Digital Time and Date

Welcome Note

Saturday, June 30, 2012

சீனாவின் சோகம் மஞ்சள் ஆறு !! ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்து இருக்கிறார்கள் !!!


சீனாவின் சோகம் மஞ்சள் ஆறு !! ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்து இருக்கிறார்கள் !!!

மஞ்சள் ஆறு (சீன மொழி: 黃河, ஹுவாங் ஹ) சீனாவின் 2-வது நீளமானதும் உலகின் 6-வது நீளமானதும் ஆகும். மேற்கு சீனாவின் சிங்ஹாய் (Qinghai) மாகாணத்திலுள்ள பாயன் ஹர் மலைத்தொடரில் தோன்றி 9மாகாணங்கள் வழியாக 5,464 கிமீ (3,398 மைல்) தொலைவு ஓடி பொகாய் கடலில் கலக்கிறது. மஞ்சள் ஆற்றுப் படுகை கிழமேற்காக 1900 கிமீ (1,180 மைல்) மற்றும் வடக்கு தெற்காக 1100 கிமீ (684 மைல்) வரை பரவியுள்ளது. இதன் படுகையின் மொத்தப்பரப்பு 742,443 சதுரகிமீ (290,520 சதுர மைல்).

மஞ்சள் ஆறு சீன நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. இங்கேயே வட சீன நாகரிகம் தோன்றியது. இவ்வாற்றுப்பகுதி பழங்காலத்தில் மற்ற பகுதிகளை விட மிகவும் செழிப்பாக வளம் மிகுந்து இருந்தது. ஆனால் அடிக்கடி இவ்வாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக சீனாவின் துயரம்என்ற பெயர் இதற்கு ஏற்பட்டது

பழங்கால சீன இலக்கியங்களில் மஞ்சள் ஆறானது ஹெ (He (河)) என்று குறிக்கப்படுகிறது. அதற்கு தற்போதையசீன மொழியில் ஆறு என்று பொருள். (பழங்காலத்தில் ஆறு என்பதை குறிக்க 川 மற்றும் 水 என்ற வடிவத்தை பயன்படுத்தினர்). மஞ்சள் ஆறு என்ற பதம் முதலில் மேற்கு ஹான் வம்சத்தில் (206 BC–AD 9)) உருவான ஹானின் புத்தகம் என்பதில் குறிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் ஆறு சில முறை சேற்று நீரோட்டம் என கவித்துவமாக குறிப்பிடப்படுவதுண்டு. 'மஞ்சள் ஆறு தெளிவாக ஒடும் போது' என்று சீனத்தில் சொலவடை நடக்க இயலாத செயல்கள் குறித்து சொல்லப்படுவதுண்டு.
பெயர் காரணம்

இவ்வாற்று நீர் மஞ்சளாக இருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. மஞ்சள் ஆற்றின் மேல் மற்றும் நடு பகுதியானது காற்றடு வண்டல் மேட்டு நிலப்பகுதியை கடந்து வருகிறது. இந்த காற்றடு வண்டலே மஞ்சள் நிறத்திற்கு காரணமாகும்.

மஞ்சள் ஆற்று பண்பாடு

சீன நாகரிகம் மஞ்சள் ஆற்றும் படுகையிலேயே தோன்றியதாக நம்பப்படுகிறது. இது 'தாய் ஆறு' எனவும் 'சீன நாகரிகத்தின் தொட்டில்' எனவும் சீனர்களால் குறிப்பிடப்படுகிறது. நெடிய சீன வரலாற்றில் மஞ்சள் ஆறு சீனாவின் வரம் மற்றும் சாபம் என முரண்பாடாக கருதப்பட்டுள்ளது. எனவே இதற்கு சீனாவின் பெருமை மற்றும் சீனாவின் துயரம் என முரண்பாடான பட்டப்பெயர்கள் உண்டு.

மஞ்சள் ஆறு ஏற்படுத்திய சேதம்

ஆற்றின் நிறம் மஞ்சளாக இருக்க காரணம் இது நன்கு தூளான சுண்ணாம்பு வண்டலை காற்றடு வண்டல் மேட்டு நிலத்தில் இருந்து தன் ஓட்டத்தில் கொணர்வதே ஆகும். நூற்றாண்டுகளாக படியும் வண்டல் மற்றும் கரையினால் ஆற்றில் வெள்ளம் ஏற்படுகிறது. உலகின் மோசமான வெள்ளப்பெருக்குகளை ஏற்படுத்தியது மஞ்சள் ஆறாகும். 1887 மற்றும் 1931ம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்தனர்.

1938ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி இரண்டாம் சீன ஜப்பானிய போரின் போது சியங் கை செக் (Chiang Kai-Shek)தலைமையிலான சீன தேசிய துருப்புகள் ஆற்றின் கரைகளை உடைத்து பெரிய வெள்ளத்தை உருவாக்கினர்.வெள்ளம் உருவாக்கியதின் நோக்கம் ஜப்பானிய துருப்புகளின் முன்னேற்றத்தை தடுப்பதாகும். இந்த வெள்ளத்தில் 54,000 சதர கிமீ பரப்பு மூழ்கியது மேலும் 500,000–900,000 வரையான உயிர்கள் பலியான .ஜப்பானிய தரப்பில் பலியான துருப்புகளின் விபரம் தெரியவில்லை. இந்த வெள்ளம் ஜப்பானி துருப்புகள் ஜின்ஜோகு (Zhengzhou) நகரத்தை கைப்பற்றுவதை தடுத்தாலும் அவர்கள் அப்போதய சீனாவின் தலைநகரான வுஹேனை (Wuhan) கைப்பற்றுவதை தடுக்க முடியவில்லை

தனிச் சிறப்புப் பண்பு

மஞ்சள் ஆறு 1.6 மில்லியன் டன் வண்டலை ஓர் ஆண்டுக்கு காற்றடு வண்டல் மேட்டுநிலத்திலிருந்து கொணர்கிறது.
1972ல் முதலில் உலர்ந்தது பின் அடிக்கடி கீழ்பகுதி ஆறு உலர்ந்தது குறிப்பாக ஜினான் (Jinan) முதல் கடலை அடையும் பகுதி உலர்ந்தது. 1997ம் ஆண்டில் 226 நாட்களுக்கு உலர்ந்து காணப்பட்டது. குறைந்த நீர் வரத்துக்கு காரணம் அதிகமான விவசாய பயன்பாட்டுக்கு நீர் எடுக்கப்படுவதே ஆகும். 1950ம் ஆண்டில் எடுக்கப்பட்டதை விட தற்போது ஐந்து மடங்கு நீர் அதிகமாக எடுக்கப்படுகிறது. 1999ம் ஆண்டு கணக்கின் படி இதன் நீரை ஆதாரமாக கொண்டு 140மில்லியன் மக்களும் 74,000 சதுர கிமீ(48,572 சதுர மைல்) நிலமும் பயன்பெறுகின்றன. ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மழைக்காலத்தில் இதில் நீர் வரத்து அதிகமாக இருக்கும். அக்காலத்தில் ஓர் ஆண்டில் செல்லும் அளவில் 60% அளவு நீர் வரத்து இருக்கும். மார்ச் மற்றும் ஜூன் மாதங்களிலேயே விவசாயத்திற்கு அதிக அளவிலான நீர் தேவைப்படும். வெள்ளக்கட்டுப்பாடு, மின்சார உற்பத்தி மற்றும் தேவையான காலத்தில் நீரை பயன்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக இதன் குறுக்கில் பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. அதிகளவில் சேரும் வண்டலின் காரணமாக இவற்றின் ஆயுள் காலம் மட்டுப்படுத்தப்பட்டதாகும். முன்மொழியப்பட்ட தெற்கு-வடக்கு நீர் மாற்றல் திட்டப்பணியின் படி யாங்சே ஆற்றின் நீரானது பல திட்டங்கள் மூலம் மஞ்சள் ஆற்றுக்கு திருப்பிவிட திட்டமாகியுள்ளது. மேற்கில் இரண்டு ஆறுகளும் அருகில் உள்ள பகுதி, ஹான் (Han)ஆற்றின் மேல் பகுதி , பெரும் கால்வாய் என மூன்று திட்டங்கள் இதில் உள்ளன.

மஞ்சள் ஆற்றின் மிக அதிகளவிலான வண்டல் குறைவான நீர் வரத்து உள்ள காலங்களில் ஆற்றின் அடியில் படிகிறது. இதன் காரணமாக ஆற்றின் உயரம் அதிகரிக்கிறது. மிக அதிக நீர்வரத்து உள்ள காலங்களில் வெள்ளம் உருவாகி அவை ஆற்றின் கரையை உடைத்து அருகிலுள்ள நிலங்களில் பாய்கிறது. மேலும் வெள்ளம் வடிந்த பின்பும் ஆற்றின் அடி உயர்ந்து இருப்பதால் ஆறானது பழைய பாதைக்கு திரும்பாமல் வேறு பாதையை தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. தற்காலத்தில் கரையின் பலத்தை மேம்படுத்தி வெள்ளத்தை கட்டுப்படுத்த முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன.
மஞ்சள் ஆற்றின் கழிமுக பரப்பு 8,000 சதுர கி.மீ(3,090 சதுர மைல்). எனினும் 1996ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் இது குறைந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு மண் அரிப்பே முதன்மையான காரணமாக கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment