Digital Time and Date

Welcome Note

Friday, June 28, 2013

சோமநாதர் கோயில் படையெடுப்புமதரீதியான படையெடுப்பு அல்ல.சோமநாதர் கோயில் படையெடுப்பு அல்லது கொள்ளை மதரீதியான படையெடுப்பு அல்ல. அதேபோல முகமது கஜினி இந்தியாவில் இசுலாத்தைப் பரப்பவோ, இங்கு இசுலாமிய ஆட்சியை உருவாக்கவோ இந்தியாவுக்குள் ஊடுருவவில்லை. முகமதுவைப் பொருத்தவரை காஜானாவத் பேரரசை பாக்தாத் காலிலிப்புக்கு போட்டியாக உருவாக்க நினைத்தார். இதனால் அவரது வரலாற்றை எழுதியவர்களும், அவரது அரசவைக் கவிஞர்களும் தங்கள் மாமன்னரின் வீரபராக்கிரமங்களை அதீதமாக மிகைப்படுத்தி எழுதினார்கள். இதற்கு அவர்களது ராஜவிசுவாசமே காரணம். முகமது இந்தியா வரும் முன்னரே இந்தியாவில் இசுலாமியர்கள் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் அராபியர்கள். இந்தியர்களுடன் வணிகம் மேற்கொள்வதற்காக அவர்கள் இங்கு குடியேறினர். ஆனால், முகமதுவின் வருகை வியாபாரம் இல்லை. தனது பேரரசுக்கு செல்வம் சேர்க்க கொள்ளைகளை நிகழ்த்தினார். அப்போது மிகவும் செல்வச்செழிப்புள்ள கோயில் நிர்வாகமாக சோமநாதர் ஆலயம் இருந்தது.

இந்தியா முழுவதுமிருந்து யாத்திரீகர்கள் வந்த வண்ணமாயிருந்தனர். அவர்கள் நன்கொடைகளை வாரி வழங்கினர். அரசும் யாத்திரீகர்களிடம் தனியாக வரி வசூல் செய்தது. தவிர அப்பகுதியைச் சேர்ந்த இந்து, சமண, அராபிய வணிகர்களும் வாரி வழங்கினர். இதனால் உள்ளூர்வாசிகளுக்கும், அரசுக்குமே கூட மோதல் இருந்தது. சோமநாத்துக்கு வரும் யாத்திரீகர்களிடம் கொள்ளையடிப்பதை உள்ளூர் மக்கள் வழக்கமாகவும், வாழ்க்கையாகவும் கொண்டிருந்தனர். சில உள்ளுர் அரசர்கள் கூட இக்கொள்ளையில் ஈடுபட்டனர். எனவே, இந்தளவுக்கு செல்வமிக்க சோமநாதர் ஆலயத்தை தரைமட்டமாக்கி, சொத்துகள் மொத்தத்தையும் முகமது சுருட்டிச் சென்றார். ஆனால், இந்தத் தொகையை அதீதமாக மிகைப்படுத்திக் கூறியுள்ளனர். பொதுவாக, படையெடுக்கும் மன்னர்கள் வெற்றியை ருசிக்கும்போது அவர்களது அடுத்த நடவடிக்கை கொள்ளைதான். முகமது மட்டுமல்ல, வட இந்தியாவின் அரசர்களும் தங்கள் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த படையெடுத்துள்ளதை வரலாறு நெடுகக் காணமுடிகிறது. அவர்கள் இந்து கோயில்களாக இருந்தாலும் விட்டு வைக்கவில்லை. பட்டவர்த்தனமாகக் கொள்ளையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில்கூட சோழர்கள் கடல் கடந்து படை யெடுத்தனர். ஆனால், அவர்களும் கொள்ளையடித்த செல்வங்களுடன்தான் வெற்றிப்பெருமிதத்துடன் திரும்பினர். அத்தகைய பெருமிதம்தான் முகமதுவுக்கு இருந்தது. கோயிலை இழிவுபடுத்தியது தொடர்பாக, அவர் கோயிலை தரைமட்டமாக்கினார். விமானத்தை சுக்கு நூறாக உடைத்தார் என்பதெல்லாம் உண்மையாக இருக்கலாம். அது படையெடுப்பின் ஒரு அங்கம். ஆனால், விக்கிரக அவமதிப்பைப் பொறுத்தவரையில், சோமநாத் என்ற பெயரில் உள்ள "மநாத்' என்பதை "மனத்' என்று கஜினி முகமது புரிந்து கொண்டிருக்கலாம் என்றும், "மநாத்' என்பது குரானில் குறிப்பிடப்படும் "மனத்' என்ற தேவதை என்று அடையாளம் கண்டு, குரானில் வரும் ஒரு தேவதைக்கு உருவ வழிபாடு செய்வதாக எண்ணி அதற்கு அவமரியாதை செய்திருக்கலாம் என்றும் பரூக்கி என்பவர் மேற்கோள் காட்டுகிறார்.

இஸ்லாத்துக்கு முந்தைய காலத்தில் "மனத்' தேவதையை வழிபடாமல் மெக்கா பயணம் முழுமையடையாது என்ற நம்பிக்கை இருந்துள்ளது. முகமது நபி உருவ வழிபாட்டுக்கு எதிரானவர். எனவே, அவர் அதை அழித்து விட்டார் என்றும், முகமது அலிலி காலத்தில் அந்தச் சிலை அழிக்கப் பட்டது என்றும் கூறப்படுகிறது. அராபிய தொல்குடி இனத்தவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றியபோதே தமது பரம்பரை விக்கிரக வழிபாட்டையும் தொடர்ந்தனர். இன்றும் ஓரளவு விக்கிரக வழிபாட்டை ஏற்கிறவர்கள் இருக்கிறார்கள். உருவ வழி பாட்டை எதிர்ப்பவரான கஜினி முகமது அந்த இசுலாமிய உட்பிரிவுகளை அழிப்பதில் குறியாக இருந்தார்; எனவே, மதத்தைத் தூய்மைப்படுத்தும் முயற்சியாக மிச்சசொச்சங்களைத் துடைத்தெறிவதில் முகமது கஜினி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் நீட்சியாகவே சோமநாத் விக்கிரக விவகாரத்தைப் பார்க்க முடியும். மற்றபடி, சோமநாத் கோயில் கதவை எடுத்துவந்து தமது கோட்டை வாசலிலில் பொருத்தினார் என்பது போன்ற கூற்றுகள் ஆதாரமற்ற மிகைப்படுத்தல்கள். மேலும், சோமநாதர் கோயில் மீண்டும், மீண்டும் கட்டப்பட்டதாகவும், அதை இஸ்லாமிய மன்னர்கள் மீண்டும், மீண்டும் தரைமட்டமாக்கியதாகவும் கட்டமைக்கப் படுவதும் தவறு. அராபிய வரலாற்றாசிரியர்கள் மிகைப் படுத்திக் கூறிய இக்கூற்றை ஆதாரமாகக் கொண்டு காலனியவாதிகள் பரப்பி வந்தனர். இந்துத்வா சக்திகள் அதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், அதற்கான ஆதாரங்கள் சமஸ்கிருத, சமண ஆவணங்களில் இல்லை. இதை, ஒரு தொகுப்பு வாசிப்பின் மூலமே தெளிவுபடுத்த முடியும்.

ஆழி ஆழி