Digital Time and Date

Welcome Note

Monday, July 23, 2012

மனித உடல் உறுப்புகளின் சந்தை!

மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, ஏழை நாடுகளின் மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது The Red Market

Red Market

The Red Market 
நல்ல உடல் வளத்துடன் இருக்கும் நான் ஒரு கோடி ரூபாய்க்கு விலை போவேன் என்கிறார் “The Red Market”  புத்தகத்தின் ஆசிரியர் ஸ்கார்ட் கார்னி.  அவர் அமெரிக்கக் குடிமகனாக இருப்பதால் தன் உடல் பாகங்களுக்கான உண்மையான சந்தை விலையைச் சொல்கிறார் போலும். ஒருவேளை அவரே இந்தியா மாதிரியான ஏழை நாடுகளில் வாழ்ந்தால் இதில் 100ல் ஒரு பங்கு விலைக்குக் கூட அவரது உடல் பாகங்கள் விற்காது என்ற உண்மையை அவர் எழுதியுள்ள புத்தகமான “The Red Market”  ஐ படித்தால் எவராலும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
உலக அளவில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்குமளவு மருத்துவத் துறை முன்னேறி இருக்கின்றது. ஆனால் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மாற்று உறுப்புகள் வேண்டுமே? அது தான் இன்றைய விற்பனைப் பொருள். சந்தையில் பல பில்லியன்கள் இலாபம் தரும் நல்ல சரக்கு. உலகம் முழுவதும் மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வாழும் ஏழை மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் இதயம் இல்லா பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது “”The Red Market”  .
மாற்று உறுப்புகளை யார் விற்பார்கள்? ஏழைகள் தான். ’அமெரிக்காவில் உள்ள ஒரு பணக்காரர் தன் பழுதடைந்த உறுப்புக்கு மாற்று வேண்டும் என்று விளம்பரம் செய்தால் அமெரிக்காவில் இருக்கும் ஒரு ஏழையிடம் இருந்தா அது கிடைத்து விடப் போகிறது? மிக எளிதாகவும், சட்டப்படியும் தெரியும் இந்த வியாபாரத்தின் “சிவப்புப் பக்கங்களை (இது உடல் உறுப்பு சார்ந்த ரத்தமும், தசையுமான கதை என்பதால் சிவப்புச் சந்தை என்று புத்தகத்திற்கு பெயரிடப்பட்டிருக்கிறது) தோலுரித்துக் காட்டுகிறார் அமெரிக்கப் பத்திரிகையாளாரான ஸ்கார்ட் கார்னி.
உலகம் முழுவதும் பல பணக்கார நாடுகளின் உடற் தேவைகளை அதாவது ரத்தம் முதல் எலும்பு, தசை, கிட்னி, கண், பெண்ணின் கரு முட்டை, தலைமுடி வரை தேவைப்படும் அனைத்தையும் ஈடு செய்வது மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் தான், குறிப்பாக இந்தியா. அதோடு இலவசச் சேவையாக பல பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு சோதனை எலிகளாகவும் இருக்கிறார்கள் இந்திய மக்கள். ஏன்?
’தேவைப்படுபவர் வாங்குகிறார், இருப்பவர் விற்கிறார்’ என்ற சராசரி சந்தைப் பொருளாக நம் உடல் உறுப்புக்களைப் பார்க்க முடியாது. உயிருக்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பு உடல் உறுப்புகளுக்கும் கொடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு நாட்டின் காகிதச் சட்டமும் இந்த உடல் உறுப்பு தானத்தை மிக உன்னதமாகக் கருதி,  பாதுகாப்பாகவும், சட்டப்பூர்வமாகவும் தானம் செய்ய மக்களை அனுமதிக்கின்றது.

உடல் உறுப்புகளின் உலக விலைப்பட்டியல் மற்றும் அதை பெறும் வழிமுறை உடல் உறுப்புகளின் உலக விலைப்பட்டியல் மற்றும் அதை பெறும் வழிமுறை
படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்
அல்லது ரைட் கிளிக் செய்து சேவ் செய்யவும்
ஆனால் ஸ்கார்ட் கார்னி இந்தப் புத்தகத்தினூடே  பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, அந்தந்த  நாடுகளில் உடல் உறுப்பு சம்பந்தமான திருட்டு, விற்பனை, அதில் கொள்ளை இலாபம் பார்க்கும் ஏஜெண்டுகள், கண்டுகொள்ளாமல் விடும் அரசுகள் என சகல கருப்புப் பக்கங்களையும் போட்டு உடைக்கிறார்.
பணத்தின் முன் ஒரு ஏழையின் உடல் என்பது ரத்தமும் தசையுமான விற்பனைப் பண்டம். எப்படி? கொஞ்சம் இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டு மேலே தொடருங்கள்.

எலும்புத் தொழிற்சாலை:

திருப்பதி திருப்பதி பக்தர்களின் காணிக்கையான தலைமுடி. இவை அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதியாகிறது
அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயிலத் தேவைப்படும் மனித எலும்பு மாதிரிகள் முழுக்கவும் இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் எலும்பு மாதிரிகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அதை எப்படிச் செய்கின்றது?
முதலில் கம்பெனியில் இருக்கும் 4 தொழிலாளிகள் நோட்டம் விட்டு தங்கள் ஊரைச் சுற்றியுள்ள சுடுகாடுகளில் பிணங்கள் வருகிறதா எனத் தெரிந்து கொள்வார்கள். புதைக்கப்பட்ட பிணம் என்றால் அப்படியே அலேக், எரிக்கப்படும் பிணம் என்றால் சொந்தக்காரர்கள் திரும்பிப் பார்க்காமல் சென்ற பின், வெட்டியானிடம் பேசி வைத்துப் பாதி எரியும் போதே தூக்கி விடுவார்கள்.
தூக்கிய பிணத்திலிருந்து பதப்படுத்தி எலும்புகளை மட்டும் எடுப்பார்கள். அந்த பதப்படுத்தும் முறை கொடூரமாக இருக்கும். பின்பு எலும்புகளை சுத்தமாக பாலிஷ் செய்து பேக்கிங் செய்து விடுவார்கள். ஆன்மாவுக்கு சொர்க்கமோ நரகமோ, அடுத்த பிறவியோ, என்ன கருமமோ, யாருக்குத் தெரியும்? உயிர் கடவுளுக்கு, உடல் அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்கு.
மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும், புர்பஸ்தலி  எனும் ஊரில் உள்ள  “யங் ப்ரதர்ஸ் (Young Brothers)” என்ற  ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தும் முக்தி பிஸ்வாஸுக்கு குடும்பத் தொழில் இது தான். அந்த யங் ப்ரதர்ஸ் நிறுவனம் என்பது ஒரு எலும்புத் தொழிற்சாலை. 150 ஆண்டு காலப் பாரம்பரியம் உடையது. கொள்ளுத் தாத்தாவுக்குத் தாத்தா காலத்தில் இருந்து இப்பொழுது முக்தி பிஸ்வாஸின் மகன் வரை செய்யும் ஒரே குடும்பத் தொழில். நல்ல இலாபம். அவர்களின் கம்பெனியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள எலும்புகளின்  மதிப்பு மாத்திரம் 70,000 அமெரிக்க டாலர்கள்.
ஏன் அமெரிக்காவில் கிடைக்காத எலும்புகளா அல்லது அங்கு சாகாத மக்களா? என்று ஒரு கேள்வி எழும். நல்ல கேள்வி! முன்னர் அமெரிக்கா, இங்கிலாந்து முழுவதும் கூட பிணத்திருடிகள் (Grave Robbers) உண்டு.  அவர்கள் பிணத்தைத் திருடிப் போனபிறகு அதனை மீட்க பிணைப்பணம் கேட்பார்கள். இது போல் சார்லி சாப்ளினின் பிணத்தையும் திருடி, அதனை  மீட்ட கதையெல்லாம் கூட உண்டு. பின்பு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கடுமையான சட்டங்கள் வந்து விட்டன. அங்கு உடல் உறுப்பு சம்பந்தப்பட்ட வியாபாரம் என்றால் ’சட்டம் தன் கடமையைச் செய்யும்’!
அமெரிக்காவில் தான் இந்தச் சட்டம் கடுமையானது, அதே அமெரிக்க அரசு  இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் மனித உறுப்புகளைக்  கண்டுகொள்வதில்லை.  ஒரு பக்கம், ’ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்யும் தொண்டு’ என்று சால்ஜாப்பு. இன்னொரு பக்கம், பணத்தின் மூலம்  சட்டத்தை வளைத்து விடுவது. இந்த எலும்புத் தொழிற்சாலைகள் நேர்த்தியான கார்ப்பரேட்டுகளாக இயங்குகின்றன.
வாடகைத்தாய்கள் குஜராத்தில் ஒரு வாடகைத்தாய் நிலையம். ஒன்பது மாதங்களும் இவர்களை கைதி போல பாதுகாக்கின்றனர். வெளிநாட்டினர் தரும் 14,000 டாலர்களில் இவர்களுக்கு 4000 டாலர் வருமானம் கிடைக்கிறது
மூன்றாம் உலக நாடுகள், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் இந்த உடல் உறுப்புச் சந்தையான சிவப்புச் சந்தை பல பில்லியன் டாலர்கள் புழங்குகின்ற ஒரு துறை. சட்டப்படி இதைச் செய்தால் அதிக செலவு பிடிக்கும். அப்படியே சட்டத்துக்குப் புறம்பாகச் செய்தால் நல்ல கமிஷன் கிடைக்கும். கிட்னி  சந்தையைப் பார்ப்போம், அப்பொழுது புரியும்.

கிட்னிவாக்கம்:

கிட்னிவாக்கம் ஓராண்டுக்கு முன்னர் 1000 டாலர்கள் பெற்று கிட்னியை விற்ற கலா இன்னமும் சரிவர வேலை செய்யவியலாமல் தவிக்கிறார். கிட்னியின் சந்தை விலை சுமார் 15,000 டாலர் முதல் 250,000 டாலர் வரை
சென்னை மணலிக்கு அருகில் இருக்கும், சுனாமியில் அடிபட்ட ஒரு  குப்பத்தின் பெயர் கிட்னிவாக்கம். அங்கு கிட்னி விற்காதவர்கள் பிறந்த குழந்தைகள் மாத்திரம் தான்.
சுனாமி நகரில் வாழும் மக்கள் கடற்கரையோரம் வாழ்ந்து, சுனாமியால் வாழ்க்கையை இழந்து, அரசால் மறு-குடியமர்த்தப்பட்டவர்கள். இவர்களைப் பார்த்து புகைப்படம்  எடுத்துக்கொண்டு,  நலம் விசாரிக்க ஜப்பானின் ஜாக்கிசான் முதல் அமெரிக்காவின் மைக்கல் ஜாக்ஸன் வரை வருவார்கள், நடுநடுவே கிளின்டன், நம்ம ஊர் விஜயகாந்த் கூட வருவார்.  இத்தகைய மேன்மக்களுக்குக் காட்சிப் பொருளாக இருக்கும் இம்மக்களது வாழ்க்கை நிலைமை மிகவும் மோசம்.
கலா எனும் பெண்மணியின் கணவர் சுனாமியில் இறந்து விட்டார். அவர்களுடைய தொழிலும் போயிற்று. வரதட்சணை கொடுக்க முடியவில்வில்லை என்பதால் மகள் வாழாவெட்டியாகத் திரும்ப வந்து விட்டாள். அருகில் இருந்த சில கிட்னி ஏஜெண்டுகள் மூலம் தன் கிட்னியை விற்க கலா ஒப்புக்கொண்டார். 50 ஆயிரம் வரும்; பெண்ணுக்கு வரதட்சணை 30,000 போக, மீந்த பணத்தில் இட்லிக் கடை வைத்து சம்பாதித்து விடலாம் என்பது அவரது யோசனை. இப்பொழுது செய்யும் சித்தாள் வேலையை விட்டுவிடலாம். மதுரையில் ஆபரேஷன், முடிந்தவுடன் காசு.
மதுரைக்குச் சென்றார் கலா, ஆபரேஷனில் ஏதோ சிறு தவறு. காயம் ஆற ஒரு மாதம் ஆகும் எனச் சொல்லிவிட்டார்கள், சரி பணம்? ஏஜெண்ட் கமிஷன் போக 40 ஆயிரம் ரூபாய் கைக்கு வந்தது. கிட்னி எடுக்கும் ஆபரேஷன் வரை தான் மருத்துவச் செலவு அவர்களுடையது, அதன் பின் கலா தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கலா அந்தத் தனியார் மருத்துவமனைக்குக் கட்டணம் கட்ட முடியாமல் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். உடலைக் காப்பாற்ற 15 ஆயிரம் செலவானது. 25,000 வரதட்சணைக்குக் கொடுத்து விட்டார். ஆபரேஷனுக்குப் பின், முன் போல சித்தாள் வேலையும் பார்க்க முடியவில்லை. சரி காவல்துறையிடம் புகார் கொடுக்கலாம் என்று போனார். ஏட்டு  சட்டத்தை எளிமையாக அவரிடம் எடுத்துச் சொல்லிவிட்டார். “இந்திய சட்டப்படி உங்கள் உடல் உறுப்பைத் தானம் தான் கொடுக்க வேண்டும், விற்பனை செய்தால் விற்றவர் கடுமையான தண்டனை பெற வேண்டும்”.
கிட்னிவாக்கம் சென்னை மருத்துவமனை ஒன்றில் சிறுநீரகத்தை நீக்கும் நெப்ரெக்டொமி அறுவை சிகிச்சை. 2006-2007 ஆண்டுகளில் கிட்னிவாக்கம் என்றழைக்கப்படும் சுனாமி முகாமில் கிட்டத்தட்ட அனைத்து பெண்களும் தனது கிட்னிகளில் ஒன்றை விற்றுள்ளனர்.
ஏழையால் வேலை செய்து வாழ முடியாத சமுக அவலம், அந்த சமுக அவலத்தைப் பணமாக்கிக் கொள்ளும் இன்னொரு அவலம். இந்த சமூக அவலத்தில் இந்தியாவில் கிட்னி திருட்டும் வியாபாரமும் தழைத்தோங்குகிறது. GDP சேர்த்தால் பல புள்ளிகள் அள்ளலாம். விவசாயிகள் முதல், நெசவாளிகள், மீனவர்கள், மலை வாழ் மக்கள் என பல இலட்சம் பேர் கிட்னி விற்பனை செய்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் ’பங்காற்றுகின்றனர்’.

இரத்த தானம்?

சுபாஷ் சென்னை தெருக்களிலிருந்து 1999ல் காணாமல் போன தனது மகன் சுபாஷின் புகைப்படத்துடன் சிவகம்மா - நாகேஷ்வர் ராவ். தற்சமயம் சுபாஷ் அமெரிக்காவில் ஒரு கிறுத்தவ குடும்பத்தில் வளர்வதாக சென்னை போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலே பார்த்தோம் அல்லவா ? இந்திய சட்டப்படி இரத்த ‘தானம்’ தான் செய்ய வேண்டும் விற்கக் கூடாது. ஆனால் அப்படித் தானமாகப் பெறப்பட்ட இரத்தத்தை உடம்பில் ஏற்ற பணம் கொடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் ஆபரேஷன் பில்லில் இதர செலவுகளுடன் உங்களுக்கு ஏற்றப்பட்ட ரத்தத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கும். இரத்தம் தானமாகக் கிடைத்திருந்தாலும் காசை வசூலித்து விடுவார்கள்.
அதாவது உடல் உறுப்புகள் கொடுப்பது இலவசம், ஆனால் அந்த உறுப்பைப் பொருத்த நீங்கள் பணம் கொடுக்க வேண்டும். இதில் முதலில் இலாபம் அடைபவர்கள் தனியார் மருத்துவமனைகள். அவர்கள் இன்று இந்த உறுப்புகளுக்கான சந்தையை ஊட்டி வளர்க்கிறார்கள்.
இதே உறுப்புகளுக்கு மாற்று உறுப்பைப் பெறுபவரிடம் பல இலட்சங்கள் வாங்கப்படுகிறது. கலாவிடமிருந்து எடுத்த கிட்னி இந்தியாவில் 4 இலட்சம், அமெரிக்காவிலோ 13 இலட்சத்திற்கு விலை போகும். இடையில் புழங்கிய பணம் மருத்துவமனை, ஏஜெண்டுகளின் பையில் அடைந்து கொள்ளும். இதில் ஏஜெண்டுகளாக பல மருத்துவர்களே உள்ளனர். அரசு மருத்துவமனைகள் முதல் தனியார் மருத்துவமனைகள் வரை கொள்ளை இலாபம் புரளும் தொழில் இது.
இன்னொரு புறம் இரத்தத் தட்டுப்பாடு இருக்கும் இடங்களில் இரத்தம் கொடுக்க பணம் சட்டப்பூர்வமாகவே வசூல் செய்யலாம். நல்ல விஷயம் தான், ஆனால் அது என்ன விபரீதத்தைக் கொண்டு வந்தது தெரியுமா?
கோரக்பூரில் ஒருவன் நான்கு பேரைக் கடத்தி வைத்துக்கொண்டு அவர்களைச் சங்கிலியால் கட்டிப் போட்டு விட்டு, அவர்களுடைய இரத்தத்தை  எடுத்து விற்பனை செய்து கொண்டிருந்தான். பிடிபட்டவுடன் நல்ல வேளையாக அவன் இந்தியாவில் இருந்ததால் சட்டம் அவனைக் காப்பாற்றி விட்டது. என்ன ! பணம் கொஞ்சம் செலவாகியிருக்கும்!
இந்தப் புத்தகம் முழுவதும் அதன் ஆசிரியர் ஸ்கார்ட் கார்னியின் உழைப்பை நாம் மதிக்கத் தக்கதாகவே உள்ளது, ஏதோ புத்தகம் எழுதுகிறோம் என்பதோடு நில்லாமல். நாடு நாடாக, பல ஊர்கள் சுற்றி உடல் உறுப்புகள் பற்றிய சந்தையைப் பற்றி தகவல்கள் திரட்டி நெற்றிப்பொட்டில் அடிப்பது போல் முன்வைக்கிறார்.
அவர் மிகச் சுருக்கமாகக் குறிப்பிடுவது “மூன்றாம் உலக நாடுகளின் உயிர்கள் எப்பொழுதும்  மலிவானவை. இதுதான் காலனியச் சிந்தனை”.  அதை நிரூபிக்கும் அனைத்து ஆதாரங்களையும் தன் புத்தகத்தில் அனைவருக்கும் எளிதாகப் புரியும் வண்ணம் விளக்கியுள்ளார். நாம் மேலே பார்த்ததெல்லாம் அக்கடலில் ஒரு துளிதான்.
பாத்திமா தனது மகள் சபீனை ஒன்பதாண்டுகளாக தேடிய முயற்ச்சியில் திவாலாகிப்போன பாத்திமாவின் குடும்பம் தற்போது வண்ணாரப்பேட்டையில் வாழ்கிறது
உடல் விற்பனை என்பது, குழந்தைகள் கடத்தல், பெண்கள் விற்பனை, பெண்களின் கரு முட்டை விற்பனை, இரத்தம், கிட்னி, இதயம் உள்ளிட்ட இதர உடல் உறுப்புக்கள், இறந்தவர்களின் தோல், எலும்பு, வாடகைத் தாய் முதல் நம்மூர் திருப்பதியில் இருந்து ஏற்றுமதி ஆகும் தலை முடி வரை எனப் புத்தகம் முழுவதும் அவரின் ஆய்வு விரவிக் கிடக்கின்றது.
ஆமாம் திருப்பதியில் ஆண்கள் தலை முடி பேக்கரியில் பயன்படுத்தும் ஏதோ ஒரு ரசாயனப் பொருள் செய்யப் பயன்படுகிறதாம். பெண்களின் தலைமுடி பல பில்லியன் டாலர் புழங்கும் ‘விக்’ வணிகமாம். ஏலு கொண்டல வாடா! நீ எப்படி கோடீசுவரக் கடவுளாக இருக்கிறாய் என்பது இப்போதுதான் புரிகிறது.

மனிதன் எனும் சோதனை எலி

இதனுடன் இந்த புத்தகம் முடிவடையவில்லை. இதன் இன்னொரு பரிமாணம் என்பது மனித உடல்களைச் சோதனை எலிகளாகப் பயன்படுத்துவது எனும் ஆபத்து பற்றியது. நீங்கள் தமிழில் ஈ என்று படம் பார்த்திருக்கிறீர்களா? சரி அது வேண்டாம். அதன் மூல ஆங்கிலத் திரைப்படமான தெ கான்ஸ்டண்ட் கார்டனர் பார்த்திருக்கிறீர்களா? இந்தப் புத்தகத்தின் 8 ஆம் அத்தியாயம் அந்த அதிர்ச்சியான செய்தியைப் பற்றி தான் பேசுகிறது. பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் சோதனைக்கூடம் ஏழைகளின் உடல் தான்.
ஆப்ரிக்கா முதல் இந்தியா வரை வாழும் மூன்றாம் உலக, ஏழை நாடுகளின் மக்கள் தான் சோதனைச்சாலையின் எலிகள். நிறுவனம் புதிதாகத் தயாரிக்கும் மருந்தைச் சந்தைக்குக் கொண்டு வர, தரச் சான்றிதழ் பெற, அதற்கு முன்னரே சோதனை நிலையில் பலர் மேல் அம்மருந்து பிரயோகிக்கப்படுகிறது. கொடுமை என்னவென்றால் அது யார் மீது பிரயோகிக்கப்படுகிறதோ அம்மக்களுக்கே தெரிவதில்லை.
கோமதியின்-குழந்தை கோமதி கருவற்றவேளையில் சைக்லோபமைன் (Cyclopamine) என்ற மருந்து அவர் மீது சோதிக்கப்பட்டதன் விளைவாக குழந்தை இப்படிப் ஊனமாக பிறந்ததாக கஸ்தூர்பா காந்தி மருத்துமனை ஊழியர்களால். சந்தேகிக்கப்படுகிறது. அம்மருந்து தற்போது அமெரிக்காவில் புற்றுநோய் சிகிச்சைக்காக சோதிக்கப்பட்டு வருகிறது. இப்படம் எடுப்பதற்கு ஓராண்டு முன்பாக மருந்து கம்பெனிகள் முறையற்ற வகையில் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை நூற்றுக்கணக்கான பெண்களின் மீது சோதித்த்தாக தெரியவருகிறது. தற்போது இந்தியாவில் சைக்லோபமைன் விற்பனைக்கு கிடைத்தாலும், எந்த நிறுவனமும் அம்மருந்தை இங்கு சோதித்த்தாக ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.
இது ஏதோ ஒரு நிறுவனம், ஒரு நபர் சார்ந்த திருட்டு நடவடிக்கை அல்ல. சில நேரங்களில் அந்த நிறுவனங்கள் அந்த நாட்டின் சுகாதாரத் துறையையே விலைக்கு வாங்கி விடுகின்றன. இந்தக் குற்றம் ஒரு குறிப்பிட்ட அமைச்சரின் தனிப்பட்ட ஒழுக்க நெறி சம்பந்தப்பட்டதல்ல. அந்தந்த மருந்து நிறுவனங்களின் இலாப வெறியும், சந்தைப் போட்டியும் தான் இவற்றுக்கு அடிப்படை.
பன்னாட்டு மருந்து கம்பெனிகள் இலாபம் ஒன்றை மாத்திரமே  மையமாகக் கொண்டு இயங்கும்  வைரஸ்கள், ஒன்றில்லை என்றால் இன்னொன்றைப் பிடித்துக் கொள்கின்றன. ஆனால் இது மனித வைரஸ். கொஞ்சம் புத்திசாலித்தனமானது. தனக்கான அரசையே கூட சில ஆப்பிரிக்க நாடுகளில் அது உருவாக்கி விடுகின்றது.
பெரும்பான்மை மக்களின் மருத்துவம் போன்ற துறையில் தனியார் மயம் என்பது தெரிந்தே வைரஸை செலுத்திக் கொண்டது போன்றதுதான். எப்படி புற்றுநோயின் வளர்ச்சி மனிதனை அழிக்கின்றதோ அதே போல்தான் இந்தத் தனியார்மய வளர்ச்சியும் சமூகத்தை அழிக்கிறது. இது கண்ணுக்குப் பருண்மையாகத் தெரிகின்றது. நாம் தான் கண்ணை மூடிக்கொண்டு வளர்ச்சி வளர்ச்சி என்கிறோம். எது வளார்ச்சி என்று சரி பார்த்துக் கொள்வது நல்லது.
யோசித்துப் பாருங்கள், நோய் குணமாகும் என்கிற நம்பிக்கையில் மருத்துவமனைக்குச் சென்று பணத்தை அள்ளி இறைத்த பின் ’நீங்கள் ஒரு சோதனை எலி, உங்கள் உடலில் ஒரு மருந்து சோதனைக்காகச் செலுத்தப்பட்டிருக்கிறது. அதனால் உயிர் இழந்தாலும் உங்கள் குடும்பத்தினருக்கு ஒன்றுமே தெரியாது’ என்ற அவல நிலையை?
முதலாளித்துவம் மனிதனிடத்தில் இருக்கும் உணர்ச்சிகள் அனைத்தையும் பிடுங்கி ஒரு பண்டமாக மாற்றிவிடும் என்று மார்க்ஸ் சொன்னது எவ்வளவு உண்மை? !
படங்கள் : தி ஒயர்ட் மேகசின், ரெட்மார்கெட்

No comments:

Post a Comment