Digital Time and Date

Welcome Note

Saturday, July 13, 2013

புற்றுநோயை குணமாக்கும் புனித நோன்பு

புற்றுநோய்க்கு மருத்துவமே கிடையாது என ஆரம்பத்தில் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் நவீன காலத்தில் புற்று நோய்க்கும் மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்பது மகிழ்ச்சியான ஒரு செய்தி.



 புற்று நோய்க்கு மருத்துவம் கண்டறியப்படாத சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே ‘அல்குர்ஆனில் எல்லா நோய்க்கும் மருந்து உண்டு’ என வல்ல அல்லாஹ் கூறுவது ஆச்சரியத்தையும், மன நிம்மதியையும் தருகிறது.




 “இன்னும், நாம் முஃமின்களுக்கு அருளாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே அல்குர்ஆனில் இறக்கி வைத்தோம்”.


                                              -அல்குர்ஆன் 17:82




  மரணம் என்ற நோயைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் அல்குர்ஆனிலே மருத்துவ பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கின்றன. சந்தர்ப்பங்கள் வரும்போது அவை கண்டுபிடிக்கப்படுகின்றன. அந்த வகையில் தற்சமயம் நோன்பின் மூலம் புற்றுநோய்க்கு மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


நோய்க்கு மருத்துவம் பார்க்கும் முறை இரண்டு வகை.


1.மருந்து மாத்திரைகளால் சிகிச்சை அளித்து நோயை கட்டுப்படுத்துவது. 2. மருந்து மாத்திரைகளை கையாளாமல் மனக்கட்டுப்பாட்டின் மூலம் மனதுக்கு சிகிச்சை அளித்து நோயை கட்டுப்படுத்துவது.




  நோய்களிலே மிகக் கொடியதாக புற்றுநோயை குறிப்பிடப்படுகிறது. ஆனால் உண்மையில் புற்றுநோயை விட மிகக் கொடிய நோய் மனநோய் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.




  “அவர்களுடைய இதயங்களிம் ஒரு நோயுள்ளது. அல்லாஹ் அந்த நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கிவிட்டான்.”


                                                -அல்குர்ஆன் (2:10)






  மனது ஆரோக்கியமாக இருந்தால் மனித உறுப்புகள் யாவும் ஆரோக்கியம் பெற்று விடும். மனது பாழ்பட்டு விட்டால் மனித உறுப்புகள் யாவும் பாழாகி விடும். மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் நோய், நொடி இல்லாமல் (அல்லாஹ்வின் நாட்டப்படி) மன நிம்மதியாக வாழலாம். மனதுக்கு கவலையை ஏற்படுத்தினால், அதுவே அனைத்துவிதமான நோய்களுக்கும் மூலகாரணமாக ஆகி விடும்.






  “அறிந்து கொள்ளுங்கள் ! மனித உடலில் ஒரு சதைத்துண்டு உள்ளது. அது சீர்பட்டு விட்டால் உடலுறுப்புகள் யாவும் சீராகி விடும். அது பாழாகி விட்டால் உடலுறுப்புகள் யாவும் பாழாகி விடும். அறிந்து கொள்ளுங்கள் ! அது தான் உள்ளம் அறிந்து கொள்ளுங்கள் ! அது தான் உள்ளம்”


                                             -நபி (ஸல்) அவர்கள்






  மனதை சீராகவும், ஆரோக்கியமாகவும், நோய்நொடி இல்லாமல் புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்வதற்கு சிறந்த வைத்தியமாக நோன்பு அமைந்திருக்கிறது. மேலும் மனதை கட்டுப்பாடாகவும் வைத்துக் கொள்வதற்கு சிறந்த சிகிச்சையாக நோன்பு அமைந்திருக்கிறது. நோன்பு கடமையாக்கப்பட்டதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.




1. ஆரோக்கியம் பெற;


2. பசிக்கொடுமையை தெரிந்து கொள்ள;


3. மன அமைதி பெற, மனோ இச்சைகளை ஒதுக்கித் தள்ள;


4. ஏழைகள் மீது இரக்கம் காட்ட;


5. ஏழைகளுடன் உறவாடி அவர்களின் சுமைகளை அனுபவித்துக் கொள்ள




  இதுபோன்ற காரணங்களால் நோன்பு கடமையாக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், அடிப்படையான காரணம் மனக்கட்டுப்பாட்டை பெறுவதற்குத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது என இஸ்லாம் கூறுகிறது. மனக் கட்டுப்பாடு எப்படி கிடைக்கும் என்றால் மனது தூய்மையாக இருந்தால் கிடைக்கும்.




  மனது தூய்மையாக இருந்தால்




1. ஆரோக்கியம் கிடைக்கும்;


2. பசிக்கொடுமையை தெரிந்து கொள்ளலாம்;


3. மன அமைதி கிடைத்து விடும்;


4. ஏழைகள் மீது இரக்கம் பிறந்து விடும்;


5. ஏழைகளுடன் உறவாடி அவர்களின் சுமைகளை அனுபவித்துக் கொள்ள முடியும்.




  மனதை பக்குவப்படுத்தவும், தூய்மையாக வைத்துக் கொள்ளவும் நினைப்பவர்களுக்கு நோன்பு வைப்பதில் அவை கிடைக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.




  “ஈமான் கொண்டோரே ! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.”


                                             -அல்குர்ஆன் (2:183)




 நோன்பு என்பது மனிதனுக்கு அகத்திலும், புறத்திலும் தூய்மையையும், ஆரோக்கியத்தையும் பெற்றுத் தருகிறது. மேலும் நோன்பு உயிர்க் கொல்லியாக இருக்கும் புற்றுநோய்க்கும் சிறந்த அருமருந்தாக உள்ளது.




  அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.




  ”நோன்பு (உண்ணாவிரதம்) மேற்கொள்வது, புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும். அதற்கான சிகிச்சைக்கும் ஊக்கமளிக்கும் என்று தெரிய வந்திருக்கிறது. புற்றுநோய்க்கான ‘கீமோதெரபி’ சிகிச்சையுடன் உண்ணாவிரதத்தையும் கடைபிடிக்கும் போது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும், பரவலையும் அது தாமதப்படுத்துகிறது. சில புற்று நோய்களை முற்றிலுமாக குணப்படுத்துகிறது”.




  தங்களின் இந்தக் கண்டுபிடிப்பு, மேலும் சிறப்பான புற்றுநோய் சிகிச்சை முறையை உருவாக்க பயன்படும் என்றும், இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.




  இது தொடர்பாக எலிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, உண்ணாவிரதத்துக்கு சாதாரண செல்களைப் போலில்லாமல் புற்றுநோய் செல்கள் வித்தியாசமான எதிர்வினை ஆற்றுவது தெரிய வந்தது. அதன் இறுதியில் அவை தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கின்றன. ’இதை புற்றுநோய் செல்களின் தற்கொலை என்று கூறலாம்’. என்று முன்னணி ஆய்வாளரான வால்டர் லோங்கோ கூறுகிறார்.




  ‘நோன்பின் போது ஏற்படும் இந்நிலையை புற்றுநோய்ச் செல்கள் ஈடுகட்ட முயல்கின்றன. ஆனால் அவற்றால் அவ்வாறு செய்ய முடிவதில்லை’ என்றும் அவர் கூறுகிறார்.




  புற்றுநோயாளிகள் புற்றுநோய் சிகிச்சை பெறாமல் நோன்பு இருக்கும் போது புற்றுச் செல்களின் வளர்ச்சி தாமதமாகிறது. அதே வேளையில், ‘கீமோதெரபி’ யுடன் நோன்பையும் மேற்கொள்ளும் போது அது நல்ல பலனைத் தருவது உறுதியாகி இருக்கிறது.




  புற்றுநோயை குணமாக்கும் நோன்பும், கீமோதெரபியும்




  புற்றுநோயை குணப்படுத்த அறிவியல் ரீதியான மருத்துவமுறையாக கருதப்படும் ‘கீமோதெரபி’ என்ற மருத்துவ சிகிச்சையையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்மீக ரீதியான மருத்துவ முறையாகக் கருதப்படும் ‘நோன்பு’ என்ற மருத்துவ சிகிச்சையையும் கடைபிடிக்க வேண்டும்.




  உலகில் வாழும் புற்றுநோயாளிகள் ‘கீமோதெரபி’ என்ற மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டும், புற்றுநோய் முற்றிலும் குணம் அடையாத பட்சத்தில், நோன்பு என்னும் மருத்துவ முறையை கடைபிடித்தால் நிச்சயம் புற்றுநோய் குறையும் என்பதல்ல, முற்றிலும் புற்றுநோய் இல்லாமல் போய்விடும் என்பதற்கு நூறு சதவீத உத்தரவாதத்தை குர்ஆன் வழி மருத்துவமும், நபிவழி மருத்துவமும் உத்தரவாதமும், உறுதிமொழியும் அளிக்கின்றன. எனவே புற்றுநோய் இல்லாமல் நலமுடனும், வளமுடனும் வாழ நோன்பு நோற்போம் ! உடல் நலம் காப்போம் !





நன்றி : குர்ஆனின் குரல்
ஜுலை 2013

No comments:

Post a Comment