அன்று முதல் இன்று வரை பெண்களை அடிமைகளாகவே ஆண்கள் நடத்தி வருகின்றனர். சில குடும்பங்களில் இதற்கு நேர்மாறான நிலைமை இருக்கலாம். பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கப் படுவதில்லை.
மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியரிடம் நடந்து கொண்ட முறை ஆண்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? என்று ஆயிஷா (ரலி)யிடம் நான் கேட்டேன். அதற்கவர், தமது குடும்பத்தினரின் பணிகளில் ஈடுபடுவார்கள். தொழுகை நேரம் வந்ததும் தொழுகைக்காகப் புறப்படுவார்கள் என விடையளித்தார். அறிவிப்பவர் : அஸ்வத், நூல் : புகாரி 676, 5363, 6039
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று ஆயிஷா (ரலி)யிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், தமது (கிழிந்த) ஆடையைத் தைப்பார்கள், (பழுதுபட்ட) தமது செருப்பைச் சரி செய்வார்கள், மற்ற ஆடவர்கள் தமது வீட்டில் செய்யும் எல்லா வேலைகளையும் செய்வார்கள் என்று விடையளித்தார். அறிவிப்பவர் : உர்வா நூல் : முஸ்னத் அஹ்மத் 23756, 24176, 25039
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தனிப்பட்ட வேலையைத் தாமே செய்து கொள்வார்கள் என்பதும், தமது மனைவியர் செய்யும் வேலைகளில் ஒத்தாசை செய்வார்கள் என்பதும் இவ்விரு நிகழ்ச்சிகளிலிருந்தும் தெரிகிறது.
மனைவியரின் வேலைகளில் ஒத்தாசையாக இருத்தல், காய்கறி நறுக்குதல், வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்தல் போன்ற வேலைகள் பெண்கள் மட்டுமே செய்ய வேண்டிய வேலைகள் என ஆண்களில் பலர் எண்ணுகின்றனர். இந்தப் பணிகளில் துணை செய்வது ஆண்மைக்கு இழுக்கு எனவும் நினைக்கின்றனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டுப் பணிகள் அனைத்திலும் மனைவியருக்கு ஒத்தாசையாக இருந்துள்ளனர்.
அபீஸீனிய வீரர்கள் வீர விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, நபிகள் நாயகத்தின் பின்னால் நின்று நானும் பார்த்துக் கொண்டிருப்பேன். நானாகத் திரும்பும் வரை அவர்கள் எனக்குத் துணை நிற்பார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 5190
என்னுடைய விளையாட்டுத் தோழிகள் என்னுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) வருவார்கள். அவர்களைக் கண்டதும் எனது தோழிகள் மறைந்து கொள்வார்கள். என்னுடன் விளையாடுவதற்காக அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பி வைப்பார்கள் என்றும் ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 6130
ஒரு பயணத்தில் சென்ற போது நானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஓட்டப் பந்தயம் வைத்தோம். அதில் நான் முந்தி விட்டேன். பின்னர் நான் உடல் பருமனாக ஆன போது மற்றொரு முறை நடந்த ஓட்டப் பந்தயத்தில் அவர்கள் என்னை முந்தி விட்டார்கள். அப்போது 'அதற்கு இது சரியாகி விட்டது' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : அபூதாவூத் 2214.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியை வாழ்க்கைத் துணைவியாகவும், தோழியாகவும் தான் நடத்தினார்களே தவிர அடிமையாகவோ, வேலைக்காரியாகவோ நடத்தவில்லை என்பதை இந்நிகழ்ச்சிகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
எளிமையான வாழ்க்கை!
ஏழ்மையில் பரம திருப்தி!
எதிரிகள் உட்பட அனைவருக்கும் சமநீதி!
அநியாயத்திற்கு அஞ்சாமை!
துணிவு!
வீரம்!
அனைவரையும் சமமாக மதித்தல்!
மிக உயர்ந்த இடத்தில் இருந்தும் அவர்கள் காட்டிய அடக்கம்!
பணிவு!
எல்லையற்ற பொறுமை!
மென்மையான போக்கு!
உழைத்து உண்ணுதல்!
கொண்ட கொள்கையில் அசைக்க முடியாத உறுதி!
தாம் சொன்ன அனைத்தையும் முதலில் தாமே செய்து காட்டியது!
எதிரிகள் உள்ளிட்ட அனைவரையும் மன்னித்தல்!
பிற சமுதாய மக்களிடமும் நல்லிணக்கத்துடன் நடத்தல்!
தமக்கோ தமது குடும்பத்திற்கோ எந்தச் சொத்தையும் சேர்த்துச் செல்லாதது!
தமது உடமைகள் அனைத்தையும் அரசுக் கருவூலத்தில் சேர்த்தது!
அரசின் ஸகாத் நிதியை தாமும் தமது குடும்பத்தினரும் எக்காலத்திலும் பெறக் கூடாது என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டது!
மனைவியருடன் நல்ல முறையில் குடும்பம் நடத்தியது!
சிறுவர்களிடம் அன்பு காட்டுதல்!
என அனைத்துப் பண்புகளிலும் அவர்கள் சிறந்து விளங்கினார்கள்.
இப்பண்புகளில் ஒரு சில பண்புகளை இன்றைக்கும் கூட சிலரிடம் நாம் காண முடியும் என்றாலும் அனைத்துப் பண்புகளையும் ஒரு சேர எவரிடமும் காண முடியாது. நபிகள் நாயகம் தவிர வேறு எந்த வரலாற்று நாயகர்களிடமும் இவற்றைக் காண முடியாது.
இதன் காரணமாகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்கள் தமது உயிரை விடவும் அதிகமாக நேசிக்கிறார்கள். உலகம் அவர்களை மாமனிதர் என்று புகழ்ந்து போற்றுகிறது.
இந்நூலை அனைவரும் புரிந்து கொள்ளும் விதம் எளிய நடையில் எழுதிய சகோ: பீ.ஜே அவர்களுக்கு வல்ல அல்லாஹ் மறுமையில் கண்ணியத்தை வழங்க வேண்டும் என்றுப் பிரார்த்திக்கின்றேன்.
No comments:
Post a Comment