Digital Time and Date

Welcome Note

Thursday, December 13, 2012

60 வயதிலும் நிமிரலாம்.. குனியலாம்!

''ச்சே! வயசானதும் நாம நாமாளாகவே இருக்க முடியலை... கொஞ்ச நேரம் சேர்ந்தாற்போல நிற்க முடியலை, மாடிப்படி ஏறி இறங்க முடியலை... எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கு!'' - இப்படி நம் வீடுகளில் தாத்தா, பாட்டிகள் புலம்புவதைப் பார்த்து இருப்போம். அவர்களின் சிரமங்களைப் பார்த்து நம் மனமும் சிரமத்துக்கு உள்ளாகும். பெரியவர்களின் இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் உடற்பயிற்சிகளில் தீர்வு இருக்கிறது என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். 'வயதானவர்களால் உடற்பயிற்சிகள் செய்ய முடியாதே?’ என்று சிலர் கேட்கலாம்! ''அப்படி எல்லாம் எதுவும் இல்லை. வயதானவர்களுக்கு என்றே சில பிரத்யேகமான உடற்பயிற்சிகள் இருக்கின்றன!'' என நம்பிக்கை வார்க்கும் பயிற்சியாளர் மாரியப்பன், அவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்று ஒரு செயல்முறை விளக்கமும் கொடுத்தார்.



''உடற்பயிற்சி செய்ய வேண்டிய வயதானவர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒரு வகையினர் இயல்பான நிலையில் பயிற்சிக்கு வருபவர்கள். மற்றொரு வகையினர் உடலின் சில பாகங்களில் பாதிப்பு ஏற்பட்டு, அதைக் குணப்படுத்தும் நோக்கில் பயிற்சி எடுத்துக்கொள்ள வருபவர்கள். எந்த வகையினராக இருந்தாலும் பயிற்சிகளைத் தொடங்கும் முன்னே அவர்களை டாக்டர் மற்றும் ஃபிசியோதெரபிஸ்ட்டிடம் அனுப்பி அவர்களின் உடலை முழுவதும் பரிசோதனை செய்தபின் அவர்களது வழிகாட்டுதல்பேரில்தான் பயிற்சிகளைத் அளிக்கத் தொடங்க வேண்டும்.

முதலில் எளிய வகை வார்ம் - அப் பயிற்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் ரத்த ஓட்டம் சீராகி, பயிற்சிக்காகத் தசைநார்கள் தயாராகும். அதன் பின்னர் சில 'ஸ்ட்ரெட்ச்’ வகைப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். மேலும் இவ்வகைப் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது வலி ஏற்பட்டால் உடனடியாக நிறுத்திவிடுவது நல்லது.

கால்ஃப் முறை (Calf stretch)

முதலில் ஒரு சுவரின் அருகில் நேராக நிற்கவும்.

ஒரு காலை நன்றாகத் தரையில் ஊன்றிக் கொண்டு இன்னொரு காலைப் படத்தில் காட்டி உள்ளபடி சுவற்றில் வைக்கவும்.

சுவரைத் தொட்டபடி இருக்கும் காலுக்கு மெதுவாக அழுத்தம் கொடுத்துப் 10 முதல் 20 வினாடிகள் வரை நிற்கவும்.

பிறகு கால்களை மாற்றி இதேபோல மீண்டும் செய்யவும்.

இதுபோன்று ஒவ்வொரு முறையும் மூன்று முறை என ஒரு நாளைக்கு நான்கு வேளை செய்ய வேண்டும்.

பலன்கள்

ரத்த ஓட்டம் சீராகும், பயணங்களின் போது கணுக்கால் மற்றும் பாதங்களைச் சுற்றி ஏற்படும் வீக்கம் குறையும். குதிக்கால் வலி நீங்கும்.



ஹாம்ஸ்டிரிங் (Hamstring)

தரையில் கால்களை நீட்டியபடி நேராக உட்காரவும்.

முடிந்தவரை கால் முட்டிகளை மடக்காமல் அதே சமயம் முதுகையும் வளைத்து, கால் கட்டை விரல்களைத் தொடுவதற்கு முயற்சிக்கவும்.

திரும்பப் பழைய நிலைக்கு வந்து மீண்டும் இதேபோல செய்யவும்.

பலன்கள்

முதுகுவலி நீங்கும். முதுகுப் பகுதியின் வளைந்துக் கொடுக்கும் தன்மை அதிகமாகும்.

ஐ.டி பேன்ட் ஸ்ட்ரெட்ச் (IT band stretch)

நேராக நிற்கவும்.

கால் முட்டியை நோக்கிக் கைகளை நீட்டிய நிலையில் மெதுவாகக் குனிந்து நிற்கவும்.

அப்படியே 45 டிகிரி கோணத்தில் படத்தில்காட்டி உள்ளபடி வலது பக்கமாக மெதுவாக உடலை மட்டும் திருப்பவும்.

இந்த நிலையில் 15 வினாடிகள் நிற்கவும்.

மெதுவாகப் பழைய நிலைக்குத் திரும்பவும்.

இப்போது இந்தப் பயிற்சியை இடது பக்கமாக உடலைத் திருப்பிச் செய்யவும்.

இதுபோன்று ஒவ்வொரு முறையும் மூன்று முறை என ஒரு நாளைக்கு நான்கு வேளை செய்ய வேண்டும்.

பலன்கள்

மூட்டுப் பகுதியில் இருக்கும் வலி குணமாகும்.



குவாட் ஸ்ட்ரெட்ச் (Quad stretch)

நேராக நிற்கவும்.

படத்தில் காட்டி இருப்பது போல வலது காலை வலது கையால் மெதுவாக மடக்கிப் பிடித்துக்கொள்ளவும்.

இவ்வாறு 15 வினாடிகள் நிற்க வேண்டும்.

திரும்ப இயல்பு நிலைக்கு வந்து மற்றொரு காலிலும் செய்ய வேண்டும்.

உடலைச் சிரமப்படுத்தாமல் இப்படி எத்தனை முறை முடிகிறதோ அத்தனை முறை செய்யலாம்.

எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் இந்தப் பயிற்சியைச் செய்யச் சிரமமாக இருந்தால் இன்னொரு கையால் பக்கத்தில் இருக்கும் சுவரைப் பிடித்துக் கொள்ளலாம்.

பலன்கள்

நீண்ட நேரமாக உட்கார்ந்து இருந்ததாலும் நடந்ததாலும் ஏற்படும் மூட்டு வலி குறையும். சிரமப்படாமல் உட்கார்ந்து எழுந்திரிக்கவும், மாடிப்படிகள் ஏறி இறங்கவும் உதவும்.

க்லூட்டஸ் ஸ்டிரெட்ச் (Glutes stretch)

கால்களை நீட்டியபடி நேராக அமர்ந்துகொள்ளவும்.

முடிந்தவரை முதுகை நேராக வைத்துக்கொண்டு படத்தில் காட்டி உள்ளபடி இடது காலை வலது காலுக்கு மறுபக்கமாக வைத்துக்கொள்ளவும்.

பிறகு கைகளைக் கோர்த்துக்கொண்டு உடலை வலது பக்கமாக சிறிது திருப்பவும்.

பிறகு மெள்ளப் பழைய நிலைக்குத் திரும்பி மறு பக்கத்துக்கும் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.

இதுபோன்று ஒவ்வொரு முறையும் மூன்று முறை என ஒரு நாளைக்கு நான்கு வேளை செய்ய வேண்டும்.

பலன்கள்

முதுகுப்பகுதி பலம் பெறும்.

சூப்பர்மேன் நிலை - வலுப்படுத்தும் பயிற்சி (Superman position)

முதலில் குப்புறப் படுத்துக்கொள்ளவும்.

படத்தில் காட்டி உள்ளபடி இடது காலை உயர்த்தி, அதேசமயம் வலது கையை நீட்டியபடி உயர்த்தவும்.

பிறகு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி காலையும் கையையும் மாற்றி இதேபோலச் செய்ய வேண்டும்.

பலன்கள்

ரத்த ஓட்டம் சீராகும். முதுகுத்தண்டு பலம் பெறும்.

இங்கு குறிப்பிட்டு இருக்கும் பயிற்சிகள் அனைத்தையும் உரிய மருத்துவ ஆலோசனைகள் பெற்றுதான் மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment