Digital Time and Date

Welcome Note

Saturday, February 23, 2013

2013-ல் இந்திய இணையம்

இந்தியாவில் இணையப் பயன்பாடு 2013 ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளில், அதன் பொற்காலத்தைக் காண இருக்கிறது எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இணைய வழி வர்த்தகம் மிக வேகமாக வளரும் என்றும், அதன் சார்பான இணையப் பயன்பாடு தற்போது இருப்பதனைக் காட்டி லும் அதிக வளர்ச்சி பெறும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற இருப்பதைக் கவனத்தில் கொள்ளும் முன், இந்த 2013 ஆம் ஆண்டில் எந்த எந்த வகைகளில், பிரிவுகளில் இணைய வளர்ச்சி இந்தியாவில் இருக்கும் என்பதனைக் காணலாம்.

ஏறத்தாழ 15 கோடி இணைய பயனாளர்களுடன், இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. 57.5 கோடி பேருடன் சீனா முதல் இடத்திலும், 27.5 கோடி பேருடன் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளன. ஜனத்தொகையுடன் கணக்கிடுகையில், இந்தியாவில் இணையப் பயனாளர்கள் 12%. சீனாவில் இது 43% ஆகவும், அமெரிக்காவில் 80% ஆகவும் உள்ளது. குறைவாக உள்ளதாலேயே, இந்தியாவில் வரும் ஆண்டுகளில், மிக வேகமான அளவில் வளர்ச்சி வீதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் விரிவடைந்து வருகின்றன. இணைய வழி வர்த்தகம், இணையத்தில் விளம்பரம், சமூக ஊடக வளர்ச்சி, தேடல், இணைய வெளி தகவல்கள், இணைய வழி வர்த்தக சேவை மற்றும் சார்ந்த நடவடிக்கைகள் என பல பிரிவுகளில் இந்த வளர்ச்சியைக் காணலாம். குறிப்பிட்டு சில தளங்களில் 2013 ஆம் ஆண்டில், மேற்கொள்ளப்பட இருக்கிற வளர்ச்சி குறித்த தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

1. பயனாளர்கள் 15% கூடுதல்:

நடப்பு நிதியாண்டில், மேலும் 3 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்குவார் கள். மொத்த இணையப் பயனாளர் எண்ணிக்கை 18 கோடியாக உயரும். அதாவது, இந்திய ஜனத்தொகையில் இது 20% ஆக இருக்கும்.

2. இணைய நேரம் அதிகரிக்கும்:


இணையத்தில், இந்தியாவில் உள்ள ஒருவர் சராசரியாக வாரம் ஒன்றுக்கு 13 மணி நேரம் செலவிடுகிறார். இது இனி 16 வாரமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரம் பெரும்பாலும், இணைய வர்த்தகம், சமூக தளங்கள், போட்டோ மற்றும் வீடியோ பகிர்வு, இணையப் பயன்பாடுகள், வங்கி மற்றும் பிற நிதி பரிமாற்றங்களில் மேற்கொள்ளப்படும்.

3. மொபைல் இணையப் பயன்பாடு:

மொபைல் வழி இணையப் பயனாளர் எண்ணிக்கை, இந்த ஆண்டில் 10 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த எண்ணிக்கை 9 கோடியே 50 லட்சமாக உள்ளது. உயர்வு 6% லிருந்து 10% வரை இருக்கலாம்.

4. பெண்கள் மற்றும் வீட்டில் அதிகப் பயன்பாடு:
இதுவரை இணையப் பயன்பாடு, ஆண்களே அதிகம் மேற்கொள்வதாக இருந்து வருகிறது. இந்த ஆண்டில் அதிகம் பெண்களை இணையத்தில் எதிர்பார்க்கலாம். அதே போல கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படும் இணையம், இனி வீடுகளிலிருந்தும் அதிகம் பயன்படுத்தப்படும். இதற்குக் காரணம், குறிப்பிட்ட சாரார் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த இணையம், இனி, பொதுமக்கள் சாதனமாக மாற இருக்கிறது.

5. இணைய வழி வர்த்தக வருமானம் உயரும்:

இணைய வழியில் கிடைக்கும் வர்த்தக வருமானம் 2012 ஆம் ஆண்டில், 55 கோடி டாலராக இருந்தது. இது இந்த ஆண்டில் 90 கோடியாக உயரும் வாய்ப்பு உள்ளது.

6. வளரும் நகரங்களில் இனி வளரும்:

தற்போது குறிப்பிட்ட சில பெரிய நகரங்களில் மட்டுமே அதிகம் காணப்படும் இணைய வர்த்தகம் (45% முதல் 65% வரை ), இனி வளரும் நகரங்களிலும் அதிகம் இருக்கும். இந்தியாவின் முதல் 40 நகரங்களை அடுத்து உள்ள நகரங்களே இவை.

7. இணைய விளம்பரம் அதிகரிக்கும்:

இந்திய இணையத்தில் வளர்ச்சி காண இருக்கும் துணைத் தொழில் பிரிவுகளில், இணைய விளம்பரம் முதல் இடம் பெறும். 2012ல், இந்த வகை வருமானம் 30 கோடி டாலராக இருந்தது. நடப்பு ஆண்டில், இது இரு மடங்காக உயர்ந்து 60 கோடி டாலராக வளரும்.

8. இணைய நிறுவனங்களுக்கு மூலதன நிதி:

புதிய பிரிவுகளில், பல இணைய சேவை நிறுவனங்கள் தோன்றி வருகின்றன. ஆனால், எப்போதும் போல இவற்றிற்கான மூலதன நிதி கிடைப்பது கடினமாகவே உள்ளது. இந்த ஆண்டில் இது சிறிது எளிமைப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

இணையப் பயன்பாடும் வர்த்தகமும் அதிகரித்து வருவதால், இப்பிரிவில் ஈடுபட்டு வரும் இணைய நிறுவனங்கள் இணைந்து செயல்படும் சூழ்நிலை ஏற்படலாம். அதே போல, மும்பை, டில்லி, பெங்களூரு, சென்னை, புனே என்று சில குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் இந்த நிறுவனங்கள் செயல்படாமல், அடுத்த நிலை நகரங்கலில் இவை தொடங்கப்பட்டு செயல்படலாம்.

கம்ப்யூட்டர் மலர்

No comments:

Post a Comment