Digital Time and Date

Welcome Note

Sunday, October 7, 2012

முஹம்மது (ஸல்) அவர்களின் மறுபக்கம்


இறைவனின் திருப்பெயரால் ...

அது கி.பி. ஆறாம் நூற்றாண்டு!


உலகின் மையப்பகுதியான அரேபிய தீபகற்பத்தில் ஒரு பகுதி தனித்து விடப்பட்டிருந்தது. அண்டை நாடுகளை வேட்டையாடி அடிமைப்படுத்துவதில் மும்முரமாக இருந்த ரோம, பாரசீகப் பேரரசுகள்கூட அந்தப் பகுதியைப் பற்றி சிந்தித்தது கிடையாது. காரணம் அங்கு வசித்த மக்களும் அவர்கள் வாழ்ந்த
சூழலும். அந்த நகரம் மக்கா. அந்த மக்கள் காட்டுமிராண்டிகளாக,
கல்வியறிவற்றவர்களாக, நாகரீகம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களாக வாழ்ந்து வந்தனர். கொலை, கொள்ளை, மது, விபச்சாரம், நிர்வாண வழிபாடுகள், பரம்பரைச் சண்டைகள் என்று அவர்களது வாழ்வின் எல்லா நிலைகளிலும் தீமைகளும்
அனாச்சாரங்களும் நிரம்பி வழிந்தன.


ஆனால் வெறும் 23 ஆண்டுகளில் அம்மக்களைப் பண்பட்டவர்களாக, இன்றைய நவீன உலகிற்கு நாகரிகத்தின் அடிப்படையக் கற்பிக்கக் கூடியவர்களாக, உலகின் பெரும்பகுதியை ஆட்சி செய்யும் தகுதியுடையவர்களாக மாற்றிக்காட்டினார் ஒரு தனி மனிதர்! அவர்தான் இறைவனின் தூதர் முஹம்மது நபி(ஸல்*) அவர்கள்.

தீமைகள் தலைவிரித்தாடிய அந்தக் காலகட்டத்திலும் முஹம்மது (ஸல்) அவர்கள் தூய்மையானவராக, வாய்மையானவராக, நேர்மையானவராகத் திகழ்ந்தார்கள். “நான் இன்று இத்தனை பெண்களுடன் விபச்சாரம் செய்தேன்“ என்று பெருமையாகச்
சொல்லிக்கொண்ட மக்களின் மத்தியில் பிற பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத உத்தமராக வாழ்ந்தார்கள். அனாச்சாரங்களைக் கலாச்சாரங்களாகக் கொண்டு
வாழ்ந்த மக்களாலும் "அல் அமீன் – நம்பிக்கைக்குரியவர், அஸ்ஸாதிக் – உண்மையாளர்" என்று கண்ணியத்துடன் அழைக்கப்பட்டார்கள் முஹம்மது (ஸல்).


நற்பண்புகளின் மணிமகுடமாக விளங்கிய அவரை இறைவன் தன் தூதராகத் தேர்ந்தெடுத்தான். அறியாமையிலும் மடமையிலும் மூழ்கியிருந்த அந்த மக்களை நேர்வழிப்படுத்தும் பொறுப்பை அவருக்கு வழங்கி அவரை கண்ணியப்படுத்தினான்.


இறைவனின் தூதராகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்தியை அம்மக்கள் மத்தியில் நபி (ஸல்) அறிவித்தபோது, ‘உண்மையாளர், நம்பிக்கைக்குரியவர்’ என்று போற்றிய அதே மக்கள் அவரைப் பொய்யன் என்றும், புத்திபேதலித்தவர் என்றும் தூற்றினர். சொல்லொணாத் துயரங்களை அவருக்கும், அவரைப்
பின்பற்றியவர்களுக்கும் கொடுத்தனர். இறைவனை வணங்கிக்
கொண்டிருக்கும்பொழுது ஒட்டகத்தின் அழுகிய குடலை அவர் முதுகில் வைத்துத் துன்புறுத்தினர்; துண்டால் முகத்தை மூடி மூச்சடைக்கச் செய்தனர்; சிறுவர்களை ஏவி, கல்லால் அடித்துக் காயப்படுத்தினர். அவருடைய தோழர்களை, சுடுமணலில், கடும் வெயிலில் வெறும் உடம்புடன் படுக்க வைத்து, பாறாங்கல்லை
உடம்பில் வைத்தனர். கழுமரத்தில் ஏற்றி உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை அம்புகளால் தைத்தனர். ஒரு பெண் என்றும் பாராமல் சுமையா (இறைவன் அவரைப் பொருந்திக் கொள்வானாக) என்பவரை மர்ம உறுப்பில் ஈட்டியைப் பாய்ச்சிக்
கொன்றனர். உச்சகட்டமாக, பிறந்து-வளர்ந்த மண்ணைவிட்டே வெளியேற்றினர். ஆனால் இவை யாவற்றையும் அவரும் அவருடைய தோழர்களும் பொறுமையுடனும்,
புன்முறுவலுடனும் சகித்துக் கொண்டனர்.
மக்காவை விட்டு வெளியேறி, அருகில் இருந்த மதீனா என்ற நகரத்துக்குச் சென்றனர். அங்கு வாழ்ந்த மக்கள் அவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்து, அவரை ஏற்றுக் கொண்டனர். அவர்களைக் கொண்டு ஒரு நல்லரசை முஹம்மது(ஸல்)
அவர்கள் அங்கே நிறுவினார்கள். இஸ்லாத்தை ஏற்காத மக்களை அவர்கள் விரும்பிய மதங்களைப் பின்பற்ற அனுமதி வழங்கினார்கள். யாரையும் கட்டாயமாக மதம் மாறும்படி நிர்பந்திக்கவில்லை.


இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு படையெடுத்து வந்த மக்காவாசிகளை எதிர்த்து, முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் கட்டளையைப்படி போர் புரிந்தார்கள். அவற்றில் வெற்றியும்பெற்றார்கள். அப்போர்களில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும்
சரணடைந்தவர்களைத் தாக்கக் கூடாது என்றும், நிழல் தரும் மரங்களை வெட்டக் கூடாது என்றும், வழிபாட்டுத் தலங்களையும் மத குருமார்களையும் தாக்கக் கூடாது என்றும் தம் படையினருக்கு உத்தரவிட்டு போர்மரபுகளைக் கட்டிக் காத்தார்கள். அருகில் வசித்து வந்த யூதக் குலங்களுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை மீறாமல் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினார்கள்.


இன்னொரு குலத்தாரின் ஒட்டகம், தெரியாமல் தன் நீர்நிலையில் தண்ணீர் அருந்தியதற்காகக் காலம் காலமாக சண்டையிட்டுக் கொண்டவர்களை ஒருவருக்கொருவர் உதவி செய்பவர்களாக, உடன்பிறவா சகோதரர்களாக மாற்றினார்கள். பீப்பாய் பீப்பாய்களாக வீட்டில் அடைத்துவைத்து மது அருந்தியவர்களை, “மது தடை செய்யப்பட்டுவிட்டது” என்ற இறைவனின் கட்டளை
இறங்கியவுடன் வாய்க்குள் விரல் விட்டு வாந்தியெடுத்தவர்களாக,
மதுக்குடங்களை உடைத்துத் தெருவெல்லாம் மதுஆறு ஓடச் செய்தவர்களாக ஆக்கினார்கள். பொழுதுபோக்கைப்போல் விபச்சாரம் செய்தவர்களை அந்நியப் பெண்களை ஏறெடுத்துப் பார்க்காதவர்களாக, ஆண்களோடு இரண்டறக் கலந்து
நிர்வாண வழிபாடுகள் செய்த பெண்களை, அந்நிய ஆண்களிடமிருந்து தங்கள் உடல் உறுப்புகளை மறைக்கும் வகையில் கண்ணியமான ஆடை உடுத்துபவர்களாக
பக்குவப்படுத்தினார்கள். பொய், கொலை, கொள்ளை போன்ற தீமைகளை அவர்கள் வாழ்விலிருந்து இல்லாமல் ஆக்கினார்கள்.


எந்த நாட்டிலிருந்து விரட்டியடித்தார்களோ அந்த மக்காவை வெற்றிகொண்ட பிறகு, தமக்கும் தம் குடும்பத்தார்க்கும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறையாக ஏற்றுக் கொண்ட மக்கத்து முஸ்லிம்களுக்குத் துன்பம் தந்த மக்களுக்குப்
பொதுமன்னிப்பு வழங்கி, தமது பெருந்தன்மையை உலகிற்கு உணர்த்தினார்கள். ஏற்கனவே பதவி வகித்தவர்களை அதே பதவிகளில் தொடரச் செய்தார்கள். அடிமைத் தளையை ஒழித்தார்கள். பெண்சிசுக் கொலையை அறவே அழித்தார்கள். பெண்களுக்குச் சொத்துரிமை பெற்றுத் தந்தார்கள். வறுமை இல்லாத சமுதாயத்தை உருவாக்கிக்காட்டினார்கள். ஓரினச் சேர்க்கையையும் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வதையும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தார்கள். நள்ளிரவில்
ஒரு பெண் நாட்டின் ஒரு எல்லையிலிருந்து இன்னோர் எல்லைக்குத் தனியாகப் பயணம் செய்யக் கூடிய அளவிற்குப் பாதுகாப்பான அரசை கட்டமைத்தார்கள். பொறுப்பில் உள்ளவர்களை மக்களுக்கு உண்மையாக சேவையாற்றுபவர்களாகவும், எளிதில் அணுகக் கூடியவர்களாகவும், எளிமையாகவும் வாழச் செய்தார்கள்.


அரசின் தலைவராக இருந்தபோதும்கூட முஹம்மது(ஸல்) அவர்கள் இறுதிக்காலம் வரைக்கும் ஏழ்மையிலேயே வாழ்ந்தார்கள். தம் வாழநாளில் ஒரு போதும் வயிராற உணவு உண்டதில்லை. யார் மீதும் கோபப் பார்வை பார்த்தது கிடையாது. யாரையும் கடிந்து பேசியது இல்லை. பெரியவர்களுடன் மரியாதையுடனும், சிறியவர்களுடன் அன்புடனும் நடந்து கொண்டார்கள். உதவி என்று வந்தவர்களுக்கு இல்லை என்று ஒருபோதும் சொன்னதில்லை. விதவைகளுக்கு வாழ்வளித்தார்கள்.


நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக, ஒரு நாட்டின் தலைவராக, கணவராக, தந்தையாக, நண்பராக, வீரராக வாழ்ந்து உலகம் உள்ளவரை வரலாற்றில் நீங்கா இடம்பெற்றவராகத் திகழ்கிறார்கள். அவரை உயிரினும் மேலாய் மதிக்கக்கூடிய பல கோடிக்கணக்கான மக்களை உருவாக்கிய, அவரது போதனைகள் மூலம் இந்த உலகம்
உள்ளவரை இன்னும் பல கோடிக்கணக்கானோரை உருவாக்கக் கூடிய உன்னதத் தலைவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.


அதனால்தான் உலகம் தோன்றியது முதல் இன்றுவரை செல்வாக்கு மிக்க நூறு தலைவர்களைக் குறித்து மைக்கேல் H.ஹர்ட் என்ற அறிஞர் எழுதிய “The Hundred” என்ற புத்தகத்தில் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு முதலிடத்தை வழங்கியுள்ளார். அதற்கு அவர் கூறியுள்ள காரணம், “உலகில் தோன்றிய தலைவர்கள் எல்லாம்
ஏதெனும் ஒரு துறையில் மட்டுமே சிறந்து விளங்கியுள்ளனர். ஆனால் முஹம்மது(ஸல்) அவர்கள் மட்டுமே அரசியல், ஆன்மீகம், குடும்பம், கல்வி, பொருளாதாரம் என்று எல்லா துறைகளிலும் தனி முத்திரை பதித்துள்ளார் “.


அவருடைய வரலாறு முழுவதும் உள்ளது உள்ளபடி திறந்த புத்தகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறு யாருடைய வாழ்வும் இவ்வாறு பதிவு செய்யப்படவில்லை. அவரைப்போன்ற ஒரு மனிதர், தலைவர் உலகில் அவருக்கு முன்பும் தோன்றியதில்லை; உலகம் அழியும்வரை இனியும் தோன்றப் போவதில்லை.


உலகம் போற்றும் இத்தகைய ஒப்பற்ற மனிதரைக் குறித்து அறிந்த யாரும் அவரைப் பற்றி மறந்தும்கூட தவறாகச் சிந்திக்க மாட்டார்கள். அவரைத் தூற்றியோ, இழிவுபடுத்தியோ இன்னும் எத்தனை நிகழ்வுகள் நடந்தாலும் அவை யாவும் அவரைப்
பற்றியும் அவர் கொண்டுவந்த தூதுச் செய்தியை உலக மக்கள் இன்னும் அதிகமாகப் புரிந்து கொள்ள உதவுமேயன்றி அவருக்கு எதிராக ஒரு கரும்புள்ளியைக்கூட அறிவுடையவர்கள் மனத்தில் ஏற்படுத்திவிட முடியாது.


“அவரிடம் உங்கள் அனைவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரி உள்ளது” அல்-குர்ஆன் 33:21.


(* ஸல் – ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் என்ற அரபி வார்த்தையின் சுருக்கம்..”இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாகட்டும்" என்பது அதன்
பொருள்).


ஜசகல்லாஹ் கைர் சகோ. R. அபுல் ஹசன்
Reference By: www.satyamargam.com

இவன்

முஹம்மது இக்பால், ( Mohamed Iqbal Basheer Ahamed )
அமீர் , இஸ்லாமிய தவாஹ் குழுமம் http://www.facebook.com/groups/islamicdawah1

Join our Islamic Dawah Group: http://www.facebook.com/groups/islamicdawah1/

Join with us : http://www.facebook.com/CuddaloreMuslimFriend

No comments:

Post a Comment