“குர்ஆன் கல்வியில் எனது ஆர்வத்தை தூண்டியது. பட்டத்தைப்பெற வேண்டும் என்ற ஆசையை வளர்த்தது. அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொண்டவர்க்கு வெற்றி நிச்சயம். எனது அநுபவத்தில் நான் சொல்லுவேன், குர்ஆன் மனனமிடும் சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது, நினைவாற்றலை வலுப்படுத்துகின்றது”
ஹஸ்னா கூலாலி – கடந்த 2012 ஜுலை 15 ஆம் திகதி மலேசியாவில் நடைபெற்ற 54 வது சர்வதேச கிறாஅத் போட்டியில் பெண்கள் பிரிவில் 94% புள்ளி பெற்று முதலிடம் வென்றார்.
வெற்றி பெற்றமைக்கான விருது, பங்கேற்றலுக்கான சான்றிதழுடன் 40,000 மலேசிய ரிங்கிட் பணப் பரிசையும் மலேசிய மகாராணி பெட்ரதல்ஹா அல் இஸ்ரா கைகளினால் பெற்றுக்கொண்டார். மேலும், சர்வதேச கிறாஅத் போட்டி வரலாற்றில், சர்வதேச கிராஅத் போட்டியில் வெற்றியீட்டிய முதலாவது மொரொக்கோ தேசத்தவர் மற்றும் முதலாவது அரேபிய பெண் என்ற பெருமையையும் ஹஸ்னா கூலாலி தமதாக்கிக்கொள்கின்றார்.
1993 ஆம் வருடம் சாலா என்ற நகரில் பிறந்த ஹஸ்னா கூலாலி, தற்போது ரபாத் நகரில் அமைந்துள்ள மன்னர் 5 ஆம் முஹம்மத் அல் ஸுவய்சீ பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கைத் துறையில் 3 ஆம் வருடம் பயிலும் 19 வயது மாணவியாவார். தஃவாத் துறையில் கால்பதிக்க வேண்டும் என்பது இவரின் எதிர்கால இலட்சியம்.
• மலேசியாவில் பெற்ற வெற்றியைப் பற்றி குறிப்பிடுங்கள்:
ஹஸ்னா – ஆம்! நாட்டுக்கு (மொரொக்கோ) வெளியில் பெற்ற முதலாவது வெற்றி, அல்ஹம்துலில்லாஹ். இது அல்லாஹ்வின் அருள். இதன் உறுதியையும் உளத் தூய்மையையும் அவனிடம் வேண்டுகின்றேன்.
• வெற்றியாளராக உங்கள் பெயர் அறிவிக்கப்பட்டதும் உங்கள் மனநிலை எப்படி இருந்தது:
ஹஸ்னா – பூரித்துப்போனேன்… மலேசியாவின் மன்னருக்கும் மகா ராணிக்கும் முன்னிலையில் எனது பெயர் கூறப்பட்டவுடன் எனது நாட்டுக்கும் அறிவூட்டியவர்களுக்கும் நன்றி கூறினேன். நாட்டின் கொடியை முத்தமிட்டேன்.
• உங்கள் வெற்றியை உள்நாட்டில் எவ்வாறு மதிப்பீடு செய்தார்கள்:
ஹஸ்னா – தொலைக்காட்சியில் என்னை நேர்கண்டார்கள், மக்களுக்கு என்னை அறிமுகப்படுத்தினார்கள். நான் கல்வி பயிலும் பல்கலைக்கழகத்தில் மன்னர் 6 ஆம் முஹம்மத் வழங்கிய சிறப்பு அன்பளிப்பு வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.
• குர்ஆனை மனனமிடவும் தஜ்வீத் கலையைக் கற்கவும் எப்பொழுது ஆரம்பித்தீர்கள்?
ஹஸ்னா – எனது அறிவுப் பயணத்தை சிறிய வயதில் ஆரம்பிக்கவில்லை. அப்போது எனக்கு 12 வயதிருக்கும். தொலைக்காட்சியில் விவரணமொன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எனது தந்தை தொலைக்காட்சியை அணைத்துவிட்டு சீடீ ஒன்றை போட்டார். தந்தையின் செயல் எனக்குக் கோபத்தைத் ஊட்டியது. நான் அங்கிருந்து எழுந்தேன். அது கிறாஅத் ஓதல் அடங்கிய சீடீ. நான் அந்த கிறாஅத்தில் இலயித்தேன். அதில் கிறாஅத் ஓதிய ஷேக் என் மனதில் ஆழப்பதிந்தார். உண்மையில் அப்போது எனக்கு தஜ்வீத் என்ற சொல்கூட தெரியாது. எனது தந்தையிடம் இந்த ஓதல் பற்றி வினவினேன். அவர் சீடீயின் உதவியுடன் கற்றுத் தந்தார். பிறகு தஜ்வீத் கலையைக் கற்க ஆரம்பித்தேன். எனது 16 ஆம் வயதில் குர்ஆனை மனனமிட ஆரம்பித்தேன். 18 ஆம் வயதில் குர்ஆனை முழுமையாக மனனமிட்டு முடித்தேன்.
• பல்கலைக்கழக பாடங்களுக்கு மத்தியில் குர்ஆனை மனனமிடுவதை எவ்வாறு சமநிலை படுத்திக்கொண்டீர்கள்?
ஹஸ்னா – “குர்ஆன் கல்வியில் எனது ஆர்வத்தை தூண்டியது. பட்டத்தைப்பெற வேண்டும் என்ற ஆசையை வளர்த்தது. அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொண்டவர்க்கு வெற்றி நிச்சயம். எனது அநுபவத்தில் நான் சொல்லுவேன், குர்ஆன் மனனமிடும் சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது, நினைவாற்றலை வலுப்படுத்துகின்றது”.
• குர்ஆனை மனனமிட எவ்வளவு நேரம் எடுப்பீர்கள்?
ஹஸ்னா – எனது நாள் சுபுஹுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னிருந்து ஆரம்பமாகும். மனனமிட்ட பகுதியை சுபுஹுத் தொழுகையில் மீட்டுவேன். மனனமிட்ட பகுதி மனதில் பதிந்துவிட்டதா என உறுதி செய்துகொள்வேன். வார இறுதியில் வாரம் முழுவதும் மனனமிட்டதை மீட்டுவேன். இவ்வாறு சுயமாக மனனத்தை மதிப்பீடு செய்துகொள்வேன். இந்த ஒழுங்கில் குர்ஆனை முழுமையாக மனனமிட்டு முடித்தேன். மீண்டும் சொல்வேன், இது அல்லாஹ்வின் அருள்!
• எந்த ஷேக் (காரி)யுடைய கிராஅத் உங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது?
ஹஸ்னா – மொரொக்கோவைச் சேர்ந்த ஷேக் அப்துர் ரஹ்மான் பின்மூஸா ஓதும் விதம் எனது உள்ளத்திற்கு மிகவும் நெருக்கமானது. ரமழானில் ஷேக் உமர் கஸாபிரி அவர்களின் பின்னால் நின்று தராவீஹ் தொழுவது விருப்பமானது. எனது ஆசான் ஷேக் கந்தாவியின் கிராஅத்தை விரும்பி கேட்பேன்.
• சர்வதேச வெற்றியுடன் நாடு திரும்பும் போது உங்களுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு எவ்வாறிருந்தது?
ஹஸ்னா – உண்மையில் எவரும் வரவில்லை. எனது குடும்பத்தவரும் உறவினர்களும் இல்லையென்றால் தனிமையில்தான் வீடு போய் சேர வேண்டியிருந்திருக்கும். அதை நான் அலட்டிக்கொள்ளவில்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி போட்டிக்குச் சென்றேன். எனது நாட்டின் பெயரை உயர்த்த வேண்டும் என்று விரும்பினேன். எனது பெயர் பெரிசுபடுத்தப்படுவதை நான் எதிர்பார்ப்பதில்லை. அல்லாஹ்வின் நற்கூலிதான் பெரியது, அல்ஹம்துலில்லாஹ்.
ஹஸ்னா கூலாலி, சராசரி மொரொக்கோ மக்களைப் போல் நற்பு மனங்கொண்டவர். அவர் தன்னை ஊக்கப்படுத்தியவர்களை மறக்கவில்லை, “நாம், மொரொக்கோவாசிகள் என்ற வகையில் குர்ஆனின் தேசத்தினர் என்ற அடையாளம் குறித்து பெருமைப்பட வேண்டும். மேலும், எனக்கு ஒத்துழைப்பு நல்கிய சமூக வலைத் தளங்களுக்கும் குறிப்பாக பேஸ்புக் நண்பர்களுக்கும் எனது விசேட நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்”
நாம், ஹஸ்னா கூலாலி பெற்ற வெற்றிக்கும் அவரது முன்மாதிரிகளுக்கும் வாழ்த்துக்களையும் பிரார்த்தனையையும் எத்திவைப்போம்!
ஹஸ்னா கூலாலி விருது பெறும் காட்சிகளுடன் கிராஅத் ஓதுவதை கீழ்தரும் லிங்கில் பார்வையிடலாம்: http://puttalamonline.com/videoshare/inner.php?id=83
உபயம்: ஹெச்பிரச் ‘Hespress’ இலத்திரணியல் சஞ்சிகை (அரபு) மொரொக்கோ வழங்கிய செவ்வியல்
தமிழில்: மர்சூக் ஹலீம் – விரிவுரையாளர், காஸிமிய்யா அரபுக் கல்லூரி, புத்தளம்.
via - http://puttalamonline.com/
No comments:
Post a Comment