Digital Time and Date

Welcome Note

Wednesday, June 26, 2013

இராமநாதபுரம் மாவட்டம்!!

இராமநாதபுரம் மாவட்டம்!!

இந்தியாவின் புகழ்பெற்ற புனிதத் தலங்களில் ஒன்றான இராமேஸ்வரம் இந்த மாவட்டத்தில்தான் உள்ளது. தற்போதைய இராமநாதபுர மாவட்ட எல்லைக்கு உட்பட்ட...
திருவாடானை, பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய பகுதிகள் 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டியப் பேரரசிடம் இருந்தது. 1520 இல் பாண்டியர்களிடமிருந்து நாயக்கர்கள் இந்தப் பகுதியைக் கைப்பற்றினர். 1063 இல் குறுகிய காலம் மட்டும் இராஜேந்திர சோழர்கால சோழ அரசுக்கு உட்பட்டதாக இருந்துள்ளது. பிற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் கீழிருந்த சேதுபதி பரம்பரையினர் இராமநாதபுரத்தின் ஆட்சியை எடுத்துக்கொண்டனர். ஆங்கிலேயர்களால் ராம்நாட் என்று அழைக்கப்பட்ட இந்தப்பகுதி விடுதலைக்குப் பிறகு இராமநாதபுரம் என்று அழைக்கப்படுகிறது.


அக்னி தீர்த்தம்:

உயர்ந்த கோபுரம், எதிரே அமைதியான கடல், அருகே சில புண்ணிய தீர்த்தங்கள், அக்னி தீர்த்தம் இவற்றில் பிரபலமானது. இதில் நீராடினால் சகல பாவங்களும் அகலும் என்பது நம்பிக்கை. இன்னும் சில தீர்த்தங்களும் உண்டு.


அன்னை இந்திராகாந்தி பாலம் - பாம்பன் பாலம்:

2.10.1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாலம் இது. இந்தியாவில் கடல் மேல் கட்டப்பட்டுள்ள பாலங்களில் மிக நீளமான இந்தப் பாலம்தான் பாம்பன் பாலம். இதன் நீளம் 2.2 கி.மீ.


பத்ரகாளியம்மன் கோயில்:

இராமேஸ்வரம் கோயிலிலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள காந்தமதனா பர்வதம் செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்தக் கோயில்.


தனுஷ்கோடி:

மிக அண்மைக்காலத்தில் கடல் கொண்ட பகுதி இது. இது ஓர் அழகிய சிறு தீவு. 1964 இல் ஏற்பட்ட கடுமையான புயலின்போது இந்தத் தீவு முழுவதும் கடலுக்குள் முழ்கிவிட்டது. ஆனால் இங்குள்ள கோதண்டசாமி கோயில் மட்டும் எஞ்சி நிற்கிறது. இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீக்கு அப்பால் உள்ள தனுஷ்கோடிக்கு சாலை வழியாகவே செல்லலாம். இங்கு உள்ள கடற்கரையில் அலை ஊர்திச் சவாரி செய்யலாம்.


தேவிப்பட்டினம்:

இந்தக் கடலோரக் கிராமத்தை நவபாசாணம் என்றும் மக்கள் அழைக்கின்றனர். இந்துக்கள் தங்களின் முன்னோருக்குச் சடங்குகள் செய்யும் இடமாகவும் இது உள்ளது.


ஏர்வாடி:

அரேபியாவிலிருந்து 800 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணனூர் வழியாக இங்கு வந்தவர் இப்ராஹிம் செய்யத் அலியா சுல்தான். இறந்த பிறகு இவரின் நினைவாக எழுப்பப்பட்ட புகழ்பெற்ற கல்லறை இங்குள்ளது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளிலிருந்தும் இந்தக் கல்லறையை வழிபட பக்தர்கள் வருவார்கள். ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இங்கு நடக்கும் சந்தனக்கூடு திருவிழா பிரபலமானது.


மன்னார் வளைகுடா - கடல்வாழ் உயிரினப் பூங்கா:

இந்தியாவிலேயே மிகப் பெரிய கடற்கரையைக் கொண்ட தேசிய கடல் வாழ் உயிரினங்களின் பூங்கா இங்குதான் உள்ளது. 3600 வகையான கடல் வாழ் தாவரங்களும் உயிரினங்களும் கொண்ட இந்தப் பூங்காவை இந்திய குழுவும் அமைப்பும் இணைந்து தனிப்பட்ட கவனத்திற்குரிய சிறப்புப் பகுதியாக அடையாளப்படுத்தி பயன்பாட்டு நிர்வாகச் சிறப்புத் தகுதியையும் வழங்கி உள்ளன.


ஜடாயு தீர்த்தம்:

இராவணனிடமிருந்து சீதையைக் காப்பதற்காக ஜடாயு என்ற பறவை சண்டையிட்டபோது அதன் இறகு ஒன்று இந்த இடத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கோயிலையும் குளத்தையும் சுற்றி நிறைய மணற்குன்றுகள் சூழ்ந்துள்ளன. இந்தக் குளத்தில் உள்ள தண்ணீர் இளநீரைப் போன்று சுவையுள்ளது.


கோதண்டசாமி கோயில்:

இராமேஸ்வரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தக் கோயில்.


குருசடை தீவு:

பாம்பன் பாலத்தின் மேற்குக் கரைக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் உள்ள அழகிய சிறு தீவு இது. இராமநாதபுரம் மண்டபத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் தீவைச் சுற்றி பவளப்பாறைகளும் டால்பின் போன்ற அரியவகை மீன்களும், கடல் பசுக்களும் உள்ளன. கடல் மற்றும் உயிரியல் ஆய்வாளர்களுக்கு மிகப்பிடித்த தீவு இது. மீன்வளத்துறையின் அனுமதி பெற்றுத்தான் இங்கு செல்ல முடியும்.


சிவபெருமானின் ஜோதி லிங்கம்:

இந்தியாவில் உள்ள ஜோதிலிங்கத் கோயில்களில் இராமநாத சுவாமி கோயிலும் ஒன்று.


இராமநாதபுரம்:

மன்னர் சேதுபதியின் ஆட்சிக்குட்பட்ட நகரம். இப்போது மாவட்டத்தின் தலைநகரம். இராமலிங்க விலாசம் என்ற அரண்மனையும், தாயுமானவரின் கல்லறையும் இங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்.


இராமநாத சுவாமி கோயில்:

இந்தக் கோயில் குறித்தப் புராதனக் கதை உண்டு. வழிபாட்டுக்கு உகந்த நேரத்தில் தான் பூஜிக்க லிங்கம் ஒன்று வேண்டும் என அனுமனிடம் இராமர் கேட்டிருக்கிறார். அனுமன் லிங்கத்தைக் கொண்டுவந்து சேர்க்கத் தாமதமாகவே சீதையே ஒரு லிங்கத்தை உருவாக்கி உள்ளார். இதனால் தாமதமாக லிங்கத்தைக் கொண்டு வந்த அனுமன் சஞ்சலம் அடையவே அவனையும் தேற்றி அந்த லிங்கத்தையும் அருகிலேயே வைத்ததாக இராமாயணம் கூறுகிறது. தற்போதும் அனுமனால் அமைக்கப்பட்ட லிங்கத்துக்கே இங்கு அதிக சிறப்பு. இராமநாதசுவாமி கோயிலின் மூன்றாவது பிரகாரம் உலகிலேயே மிக நீளமானது.


கஞ்சிரங்குளம் மற்றும் சித்திரக்குடி பறவைகள் சரணாலயம்:

பருவகாலங்களின் மாற்றத்துக்கு ஏற்ப பறவை இனங்கள் கண்டம் விட்டுக் கண்டம் வந்து இளைப்பாறும் இயல்பு கொண்டவை. பறவைகளின் இந்தப் பயணத்தை வலசை வருதல் என்று அழைப்பார்கள். இப்படி வரும் பறவைகள் இந்தப் பகுதியில் வந்து தங்கி கூடிக் குலாவி குஞ்சுகளும் பொரிக்கின்றன. நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை இந்தக் காட்சியைக் காண முடியும்.


மண்டபம்:

இராமநாதபுரத்திலிருந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் அழகிய கிராமம். இராமேஸ்வரத்திலிருந்து 19 கி.மீ. தூரத்தில உள்ளது. 1914 க்கு முன்பு இராமேஸ்வரத்துக்கு நேரடியாக இரயிலில் செல்ல முடியாது. மண்டபத்தில் வந்து இறங்கி படகில்தான் இராமேஸ்வரத்துக்குச் செல்ல வேண்டும். தற்போது குருசடை தீவிற்கு படகு சவாரி செல்லலாம்.


ஒரியூர்:

போர்ச்சுக்கீசியரான அருளானந்தர் என்ற ஜான் டீ பிரிட்டோ உயிர்த்தியாகம் செய்த இடம் இது. கி.பி. 1693 ஆம் ஆண்டு இந்தத் துறவியின் தலையை வெட்டுமாறு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தண்டனையை நிறைவேற்றுபவர்களை நோக்கி அருள் அருளானந்தர் தன் தலையை மனமுவந்து தந்த வண்ணம் நிற்கும் சிலை ஒன்று இங்குள்ள போர்ச்சுகீசிய கட்டடத்தின் முகப்பில் உள்ளது. இந்தத் துறவியின் தலையை வெட்டும்போது தெறித்த ரத்தத்தால் இந்தப் பகுதியில் உள்ள மணற்குன்றுகள் அனைத்தும் சிவப்பாக மாறி உள்ளதாகக் கூறப்படுகிறது. உலக அளவில் கிறிஸ்தவர்கள் போற்றி வணங்கும் புனிதத் தலமாக இது திகழ்கிறது.


கடல் மீன் காட்சியகம்:

இராமேஸ்வரப் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது இந்தக் காட்சியகம். இந்தியாவிலேயே மிகப்பெரிய இந்தக் கடல் மீன் காட்சியகத்தில், ஆக்டோபஸ், பாம்பு மீன், கிளி மீன், கடல் பல்லி, பசு மீன், சிங்க மீன், எலி மீன், நெருப்பு மீன், வெண்ணெய் மீன், கோமாளி மீன், கார்பஸ், பெருங்கடல் நண்டுகள், கடல் தாமரை, பீச்டாமெட், நட்சத்திர மீன்கள், கடற்குதிரைகள், சுறாமீன் மற்றும் இறால் வகைகள் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் காண்போர் மனத்தைக் கொள்ளை கொள்ளும். தொலைபேசி - 04573-222811.


திருப்புல்லாணி:

'தர்பசயனம்' என்று அழைக்கப்படும் திருப்புல்லாணியில் விஷ்ணு கோயில் உள்ளது. ஆதி ஜகந்நாதப் பெருமாள் குடி கொண்டுள்ள இராமேசுவரத்திலிருந்து 64 கி.மீ. தொலைவில உள்ளது இந்தப் புண்ணியத் தலம்.


சாட்சி அனுமன் கோயில்:

கண்டேன் சீதையை என்று இராமனிடம் வந்து அனுமன் சொன்ன இடம். அந்த நிகழ்வுக்கு சாட்சியாக இந்தக் கோயில் நிற்கிறது.


உத்திரகோச மங்கை:

இராமேசுவரத்திலிருந்து 72 கி.மீ. தொலைவில் உள்ளது. மரகதத்தால் செதுக்கப்பட்ட லிங்கம் உள்ள பழம்பெரும் சிவன் கோயில் இங்கு உள்ளது. இங்கு டிசம்பர் மாதம் நடக்கும் ஆருத்தா தரிசனம் பிரபலமான திருவிழாவாகும்.


நம்புநாயகி அம்மன் கோயில்:

இராமநாதபுர மாவட்ட மக்களால் விரும்பி வழிபடப்படும் இந்தக் கோயில் இராமேசுவரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் தனுஷ்கோடி அருகில் உள்ளது.


வில்லூண்டி தீர்த்தம்:

இராமனுடன் சென்று கொண்டிருந்த சீதாபிராட்டிக்கு இராமன் தன் கையிலிருந்த வில்லை ஊன்றி அதிலிருந்து பீறிட்ட நீரைக் கொண்டு தாகத்தைக் தணித்துள்ளான். இதனால் இந்த இடத்துக்கு வில்லூண்டித் தீர்த்தம் என்று பெயர் வந்துள்ளது. இராமேசுவரத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

No comments:

Post a Comment