனை வாசித்தபோது அதில் நேர்வழி உள்ளது என்பதை அறிந்தேன் - யூசுப் இஸ்லாம் (கேட் ஸ்டீபன்ஸ்)

பிரபல பாப் இசைப் பாடகரான முன்னாள் கேட் ஸ்டீபன்ஸ், தாம் இஸ்லாத்தை தழுவிய வரலாற்றை இதோ விவரிக்கிறார்,

நான் இஸ்லாத்தை தழுவிய வரலாற்றை நீங்கள் அனைவரும் அறிந்துள்ள செய்தியின் மூலம் துவக்குகின்றேன். அது யாதெனில்.. எல்லாம் வல்ல இறைவன் இந்த பூமியில் நம்மை வழித்தோன்றல்களாக ஆக்கி நமக்கு தூதர்களை அனுப்பியுள்ளான். குறிப்பாக நமக்கு சீரான பாதையைக் காண்பிப்பதற்காக இறுதித்தூதராக முஹம்மத் (ஸல்) அவர்களைத் தெரிவு செய்துள்ளான். எனவே இதற்காக நன்றி செலுத்த வேண்டும் என்பதை மனிதன் கருத்தில் கொள்ள வேண்டும். இனி வரவிருக்கும் நிரந்தர வாழ்க்கைக்காக தம்மைத் தயார்படுத்துவதற்கு முயற்சி செய்யவும் வேண்டும். ஏனென்றால் இன்றைய சந்தர்ப்பத்தை நழுவ விட்டவன் அதை மீண்டும் பெறவே இயலாது. அல்லாஹ் கூறுகிறான்:

இக்குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலைகுனிந்தவர்களாய், 'எங்கள் இறiவா! நாங்கள் (இப்பொழுது) பார்த்துக் கொண்டோம், கேட்டுக் கொண்டோம். ஆகவே, நீ (உலகுக்கு) எங்களைத் திருப்பி அனுப்பிவை! நாங்கள் நற்கருமங்களையே செய்வோம். நிச்சயமாக நாங்கள் (நம்பிக்கையில்) உறுதியுள்ளவர்களாக ஆகிவிட்டோம்' என்று சொல்லும் போது (நபியே!) நீர் பார்ப்பீராயின் (அவர்களுடைய நிலையை நீர் அறிந்து கொள்வீர்).

மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம். ஆனால் 'நான் நிச்சயமாக நரகத்தை – ஜின்களையும், (தீய) மனிதர்களையும் - ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்' என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது. ஆகவே, உங்களுடைய இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்திருந்ததன் (பலனை) அனுபவியுங்கள், நிச்சயமாக நாமும் எங்களை மறந்து விட்டோம். மேலும் நீங்கள் செய்த (தீ) வினையின் பயனாக என்றென்றும் நிலையான வேதனையை அனுபவியுங்கள்!' (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்). 32:12-14
இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள் 'எங்கள் இறiவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும், ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்வோம்' என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) 'சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார். ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்! ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை' (என்று கூறுவான்). 35:37

சிறு பிராயம்:

தொழில் நுட்பத்துறையில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பகுதியில் நான் பிறந்து வளர்ந்தேன். எனது குடும்பம் கிறிஸ்துவ குடும்பம். குழந்தை பொதுவாக இயல்பான நிலையில்தான் பிறக்கிறது. அதன் குடும்பத்தினர் தாம் அதை நெருப்பு வணங்கியாகவோ யூதனாகவோ கிறிஸ்தவனாகவோ மாற்றுகின்றனர் என நாம் அறிந்திருப்பதைப் போல, எனது தந்தை கிறிஸ்துவர் என்பதால் அவரது பராமரிப்பில் வளர்ந்த நானும் அந்த வழியிலேயே மாறிவிட்டிருந்தேன். அப்போது இறைவன் இருப்பதாகவும் அவனை நாம் ஈஸா (அலை) மூலமாகத்தான் அணுக இயலுமே அல்லாது நேரடியாக தொடர்பு கொள்ளவியலாது. அவர்தாம் கடவுளை அடைவதற்கான வாயில் என்பதாகவும் அறிந்து வைத்திருந்தேன். இந்தக் கருத்தை ஓரளவுக்கு நான் ஏற்றிருந்தாலும் எனது அறிவு முழுமையாக இதை ஏற்றிருக்கவில்லை.

ஈஸா (அலை) அவர்களின் சிலையை நான் உற்று நோக்கினேன். அது ஒரு கல், வாழ்க்கையைப் பற்றி எதுவும் அறியாது. அது போல திரித்துவ கொள்கையும் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. ஆயினும் இந்தக் கோட்பாடுகள் எனது தந்தையின் மதம் சார்ந்தவையாக இருந்ததால் அவரது மரியாதையைக் கருதி அவற்றைப் பற்றிய தர்க்கத்தில் என்னை நான் ஈடுபடுத்தவில்லை.

பிரபல பாப் இசைப்பாடகராக...

நான் கொஞ்சங் கொஞ்சமாக மதக்கோட்பாட்டிலிருந்து தூரமாகி இசை மற்றும் பாடல் துறைக்குத் தாவினேன். ஒரு பிரபல பாடகனாக ஆக வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் இருந்தது. அந்த வேகமான வாழ்க்கையின் அலங்காரங்களும் ரசனைகளும் என்னை ஈர்த்துக் கொண்டன. அதனால் இசையே எனது கடவுளானது. பொதுவாக பணமே எனது குறிக்கோள் என்றானது. ஏனெனில் எனது மாமா ஒருவர் அதிகமான பொருளாதாரத்திற்குச் சொந்தக்காரராக இருந்தார். அவரைப் போலவே நானும் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். மேலும் எனக்கு இந்தச் சிந்தனையை ஊட்டுவதில் என்னைச் சுற்றியிருந்த சமூக அமைப்புகளுக்கும் அதிகப்பங்கு இருந்தது. காரணம் உலகமே சதம் என்றும் அதுவே எல்லாம், அதுவே கடவுள் என்றும் சமூகம் கருதியிருந்தது.

எனவேதான் காசு மட்டுமே குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை நான் உறுதியாக தெரிவு செய்தேன். இந்த உலகம் என்னுடைய ஆசைகளை அடைந்து கொள்ள வேண்டிய களம், என்னைப் பொருத்த வரை இத்தோடு நமது ஆட்டங்கள் முடிந்துவிடும் என்றெல்லாம் நான் கருதியிருந்தேன். இத்துறையில் உலக அளவில் பேசப்படும் பாப் இசை வித்துவான்களே எனக்கு முன்மாதிரிகளாகத் தோன்றினர்.

இவ்வாறாக நான் இவ்வுலக வாழ்க்கையில் எனது சக்தியைப் பிரயோகித்து முழுமையாகவே மூழ்கியிருந்தேன். அதிகமான பாடல்களை நான் வழங்கியுள்ளேன். ஆயினும் தேடப்பட்ட பொருளாதாரத்தை நான் ஆராயும் போது எனது அடி மனதில் மனிதாபிமான ஆசையும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆசையும் உறுத்திக் கொண்டிருந்தன. ஆனாலும் குர்ஆன் கூறுவதைப் போல மனித மனம் வாக்களிப்பதை நிறைவேற்றுவதில்லை. மாறாக அதிகமான பொருளாதாரம் வரும்போதெல்லாம் கூடவே ஆசைகளும் அதிகரித்தே விடுகின்றன.

இவ்வாறாக பத்தொன்பது வயதை நான் கடக்காத கட்டத்திலேயே மாபெரும் வெற்றியை அடைந்தேன். எனது புகைப்படங்களும் என்னைப் பற்றிய செய்திகளும் தகவல் தொடர்புச் சாதனங்களுக்கு வெகுவாகவே தீனி போட்டன. இந்தப் பகட்டான முன்னேற்றம் கால எல்லைகளைக் கடந்து ஆடம்பர வாழக்கைக்கு என்னை இட்டுச் சென்றது. அதன் காரணமாக மதுவிலும் போதையிலும் நான் மூழ்கிப் போயிருந்தேன்.

மருத்துவமனையில் நுழைதல்:

வாழ்க்கையில் முன்னேற்றமும் பொருளாதார வெற்றியும் பிரபலமும் நான் அடைந்து ஏறத்தாழ ஓராண்டு கழிந்திருக்கும் அப்போது என்னைக் காசநோய் பீடித்தது. சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டேன்.

நான் அங்கிருந்த போது எனது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கலானேன். நான் என்ன வெறும் ஜடம் தானா? நான் என்ன செய்தால் இந்த ஜடத்தைச் சிறப்பாக அமைக்கலாம்? என்றெல்லாம் பல வினாக்கள் என்னுள் எழுந்தன. உண்மையில் எனது நிலையைப் பற்றி நான் சிந்திக்க ஆரம்பித்த அந்தக் கட்டம் எனக்கு இறையருளாகவே அமைந்தது. அது எனது கண்களை நான் திறப்பதற்கும் சீரான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கும் இறைவன் வழங்கிய ஒரு சந்தர்ப்பம் என்றே நான் நினைக்கின்றேன்.

நான் ஏன் இந்தப் படுக்கையில் கிடக்க வேண்டும்? என்பது போன்ற பல கேள்விகள் உருவாயின. இவற்றிற்கான விடைகளை நான் தேட ஆரம்பித்தேன். நான் ஏற்றுக் கொண்டிருந்த கோட்பாடுகள் கிழக்காசிய நாடுகளில் அப்போது கோலோச்சிக் கொண்டிருந்தது. எனவே அந்தக் கொள்கைகளைப் பற்றி சிந்திக்கலானேன்.

முதலில் மரணத்தைப் பற்றிய சிந்தனை ஏற்பட்டது. அப்போது தான் ஆன்மாக்கள் ஒரு வாழ்க்கையிலிருந்து இன்னொரு வாழ்க்கைக்கு மாறுகின்றது. இந்த உலக வாழ்க்கையோடு அவற்றின் சகாப்தம் முடிவடைவதில்லை என்பதை அறிந்தேன். அன்றே நான் சீரான பாதையை நோக்கிப் பயணிக்கத் துவங்கி விட்டதை அறிந்தேன்.

இவ்வாறாக ஆன்மீக சிந்தனை பற்றிய அக்கறை என்னைத் தொற்றிக் கொள்ள படிப்படியாக இதய அமைதி எனக்குள் அதிகரித்தது. அதன் விளைவாக நான் வெறும் வெற்றுடம்பு அல்ல என்ற முடிவுக்கு வந்தேன்.

ஒரு நாள் நான் நடந்து சென்று கொண்டிருந்த போது மழை பெய்தது. உடனே நான் மழையில் நனையாமல் இருப்பதற்காக சற்று ஓடினேன். அப்போது ஒரு தத்துவம் எனது நினைவிற்கு வந்தது. அது யாதெனில், 'உடம்பு என்பது ஒரு கழுதையைப் போன்றது, அதைப் பழக்கப்படுத்தினால் தான் அதை அதன் எஜமானன் தனது விருப்பத்திற்கிணங்க பயன்படுத்த இயலும். இல்லையெனில் கழுதை தனது விருப்பத்திற்கிணங்க எஜமானனைப் பயன்படுத்திக் கொள்ளும்.'

அப்படியாயின் சுயமான விருப்பும் வெறுப்புமுள்ள மனிதனாகிய நான் வெறும் ஜடமல்லவே. கிழக்கத்திய கோட்பாடுகளை ஆராயும்போதும் இந்த முடிவே எனக்குத் தென்பட்டது. ஆயினும் கிறிஸ்தவம் எனக்கு முழுமையாகவே பிடிக்காமல் போயிற்று.

நான் குணமடைந்ததும் மீண்டும் இசைத்துறைக்குத் திரும்பினேன். அது எனது புதிய சிந்தனைகளை மழுங்கடிப்பதைப் போல் தோன்றியது. அது பற்றி நான் பாடிய பாடல் வரிகள் என் நினைவுக்கு வருகின்றன:

சுவனத்தையும் நகரத்தையும் படைத்த (இறை)வனை அறிய வேண்டுமே! இந்த உண்மையை நான் படுக்கையில் கிடந்து அறிய இயலுமா, இல்லை, ஒண்டுக் குடிசையில் ஒதுங்கித்தான் புரிய இயலுமா? மற்றவர்களோ ஆடம்பரமான உணவகங்களின் அறைகளில் உழன்று கிடக்கின்றனர். (கவிதையின் கருத்து)

இந்த சந்தர்ப்பத்தில் தான் நான் சரியான பாதையில் இருப்பதாக உணர்ந்தேன். அந்த நேரத்தில் இன்னொரு பாடலையும் நான் பாடினேன். அது கடவுளை அறிவதற்கான வழியைப் பற்றியது.

இந்நிலையில் இசைவுலகில் எனது பிரபலம் அதிகரித்தது. அப்போது நான் மிகவும் சிரமத்திற்குள்ளாயிருந்தேன். காரணம், எனது பாடல்கள் ஒரு பக்கம் பிரபலமாகிக் கொண்டிருக்கும் வேளையில் நானோ உண்மையைத் தேடும் வேட்கையில் மூழ்கியிருந்தேன். அந்த வேளையில் புத்த மதம் சிறந்ததும் உயர்ந்ததுமாக இருக்கும் என்று நம்பியிருந்தேன். ஆனாலும் அதை ஏற்றுக் கொள்ளவோ இசையுலகத்தைக் கைவிடவோ வழிபாடுகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளவோ எனக்குத் தோன்றவில்லை. நானோ உலக வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருந்தேன்.

பிறகு எனது சத்திய வேட்கை, கிரகங்கள் மற்றும் எண்கணித ஆய்வுகளின் வாயிலாக தொடர்ந்தது. அவைகளிலும் எனக்குச் சரியான நம்பிக்கை வரவில்லை. அப்போது இஸ்லாத்தைப் பற்றியும் நான் வெகுவாக அறிந்திருக்கவில்லை.

ஒரு நாள் நான் ஆச்சர்ய மிக்க வகையில் இஸ்லாத்தைப் பற்றி அறிய முடிந்தது. அதாவது எனது சகோதரர் பைத்துல் முகத்தஸ் சென்று விட்டுத் திரும்பினார். அப்போது அவருடைய நடையுடை பாவனைகள் சற்றே வித்தியாசமாக இருந்தன.

குர்ஆனோடு நான்:

பைத்துல் முகத்தஸிலிருந்து எனது சகோதரர் குர்ஆன் மொழிபெயர்ப்பு ஒன்றைக் கொண்டு வந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தாலும் அந்த வேதத்தைப் பற்றிய அலாதியான எதிர்பார்ப்பும் அது எனக்கு மகிழ்ச்சியளிக்கும் என்ற நம்பிக்கையும் நான் இழந்து போனதை அதில் கண்டெடுப்பேன் என்ற உறுதியும் அவரிடம் இருந்தன.

அந்த வேதத்தை நான் வாசித்த போது அதில் நேர்வழி உள்ளது என்பதை அறிந்தேன். அது நாம் படைக்கப்பட்டதன் நோக்கத்தையும் எனது வாழ்க்கையின் இலட்சியத்தையும் நான் எங்கிருந்து வந்தேன் என்ற விபரத்தையும் தெளிவுபடுத்தியது. அதே வேளையில் நான் இதுதான் சத்திய மார்க்கம் என்று உணர்ந்தேன். இம் மார்க்கம் மேற்கத்தியவர்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது, நடைமுறை சாத்தியமானது, வயதாகிவிட்ட நிலையில் ஆசைகள் அடங்கி விட்ட போது மேற்கொள்ள வேண்டுமெனக் கூறப்படும் மற்ற சித்தாந்தங்களைப் போன்றதல்ல.

ஆன்மீகத்திற்கும் உடலுக்குமிடையே உள்ள தொடர்பைக் கண்டு நான் வியந்தேன். இவ்விரண்டும் பிரியாது, இணைந்திருக்கும் என்பதையும் உணர்ந்தேன். எனவே உலக வாழ்க்கையை வெறுக்காமல் காடு, மலைகளிடையே போய் தங்காமலேயே ஆன்மீகத்தை அனுபவிக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தேன்.

அத்தோடு நிச்சயமாக நாம் இறைவனின் நாட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டியவர்கள் என்பதற்காகவும் அதுவே வானவர்களின் அந்தஸ்த்திற்கு நம்மை உயர்த்தக்கூடிய ஒரே வழி என்பதாகவும் உறுதி கொண்டேன். அப்போது தான் இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்குள் வலுப்பெற்றது.

அனைத்துமே அல்லாஹ்வின் படைப்புகளும் அவனது தயாரிப்புகளும் தான். அவனைச் சடைவோ உறக்கமோ பீடிப்பதில்லை என்பதை முதலாவதாக அறிந்தேன். அப்போது தான் நான் எனது தற்பெருமையிலிருந்து இறங்கலானேன். ஏனெனில் நான் என்னைப் படைத்தது யார்? என்பதையும் நான் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான எதார்த்தமான காரணம் யாது? என்பதையும் அறிந்து கொண்டேன். அது, இறைவனுடைய சட்டங்களை அறிந்து கொண்டு அவற்றிற்கு முழுமையாகக் கட்டுப்படுவதாகும். அதுவே இஸ்லாம் என்று அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நான் ஒரு முஸ்லிம் என்பதை ஆழமாக உணர்ந்து கொண்டேன்.

இறைவன் பல தூதர்களைப் பலதரப்பட்ட சமூகங்களுக்கு அனுப்பி ஒரே தூதுச் செய்தியைத்தான் அருளியிருக்கிறான் என்பதைத் திருக்குர்ஆனைப் படிக்கும் போது அறிந்து கொண்டேன். ஆனாலும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் கருத்து வேற்றுமை கொண்டதற்கு என்ன காரணம்? ஆம், யூதர்கள் ஈஸா (அலை) அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் அவர்கள் ஈஸாவின் கூற்றை மாற்றியவர்கள். ஏன், கிறிஸ்தவர்களும் கூட ஈஸா (அலை) அவர்களின் தூதுத்துவத்தைப் புரிந்து கொள்ள வில்லை. எனவே தான் ஈஸாவை இறைவனின் குமாரர் எனக் கருதினர் - என்றெல்லாம் எனக்குத் தெளிவானது.

குர்ஆனைப் புரட்டும் போதெல்லாம் அது கூறக்கூடிய காரணங்களைப் பார்க்கும் போது அவை அறிவுப்பூர்வமானவையாகவும் தர்க்க ரீதியானவையாகவும் உள்ளன என்பதையறியலாம்.

மென்மேலும் நான் குர்ஆனைப் படித்து தொழுகை, ஜகாத், நடைமுறை ஒழுக்கம் ஆகியவற்றைப் பற்றி அதிகமதிகமாக அறிந்து கொண்டேன். அப்போதும் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வில்லை. ஆனாலும் குர்ஆன்தான் நான் தொலைத்த பொக்கிஷம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

இஸ்லாத்தை தழுவுதல்:

எனது சகோதரனைப் போலவே நானும் பைத்துல் முகத்தஸ் சென்று வர முடிவு செய்தேன். அங்கு சென்று பள்ளியில் அமர்ந்திருக்கும் போது ஒருவர் வந்து என்னிடம் என்ன வேண்டும் எனக் கேட்டார். நான் ஒரு முஸ்லிம் என்றேன். எனது பெயரைக் கேட்டார். நான் ஸ்டீபன்ஸ் எனக் கூறியதும் அவர் திகைத்துப் போனார். பிறகு நான் தொழுகையாளிகளுடன் வரிசையில் நின்று என்னால் இயன்ற வரை சில அசைவுகளை மேற்கொண்டு தொழுதேன்.

நான் லண்டன் திரும்பிய போது நஃபீஸா என்றொரு இஸ்லாமிய சகோதரியைச் சந்தித்த போது நான் இஸ்லாத்தைத் தழுவ விரும்புவதாகக் கூறினேன். அப்போதவர், நியூரீஜன்ட் பள்ளிவாசலுக்குச் செல்லுமாறு வழி காட்டினார்.

இது நான் குர்ஆனைப் படிக்க ஆரம்பித்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1977 ஆம் ஆண்டு நடந்தது. அந்த நேரத்தில் நான் எனது பெருமையையும் ஆணவத்தையும் சாத்தானிய சேட்டைகளையும் விட்டொழித்து விட்டு ஒரேயொரு பாதையை நோக்கி முகம் திருப்ப வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

ஒரு வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பள்ளியில் உள்ள இமாமை – தலைவரை நெருங்கிப் போய் அவர் முன்னிலையில் எனது முடிவை அறிவித்தேன். ஷஹாதத்தை மொழிந்தேன். பொருளாதாரமும் பிரபலமும் பெற்றுத் தராத நேர்வழியை எனக்குக் குர்ஆன் தான் கற்றுத் தந்தது. இன்று கிறிஸ்துவம் போன்ற பிற மதங்களைப் போலல்லாது அல்லாஹ்வோடு நேரடித் தொடர்பு கொள்ளக்கூடிய அளவுக்கு நான் இருக்கின்றேன்.

ஒரு முறை ஒரு இந்துப் பெண்மணி, 'இந்து மதக்கோட்பாடுகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. நாங்கள் ஒரே கடவுளை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் இந்த விக்கிரகங்களை மன ஓர்மைக்காகவே பயன்படுத்துகின்றோம்' என்று கூறினார். அவருடைய கூற்றிலிருந்து, இறைவனை நெருங்குவதற்கு இடைத் தரகர்கள் தேவைப்படுகின்றனர் என்று விளங்க முடிகின்றது. ஆனால் இஸ்லாமோ இவ்வாறான எல்லா தடைகளையும் தகர்த்து எறிந்து விட்டது. விசுவாசிகளையும் மற்றவர்களையும் பிரித்தறியக் கூடிய ஒரே அடையாளம் தொழுகைதான். அதுவே ஆத்ம சுத்திக்கு வழி.

இறுதியாக,

எனது காரியங்கள் யாவும் இறைவனுடைய திருப்திக்காகவே அமைய வேண்டும் என நான் நாடுகின்றேன். நான் இஸ்லாத்தைத் தழுவிய இந்த வரலாற்றுத் தகவல் படிப்போருக்கு படிப்பினையாக அமைய வேண்டும் என அல்லாஹ்வை வேண்டுகிறேன். நான் இஸ்லாத்தை தழுவும் முன்பு எந்த முஸ்லிமையும் சந்தித்ததுமில்லை வேறு யார் மூலமாகவும் நான் பாதிப்பு அடையவுமில்லை.

நான் குர்ஆனை படிக்கும் போது கவனித்தேன். மனிதனில் முழுமையானவர் என்று எவருமிலர். ஆனால் இஸ்லாமிய மார்க்கமோ பரிபூரணமானது. எனவே திருமறை குர்ஆனையும் திருநபி வழியையும் நாம் மேற்கொள்ளும் போது இவ்வுலக வாழ்க்கையில் நாம் வெற்றியடையலாம்.

நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை நாம் பின்பற்றுவதற்கு அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!

No comments:

Post a Comment