Digital Time and Date

Welcome Note

Friday, September 21, 2012

பணம் பத்தும் செய்யுமா?

ஆசிரியர்: சாளை பஷீர் ஆரிஃப்
எழுத்தாளர் / சமூக பார்வையாளர்

காட்சி 1

அது ஒரு கஞ்சிக்கு வழியில்லாத ஏழையின் வீடு
வைகறைத் தொழுகை முடிந்து இருள் கலையும் நேரம்
வீட்டு முற்றத்தில் பொட்டலம் கிடக்கின்றது
அருகில் சென்று குனிந்து பார்த்தால்
மஞ்சள் நிற துணியில் ஒரு பொருள் பொதியப்பட்டுள்ளது
கையிலெடுத்து பிரித்து பார்த்தால் பணக்கட்டு
ஏழையான அந்த வீட்டுக்கார விதவை முகம் தெரியாத
அந்த கொடையாளிக்காக இறைவனிடம் வயிறும் நெஞ்சும் நிறைந்து வேண்டுகின்றார்

காட்சி 2

மக்கள் அடிக்கடி புழங்கும் ஒரு பொதுவிடத்தில் பொருத்துவதற்காக சாதனம் ஒன்றை அன்பளிப்பாக வழங்குகின்றார் ஒரு கனவான். தான் நன்கொடையாக அளித்த பொருளில் தனது பெயரையும் எழுதி பதித்திட வேண்டும் என நிபந்தனையொன்றையும் விதிக்கின்றார்.

“பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை”

என்ற பழைய வெள்ளித்திரை பாடல் வரிகள்தான் நெஞ்சில் வந்து மோதுகின்றது.

வறுமையும் வளமும் பணமும் முடையும் மனித வாழ்வில் மாறி மாறி வரும் காட்சிகள்.

இந்தக் காட்சி மாற்றங்களில் நாமும் நம்முடைய செயல்பாடுகளும் எந்த எண்ணத்தின் அடிப்படையில் அமைகின்றன என்பதுதான் தலையாய விஷயம். நிறைந்த மனதுடையோர் வாழ்வின் உயர்வு தாழ்வுகளில் தம் நிலையை தாழ்த்திடுவதில்லை. தரமிறங்கி தரையில் உருண்டிடுவதில்லை. பல பத்தாண்டுகளுக்கு முன்பு நமதூருக்கு வந்த பொது நலத்திட்டங்களில் பெரும்பான்மையானவை நம் முன்னோர்களின் தயாள மனதின் விளைவுகளேயாகும்.

பொது விடயங்களில் தங்களது நேரத்தையும் செல்வத்தையும் திறமையையும் உழைப்பையும் ஈந்த அந்த நல்ல மனிதர்கள் யாரும் தங்களின் கொடையின் பெயரால் சட்டாம்பிள்ளைத் தனத்தையோ அல்லது சர்வாதிகாரப் போக்கையோ கைக்கொள்ள விரும்பியதில்லை. காரணம் அந்த பென்னம்பெரும் கொடைகளுக்குப் பின்னணியாக இருந்த அவர்களின் மனதில் அது பற்றிய தெளிவான களங்கமற்றதொரு பார்வையிருந்தது.

அது என்ன பார்வை?

தன்னிடமிருக்கும் நேரம், பணம், திறமை, செல்வாக்கு, சமூக அந்தஸ்து போன்றவையனைத்தும் தமக்கு உரித்தானதல்ல. மாறாக அவையனைத்தும் கடனாக - இரவலாகப் பெற்றவை. அவற்றின் முழு முதல் உரிமையாளன் - சொந்தக்காரன் அந்த அல்லாஹ்தான் என்ற தெளிவு அவர்களுக்கிருந்தது.

அவற்றை வீணடிப்பதோ முறையற்ற வழிகளில் பயன்படுத்துவதோ மிகவும் பாரதூரமான பக்க, பின் விளைவுகளுடன் கைசேதமான முடிவுகளையும் தரவல்லது என அழுத்தமாக நம்பினார்கள்.

ஆனால் இன்றோ...?

இக்கட்டுரையின் தொடக்கத்தில் நாம் கண்ட இரண்டு காட்சிகளுமே நமதூரில் நடந்தவைதான். அவற்றுக்கிடையே உள்ள கால அளவில்தான் வித்தியாசம்.

இரண்டாம் காட்சிக்கும் முதலாம் காட்சிக்கும் உள்ள கால இடைவெளி அரை நூற்றாண்டுக்கும் மேலாகும். பள்ளத்திலிருந்து சிகரம் ஏற பல காலமாகும். ஆனால் சிகரத்திலிருந்து பள்ளத்திற்கு பாய சில விநாடிகள் போதும்.

மூன்றாம் காட்சி அதற்கு நிகழ்கால சாட்சியாக உள்ளது.

மூன்றாம் காட்சியை நாம் தனியாக எழுதிடாததற்கு காரணம் உண்டு.

இன்று நடக்கும் பரபரப்பு அலம்பல் நிகழ்வுகளுக்கு மூன்றாம் காட்சி என்று பெயரிடுவதை விட ஒரு வருட பழமையான நெடுந்தொடர் என பெயரிடுவதே பொருத்தம் எனத்தோன்றியது.

இரண்டாம் காட்சியில் நாம் கண்ட கனவான்களின் பரிணாம வளர்ச்சிதான் இந்த நெடுந்தொடரின் கதை, திரைக்கதை, வசனம், நகைச்சுவை, சண்டைக்காட்சி, இயக்கம் என அனைத்துமாக உருவெடுத்துள்ளது.

என்னிடம் ஏராளமான பணமுள்ளது. அது ஒன்றே எனக்கு சகல அதிகாரத்திற்கான தகுதியாகும். என்னிடம் கேட்காமல் ஊரிலுள்ள மரத்தின் ஒரு இலை கூட அசையக் கூடாது என சிலர் ஆசைப்படுவதை நினைத்து சிரிக்கவா அழவா என தெரியவில்லை.

நம்மிடம் உள்ள பணம் செல்வாக்கு மூலம் பிறருக்கு உதவ இறைவன் வழியமைத்து தந்தானே என அவனுக்கு நன்றி பகருவதுதான் ஒரு நல்ல முஸ்லிமுக்கு அழகு.

அதை விடுத்து சமூகத்திலுள்ள பலர் தன்னிடம் உதவி பெறுவதையே காரணங்காட்டி அதன் மூலம் அந்த சமூகத்தையே முழந்தாளிட்டுப் பணிய வைக்க முயலுவது இறைவனின் படைப்புகளுக்கு பொருத்தமல்ல.

இங்கு பண்ணையார் தோரணையிலான அதிகாரமெல்லாம் காலாவதியாகி பல காலமாகிவிட்டது.

எல்லா வகையான சுதந்திர உரிமைகளையும் கோரும் சனநாயக நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை யாராவது அந்த கனவுலகில் வாழும் கனவான்களுக்கு எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.

மகுடிக்கு தலையாட்டும் பாம்பு போல தன் பேச்சிற்கு ஊர் மொத்தமும் அசைந்தாட வேண்டும்; இல்லையெனில் என்ன விலை கொடுத்தாவது யாரையும் தன் சொல்லுக்கு முன் மண்டியிட வைக்க வேண்டும் என்ற மூர்க்கத்தோடு செயல்படுவது அன்றாட நிகழ்வாகி விட்டது. உயர்வும் மாண்பும் படைத்த மனிதர்களை விலைப்பட்டியிட்டு அங்காடியில் தொங்கும் கடைச்சரக்காக்கிப் பார்ப்பதென்பது சிலருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.

இந்த முரட்டுப் பிடிவாதத்தின் விளைவாக ஊரை அடித்து உலையில் போடுபவர்கள், மொடாக்குடியர்கள், வகுப்புவாதி, நெறி பிறழ்ந்தவர்கள் என ஒரு ஏவல் கும்பலுக்கே இரை போட்டு தன் வீட்டு செல்ல விலங்குகளாக வளர்த்து வரும் பெரிய மனிதர்களும் உண்டு. இவர்களின் இந்த சதுரங்க விளையாட்டில் பாரம்பரியமிக்க நமதூர் சிக்கித் தவிக்கின்றது. பொது வாழ்வில் ஊழலை ஒழிப்பதற்கான முயற்சிகள் முழு மூச்சோடு சில ஏவலாளிகளால் இரவும் பகலுமாக எதிர்க்கப்படுகின்றது.

இவர்களின் துர்போதனைகளில் தலை கிறங்கி வழி பிறழாமல் இருப்பது கனவான்களின் ஈருலக வாழ்வு சிறக்க வழி வகுக்கும்.

நீர் வறண்ட குளத்திலிருந்து பறவைகள் பறந்து செல்வது போல கனவான்களின் பையிலிருக்கும் பணம் கரைந்து விட்டால் அவர்களைச் சுற்றியிருக்கும் துதி பாடிகள் சூடான அடுப்பில் பட்ட பனிக்கட்டி போல கரைந்தோடி காற்றில் கரைந்து மாயமாய்ப் போய்விடுவர். பொதுமக்கள் பாடுபட்டு தேடிய பணங்காசு அரசு அலுவலகங்களில் வாழும் சில ஊழல் பெருச்சாளிகளுக்குத் தீனியாக தாரை வார்க்கப்பட கனவான்களே ஏன் காரணமாக இருக்கின்றீர்கள்?

பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரும் மன உளைச்சலும் உடல் அலைச்சலும் எத்தனை கனமானது என்பதை அறிவீர்கள்தானே? ஊழலும், முறைகேடுகளும் பூமியில் பரவக்காரணமாக இருப்பவர்களுக்கு இவ்வுலகிலும் அவ்வுலகிலும் காத்திருப்பது என்ன என்பது தெரியாதா? தீச்செயலுடன் இக்கனவான்கள் செய்யும் அறச்செயல்கள் பாதி குடம் பால் மீதி குடம் நஞ்சு என்பது போல்தான் உள்ளது. காலமும் வரலாறும் தீயவற்றுக்கு சாட்சியாக இருப்பது போலவே தீமைக்கெதிரான முயற்சிகளுக்கும் சாட்சியாக இருக்கும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

No comments:

Post a Comment