பலரும் சில சமயங்களில் என்னை நானே தேடுகிறேன் என்பார்கள். தன்னைச்சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் பல குழப்பங்களையும் அமைதியாக அனுமதிப்பார்கள். கடைசியில் அதில் ஏதேனும் பிரச்சினை தலை தூக்கத் தொடங்கும் போது அந்த நேரத்தில் மட்டும் வலி தாங்காமல் கத்துகிற குழந்தையைப் போலாகி விடுவார்கள்.
இப்படிப்பட்டவர்கள் முதலில் தங்களை சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளில் சில: என்னைச் சுற்றியுள்ள எல்லோரிடமும், நல்ல வலுவான விஷயங்களையே இனம் பிரித்துக் காணும் பழக்கத்தை நான் மேற்கொண்டிருக்கிறேனா? அல்லது தீய, பலவீனமான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறேனா?
என்னிடமுள்ள தீய, பலவீனமான விஷயங்களை மற்றவர்கள் காண்கிறார்கள் என்பதை நான் உணர்ந்திருக்கிறேனா? என் நடத்தை பற்றிய நேர்மையான விமர்சனத்தை நான் வரவேற்கிறேனா? நல்ல அறிவுரையைக் கேட்டு என் தீய, பலவீனமான வழிகளை நான் மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறேனா? என்னை மற்றவர்கள் மன்னிக்காவிட்டாலும், மற்றவர்களிடமுள்ள தவறுகளை மன்னித்து ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேனா?
இந்தக் கேள்விகளையெல்லாம் உங்களுக்குள் கேட்டுக் கொண்டு அதற்குப் பதில் தேடிப்பாருங்கள். உங்கள் தரப்பில் உள்ள பலவீனங்கள் லேசாக எட்டிப் பார்த்து `அடடா…நான் இப்படியா செய்தேன்?’ என்று உள்ளுக்குள் ஒருகணம் உங்களை யோசிக்க வைக்கும். இந்த சிந்தனை தான் உங்களை நீங்கள் மறு பரிசீலனைக்குள் கொண்டு வர உதவுகிறது. இதற்குப்பிறகு நாம் செய்ய வேண்டியது என்ன?
மற்றவரிடமுள்ள நல்ல விஷயங்களைக் கண்டறிந்து நாம் அங்கீகரிக்க வேண்டும். நம்மைக் காயப்படுத்துகிறவர்களுக்கு எதிராக எழும் எதிர்மறை எண்ணங்களையும் நம் மனங்களை விட்டு நாம் விலக்கி விட வேண்டும். பிறகு அதுவே மிக உயர்ந்த குணமாகி விடும். என் கோபத்தால் எனக்கு அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறதா?
அதை மாற்றியே தீருவேன் என்பதை உறுதிமொழியாக எடுத்துக் கொள்ள வேண்டும். என் பொறுமையின்மையால் என் உறவுகளில் சில பாதிக்கப்படுகின்றனவா? இனி நான் உறவுகள் விஷயத்தில் எந்த வித மாற்றுக்கருத்துகளும் கூறப்போவதில்லை என்பதை பிரகடனப்படத்தி விடவேண்டும்.
இப்படிச் செய்யும்போது உங்கள் தகுதி காரணமாக உங்களை நெருங்கப் பயந்த உறவினர்கள் கூட உங்களிடம் உரிமையுடன் சிநேகம் பாராட்டுவார்கள். ஒரு செயலை தள்ளிப்போடும்போது அந்த செயலுக்கான அடிப்படை ஆர்வம் அடிபட்டுப் போகிறது. அதன் மூலம் வரக்கூடிய வரவுகள் தள்ளிப் போகிறது.
பல நேரங்களில் தாமதித்த காரணத்தால் அவை நம் கையை விட்டுப் போகவும் செய்கின்றன. இந்த வட்டத்துக்குள் நீங்கள் வந்து விட்டால் அப்புறமாய் உங்களை நீங்கள் யாரென்று தேடிக்கொண்டிருக்க அவசியமில்லை. என் மகன் என்று பெற்றோர் கொண்டாடுவார்கள்.
என் கணவர் என்று மனைவி கொண்டாடுவாள். எங்கப்பா என்று பிள்ளைகள் கொண்டாடுவார்கள். எங்கள் நல்ல உறவுக்காரர் என்று சொந்தக்காரர்கள் கொண்டாடுவார்கள். இத்தனை சொந்தம் உங்ளைச் சுற்றி இருக்கும்போது நீங்கள் யார் என்பது இப்போது உங்களுக்கே தெரிந்திருக்குமே..!
No comments:
Post a Comment