Digital Time and Date

Welcome Note

Tuesday, October 2, 2012

உலகக் கோப்பை கேரம் சாம்பியன். வாழ்க்கை வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்தபோதே கேரம் போட்டிகளில் உச்சக் கோடு தொட்ட பெண்... சாதித்த கதை சொல்கிறார்...


    
''எங்கப்பா கேரம் பிளேயர். வீட்ல நாங்க மூணு பேரும் பொண்ணுங்கதான். அப்பாவோ, அம்மாவோ, என்னைப் 'படி... படி'ன்னு சொன்னதே கிடையாது. ஆனா, அப்பா தினமும் என்னை கேரம்போர்டு விளையாடச் சொல்வாரு. மத்த பசங்களோடு விளையாட முடியாததால, எனக்கு கேரம்னா கொஞ்சம் வெறுப்பு. ஆனா, எனக்கு கேரம் கத்துக் குடுக்குறப்போ அப்பா கண்ல சின்னதா ஒரு பளபள. 'பையன் பொறந்திருந்தா, பெரிய கேரம் பிளேயர் ஆக்கி இருக்கலாமே'னு நினைக்குறாரோனு தோணுச்சு.


'பையனா இருந்தாலும் அவனுக்கும் கையில பத்து விரல்தானே இருக்கும். அவனால முடியும்னா, நம்மால முடியாதா?'ன்னு நிஜமா எனக்குள்ள ஒரு வீம்பு. கேரம் போட்டிகள்ல நிச்சயம் ஜெயிக்கணும்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். அதுவரை கேரம் விளையாட்டு மேல எனக்கு இருந்த சின்ன வெறுப்பைப் பெரிய வெறியா மாத்தினேன். அப்பெல்லாம் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் 'டோர்னமென்ட் போர்டு'கள்லதான் நடக்கும். நல்லா வழுவழுன்னு போட்டிகளுக்காகவே தயாரிக்கப்படுற போர்டுகள். அது வாங்க வசதியில்லாம சாதாரண கட்டை போர்டுலதான் நான் பிராக்டீஸ் பண்ணிட்டு இருந்தேன். அப்பாவோட ஃப்ரெண்ட் ஒருத்தர் வீட்ல டோர்னமென்ட் போர்டு இருந்துச்சு. தினமும் அதிகாலை நாலு மணில இருந்து ஆறு மணி வரை அதுல பிராக்டீஸ் பண்ணிட்டு, ஸ்கூலுக்குப் போவேன். சாயங்காலம் சும்மா இருக்கப் பிடிக்காம வீட்டு கட்டை போர்டுல பிராக்டீஸ் பண்ணிட்டு இருப்பேன். காலைல டோர்னமென்ட் போர்டுல ஸ்மூத்தா விளையாடிட்டு கட்டை போர்டுல விரல் நோக ஸ்டிரைக்கர் சுண்டுறதுக்குக் கடுப்பா இருக் கும். தினமும் காலைல அத்தனை சீக்கிரம் எழுந் திரிக்குறதுக்கும் கடுப்பா இருக்கும். ஆனா, அந்த வலி இருந்துட்டே இருந்தாதான் ஏதாவது ஒரு வழி திறக்கும்னு பொறுத்துக்கிட்டேன். முதல் வெற்றி கிடைக்கிற வரை என்னை நானே வாட்டிக்கிட்ட அத்தனை நாளும் இப்பவும் எனக்குச் சுளீர்னு ஞாபகம் இருக்கு!''

''ஆறாவது படிக்கிறப்போ ஜூனியர் கேரம் ஸ்டேட் டோர்னமென்ட்ல என்னைக் கலந்துக்கச் சொன்னாங்க பி.டி. டீச்சர் கலாவதியும் ஹெச்.எம். சந்திரா மேடமும். அதுக்கு முன்னாடி நான் பெரிய போட்டிகள்ல கலந்துக்கிட்டது கிடையாது. எனக்கு எதிரா விளையாடியது அப்போ ஸ்டேட் பிளேயரா இருந்தவங்க. சரசரன்னு என்னை அடிச்சுக் காலி செஞ்சுரலாம்னு வந்து உக்காந்தாங்க. 4:45-க்குள்ள என்னைத் தோக்கடிச்சுட்டு 5 மணி பஸ்ஸைப் பிடிக்கப் போற மாதிரியே இருந்துச்சு அவங்க ஒவ்வொரு ஆக்ஷனும்.


ஜெயிச்சே ஆகணும்னு உள்ளுக்குள்ள வெறியாயிருச்சு. என்கிட்ட இழக்குறதுக்கு எதுவும் இல்லை. ஆனா, ஜெயிச்சா உலகமே இருக்குன்னு நினைச்சுக்கிட்டு ஸ்டிரைக் பண்ண ஆரம்பிச்சேன். அன்னிக்கு எனக்கு கேம் அட்டகாசமா கை வந்துச்சு. 4:50 பஸ்ஸையே அவங்க பிடிக்கலாம்கிற அளவுக்கு கேம் அவ்வளவு சீக்கிரம் முடிஞ்சுது. ஆனா, ஜெயிச்சது நான். யோசிச்சுப் பார்த்தா, அன்னிக்கு என் மேல எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எனக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதனால, என்னால இயல்பா இருக்க முடிஞ்சது. அந்த இயல்பை எந்தச் சூழ்நிலையிலும் இருத் திக்கிற மனப்பக்குவத்தைக் கத்துக்கொடுத்த முதல் வெற்றி அது. அதோடு ஸ்கூல் சார்பா எனக்கு டோர்னமென்ட் கேரம்போர்டும் வாங் கிக் கொடுத்த நாள்!''

''அடுத்தடுத்து நிறையப் போட்டிகள்ல கலந் துக்க ஆரம்பிச்சேன். நிறைய ஜெயிச்சேன். கொஞ்சம் கொஞ்சம் தோற்கவும் செஞ்சேன். எத்தனையோ போட்டிகள். ஆனா, நான் கலந்துகிட்ட முதல் ஆசியக் கோப்பைப் போட்டியை மறக்க முடியாது. 2005-ல மாலத்தீவுகள்ல நடந் தது. முட்டி மோதி ஃபைனல்ஸ் வரை வந்துட்டேன். ஃபைனல்ஸ்ல எனக்கு எதிரே நிர்மலா. அவங்கதான் அப்போ உலகத்துலயே டாப் பிளேயர். தொடர்ச்சியா நாலு உலகக் கோப்பை போட்டி ஃபைனல்ஸூக்கு வந்த ரன்னர்அப் அவங்க. முதல் செட்ல நான் ஆறு பாயின்ட். அவங்க 45. ரெண்டாவது செட்லயும் அவங்க லீடிங்.


'அதுக்குள்ள ஏன் நாம தோத்துட்டோம்னு நினைக்கணும்? இன்னும் அவங்க ஜெயிக்கலைதானே... அவங்களைக் கடைசி வரை ஜெயிக்கவிடாம பண்ணுவோம். அதுக்கப்புறம் நாம ஜெயிக்க முடியுமான்னு பார்ப்போம்'னு நினைச்சுக்கிட்டு விளையாடினேன். அஞ்சு நிமிஷத்துல முடியிற மாதிரி இருந்த கேம், முழுசா முடிய ஏழு மணி நேரம் ஆச்சு. நான்தான் ஜெயிச்சேன். கடைசி பாயின்ட் வரை அவங்க போக, நான் புடிச்சு இழுத்துட்டு வர... என்னை முன்னாடி நகரவிடாம அவங்க முட்டுக்கட்டை போட... ஒவ்வொரு ஸ்டிரைக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர். ஏழு மணி நேரமும் மனசை விடாம இறுக்கிப்புடிச்சு வெச்சிருந்ததுதான் பெருசு. தோக்குறதுக்குக் கடைசி செகண்ட் வரைக்குமான நேரம் இருக்கே... அது நமக்கும் சொந்தம்தானேன்னு அந்த ஏழு மணி நேரம்தான் கத்துக்கொடுத்துச்சு!''


''2005-ல ஒரு நாள். அமெரிக்காவில் நடக்குற கேரம் போட்டியில் கலந்துக்க எனக்கு வாய்ப்பு. ஆனா, செலவெல்லாம் நான்தான் பார்த் துக்கணும். ஏர்போர்ட்டுக்கு பஸ் டிக்கெட் எடுக்கவே முடியாத எங்க ளால எப்படி ஏரோப்ளேன் டிக்கெட் எடுக்க முடியும்? 'உண்டு... இல்லை'னு சொல்றதுக்கு அன்னிக்குத்தான் கடைசி நாள். கடைசியா ஒரு முயற்சி பண்ணிப் பார்க்கலாமேன்னு தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரி டேவிதார் சாரைப் போய்ப் பார்த்தேன். 'கிறிஸ்துதாஸ் காந்தின்னு ஒரு ஐ.ஏ.எஸ். ஆபீஸர் இருக்காரு. அவர் உன்னை மாதிரி கஷ்டப்படுற திறமையான பிளேயர்களுக்கு உதவி பண்ணுவாரு'ன்னு அனுப்பிவெச்சார்.
கிறிஸ்துதாஸ் காந்தி சார் என் சர்ட்டிஃபிகேட்லாம் பார்த்தார். 'உன்னை மாதிரி ஒரு ஆளு எப்படி இந்தப் போட்டியில் கலந்துக்காம இருக்கலாம்..? நீ நிச்சயம் அமெரிக்கா போற. ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆபீஸ்ல இருந்து ஒரு என்.ஓ.சி. லெட்டர் மட்டும் வாங்கிட்டு வந்துரு'ன்னு சொன்னாரு. ஆச்சர்ய ஆனந்த அதிர்ச்சி. திரும்பவும் நேரு ஸ்டே டியத்துக்கு ஓடுறேன். அந்த லெட்டர் கிடைச்சாலும் பாஸ்போர்ட், விசான்னு ஏகப்பட்ட பஞ்சாயத்து இருக்கே. ரெண்டு, மூணு மணி நேரத்துல எப்படி எல்லாம் சரியாகும்னு எனக்குப் பதற்றம். ஆனா, நம்ப மாட்டீங்க... நான் நேரு ஸ்டேடியம் வர்ற துக்கு முன்னாடியே என்.ஓ.சி. லெட்டர் ரெடியா இருந்துச்சு. திரும்ப கிண்டி வர்றதுக் குள்ள பாஸ்போர்ட் அப்ளிகேஷன் தயார். அடுத்த அரை மணி நேரத்துல பாஸ்போர்ட் ரெடி! ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி திக்கு திசை தெரியாம நின்னவ, இப்போ அமெரிக்கா கிளம்பத் துணிமணி எடுத்துவைக்கணும். கிறிஸ்துதாஸ் காந்தி சாருக்குக் கோடிப் புண் ணியம்.
அதிர்ஷ்டம், லக், நல்ல நேரம்னுஎல்லாம் சொல்றாங்களே... அதுக் கெல்லாம் அப்பதான் எனக்கு அர்த்தம் புரிஞ்சுது. நம்ம வேலையை நாம ஒழுங்கா செஞ்சா, நம்மைச் சுத்தி இருக்குற நல்லவங்க நமக்காகச் செய்யுற நல்லதுதாங்க அதிர்ஷ்டம். நல்லவங்க எப்பவும் நல்லது செய்வாங்க. ஆனா, நம்ம வேலையை நாம ஒழுங்கா செஞ்சி ருந்தாதான் அந்த நல்லது அதிர்ஷ்டமா மாறும்!''

''2008-ல உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் பிரான்ஸ்ல நடக்குது. ஏர்போர்ட்ல நாங்க போய் இறங்கினா, என் லக்கேஜ் மட்டும் காணலை. இந்தியாவுல இருந்து கிளம்புறப்போ நான் போட்டிருந்த அந்த ஒரு டிராக் சூட் மட்டும்தான் என்கிட்ட இருந்த டிரெஸ். பகல் 12 மணிக்கே ஸ்வெட்டர் போட்டு நிக்கிற அளவுக்குக் குத்திக் கொல்லுற குளிர் பிரான்ஸ்ல விசேஷம். ஒரு மணி நேரம்கூட என்னால தாக்குப்பிடிக்க முடியலை. இந்தியாவுல இருந்து போன ஆறு பேர்ல என்னையும் சேர்த்து மூணு பொண்ணுங்க. அவங்களோட டிரெஸ்ஸை எனக்குக் கொடுத்து உதவுற அளவுக்கு அவங்க சூழ்நிலை இல்லை. காசு கொடுத்து புது டிரெஸ் வாங்கிப் போடுற அளவுக்கு என் சூழ்நிலை இல்லை. மொத்தமா ஏழு நாள் அங்கே தங்கியிருக்கணும்.
கேரம் ஒரு மைண்ட் கேம். மனசுல எந்தக் குழப்பமும் சஞ்சலமும் இல்லாம ரொம்ப ஃப்ரீயா உணர்ந் தாதான் நம்ம மனசு திட்டமிடுற திசையில விரல் ஸ்டிரைக்கரைச் செலுத்தும். ஆனா, என் வாழ்க்கை யிலயே முக்கியமான கட்டத்தின்போது என் மனசு ஃப்ரீயா உணரலை. அன்னிக்கு முழுக்க மகா குழப்பம். குளிர்ல அழுதா கண்ணீர்கூட வர மாட்டேங்குது. பயம், பதற்றம், குழப்பம்... அந்தளவுக்கு நான் அது வரை அரண்டு மிரண்டதில்லை. 'போட்டியிலகலந்துக் காம ஊருக்குத் திரும்பிடலாமா?', 'ஏழு நாளும் ஓட்டல் ரூம்லயே தங்கிட்டு போட்டியில கலந்துக்காம இருக்கலாமா?'ன்னு ஏகப்பட்ட சிந்தனைகள். 'இளவழகி, நீ இப்போ நீயா இல்லை. இப்போ நீ என்ன முடிவெடுத்தாலும் அது தப்பாதான் இருக்கும். பேசாம படுத்துத் தூங்கு'ன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு, மறுநாள் என்ன நடக்கும்னு தெரியாமலே கஷ்டப்பட்டு தூங்கிட்டேன். அன்னிக்கு நான் எந்த முடிவும் எடுக்காதது எவ்வளவு நல்லதுன்னு மறுநாள்தான் எனக்குப் புரிஞ்சுது!''

''மறுநாள் பிரான்ஸ்ல ரெண்டாவது நாள். எந்திரிக்கிறப்பவே பசி வயித்தைக் கிள்ளுது. சாப்பிடப் போனா நாம அதுவரை கண்ணால பாத்திருக்காத, கேள்வியேபட்டிருக்காத சங்கதிகளை எல்லாம் சாப்பிடக் கொடுக்குறாங்க. இன்னொரு இடி... போட்டுக்க டிரெஸ் இல்லை, சரியான சாப்பாடு இல்லை. ஆனா, என்கிட்ட இருக்குற அதிகபட்சத் திறமையை நான் வெளிக்காட்டியாகணும். அப்போ உலகம் முழுக்க இருந்து வந்திருந்த போட்டியாளர்கள் என் கண்ணுக்குத் தெரியலை. எனக்கு நானேதான் போட்டியாத் தெரிஞ்சேன். 'உடம்புக்கு உள்ளேயும் வெளியேயும் நார்மலா இல்லாம, இந்தப் போட்டியில் உன்னால எவ்வளவு தூரம் தாக்குப்பிடிக்க முடியும்?'கிற கேள்விக்குப் பதில் தேடுறதுதான் அப்போ எனக்குச் சவாலா இருந்துச்சு. 'எல்லாரும் நீ போட்டிருக்கிற டிரெஸ்ஸைப் பார்க்க இங்கே வரலை. உன் வேலை என்னவோ, அதை மட்டும் பாரு'ன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.


முதல் கேம்ல எதிராளி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடியே ஜெயிச்சேன். அதே வேகத்தோடு ஒவ்வொரு கேம்லயும் அடிச்சு ஃபைனல்ஸூக்கு வந்தேன். அங்கே காத்துட்டு இருந்தது, என் கூடவே வந்திருந்த நம்ம நாட்டு பிளேயர்தான். எதையும் மனசுல ஏத்திக்காம விளையாடினேன். ஜெயிச்சுட்டேன். உலக சாம்பியன்! மனதளவிலும் உடலளவிலும் நான் ரொம்ப உடைஞ்சுகிடந்த நேரத்துல நான் சந்திச்ச உச்சகட்ட வெற்றி!


சரியான சமயத்துல சரியான முடிவெடுக்குறது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் தப்பான சமயத்துல தப்பான முடிவு எடுக்காம இருக்குறதும்னு உணர்ந்த நாட்கள்!''

''எங்கப்பா மீன்பாடி வண்டி ஓட்டியே கஷ்டப்பட்டுட்டு இருந்தாரு. இப்ப கொஞ்ச நாளுக்கு முன்னாடி அவருக்கு டாடா ஏஸ்னு மினி லாரி வாங்கிக் குடுத்தேன். அன்னிக்கு அவர் கண்ணுல அவ்வளவு சந்தோஷம்! 'நீ பையனா பொறந்திருந்தாக்கூட இப்படி எல்லாம் செஞ்சிருப்பியா?'ங்கிற கேள்வி அவர் பார்வையில தெரிஞ்சது. அவரும் வாய்விட்டுக் கேக்கலை. நானும் பதில் சொல்லலை. இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கே!''