Digital Time and Date

Welcome Note

Saturday, June 29, 2013

நிர்வாணமாக இருப்பது தவறா?

நானும் எனது மனைவியும் வீட்டில் தனியாக இருக்கும்போது நிர்வாணமாக இருப்பதையே நான் அதிகம் விரும்புகிறேன். அப்படி இருப்பது தவறா? -ஒரு வாசகர்.
 
 A.   நிர்வாணமாக இருத்தல் என்பது இரு வகைகளில் உள்ளது. நிர்வாணம் அவசியம் என்பதற்காக நிர்வாணமாக இருப்பது ஒரு வகை. அவசியமில்லாமல் நிர்வாணமாக இருப்பது இன்னொரு வகை. அவசியமான நிர்வாணத்துக்கு உள்ள அனுமதியை அவசியமில்லாத போது பயன்படுத்தக் கூடாது.
மலஜலம் கழிக்கும் போது நிர்வாணம் அனுமதிக்கப்படுவதால் எல்லா நேரத்திலும் நிர்வாணமாக இருக்கக் கூடாது.
 
கணவன் மனைவி மட்டுமே இருந்தாலும் எப்போது ஒருவருக்கொருவர் தேவையோ அந்த நேரங்களில் நிர்வாணமாக இருக்க அனுமதி உண்டு. அவ்வாறு இல்லாமல் எல்லா நேரங்களிலும் நிர்வாணமாக இருக்கக் கூடாது.
"அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுடைய மானங்களை யாரிடம் மறைக்க வேண்டும்? யாரிடம் மறைக்க வேண்டியதில்லை?'' என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "உன்னுடைய மனைவி அல்லது உனது அடிமைப் பெண்கள் ஆகியோரிடத்தில் தவிர மற்றவரிடம் உனது மானத்தை மறைத்துக் கொள்'' என்று சொன்னார்கள்.
"
ஒரு மனிதர் இன்னொரு மனிதருடன் இருக்கும் போது?'' என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "முடிந்த அளவுக்கு மற்றொருவர் (உன்) மானத்தை பார்க்காதவாறு நடந்து கொள்'' என்றார்கள்.
"
ஒருவர் தனியாக இருக்கும் போது?'' என்று நான் கேட்டதற்கு, "அல்லாஹ் வெட்கப்படுவதற்கு மிகவும் தகுதியானவன்'' என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி 2693)
 
கணவன் மனைவிக்கிடையே தேவைகள் நிறைவேறிய பின்னர் அல்லாஹ் பார்க்கிறான் என்ற வெட்க உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
ஆதம் ஹவ்வா ஆகிய இருவர் மட்டுமே படைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் தடைசெய்யப்பட்ட மரத்தில் இருந்து புசித்தார்கள். இதனால் அவர்களுக்கு பாலுணர்வு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் இலைகளால் மறைத்துக் கொள்ளலானார்கள்.
 
அவ்விருவரையும் ஏமாற்றி (தரம்) தாழ்த்தினான். அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்த போது அவர்களின் வெட்கத்தலங்கள் பற்றி அவர்களுக்குத் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர். அவர்களை அவர்களின் இறைவன் அழைத்து "இம்மரத்தை நான் உங்களுக்குத் தடுக்கவில்லையா? ஷைத்தான் உங்கள் இருவருக்கும் பகிரங்க எதிரி என்று உங்களிடம் நான் கூறவில்லையா?'' எனக் கேட்டான். (திருக்குர்ஆன் 7:22)
 
அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் பற்றித் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறுசெய்தார். எனவே அவர் வழிதவறினார். (திருக்குர்ஆன் 20:121)
 
நாம் கணவன் மனைவி மட்டும் தானே இருக்கிறோம் என்று அவர்கள் நினைக்கவில்லை. கணவன் மனைவி மட்டும் தானே இருக்கிறீர்கள். உங்களுக்குள் என்ன வெட்கம் என்று அல்லாஹ்வும் அறிவுரை சொல்லவில்லை.
 
மனிதனுக்கு அல்லாஹ் இயல்பாகவே அமைத்துத் தந்துள்ள வெட்க உணர்வை பேணிக் கொள்ள வேண்டும்.
 
எப்போது பார்த்தாலும் நிர்வாணமாகவே இருந்து பழகுவோர் படிப்படியாக மானத்தையும் வெட்கத்தையும் இழக்கும் நிலை ஏற்படும்.
 
எனவே தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்காகவோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து ரசிக்கும் ஆசை காரணமாகவோ இருவர் மட்டும் இருக்கும் போது நிர்வாணமாக இருக்கலாம். மற்ற சந்தர்ப்பங்களில் கணவன் மனைவி மட்டும் இருந்தாலும் அல்லது தனிமையில் இருந்தாலும் வெட்கத்தைப் பேணிக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment