பிரித்தானியாவில் மாத்திரம் வருடாந்தம் 5000 பேர் இஸ்லாத்தை தமது மார்க்கமாக ஏற்றுக் கொள்வதாக அந்நாட்டிலிருந்து வெளியாகும் 'த சன்' பத்திரிகை தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாக இவர்களில் அரைவாசிப் பேர் வெள்ளையர்கள் எனவும், அவர்களில் 75 வீதமானோர் பெண்கள் எனவும் அப் பத்திரிகை மேலும் தெரிவிக்கிறது. இவ்வாறு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நான்கு பெண்களுடன் 'த சன்' பத்திரிகை மேற்கொண்ட நேர்காணலின் முக்கிய பகுதிகளை வாசகர்களுக்காக தமிழில் தருகிறோம்.
அலானா புளொக்லீ (21)
பிரித்தானியாவின் க்ளஸ்கோ நகரில் வசிக்கும் ஊடகவியல் கற்கை மாணவியான இவர் 2010 ஜூன் மாதம் முஸ்லிம் இளைஞர் ஒருவரைச் சந்தித்ததன் மூலம் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டõர். தான் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டமை பற்றி அவர் இப்படிக் கூறுகிறார்.
"நான் ஒரு கிறிஸ்தவ பெண் என்ற போதிலும் மதமோ, தேவாலயமோ எனது வாழ்வில் பெரும் பங்கு வகித்ததில்லை.
18 வயதாக இருந்த போது ஹோட்டல் ஒன்றில் நிர்வாகியாகப் பணியாற்றும் மொரோக்கோவைச் சேர்ந்த அப்துல் எனும் முஸ்லிம் இளைஞரைச் சந்தித்தேன்.
ஹோட்டல் ஒன்றில் தேநீர் விருந்துக்காக செல்ல வருமாறு அவர் அழைத்தார். அந்த முதல் சந்திப்பு முடிந்ததும் மீண்டும் ஒரு முறை சந்திக்கலாம் என்று அவர் அழைப்பு விடுத்தார். இவ்வாறு சுமார் 3 தடவைகள் சந்தித்த பின்னர் நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ வேண்டும் என விரும்பினோம்.
இருப்பினும் அப்துலின் வாழ்க்கை முறைபற்றி நான் அறிந்து கொள்ள விரும்பினேன். அதனால் இஸ்லாம் பற்றி அதிகமாகத் தேடிப் படித்தேன். அப்போதுதான் நான் இஸ்லாத்தைத் தழுவ வேண்டும் என விரும்பினேன்.
கடந்த வருடம் முதல் நான் ஹிஜாப் அணியத் தொடங்கியுள்ளேன். இந்த வருட ஆரம்பத்தில்தான் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.
நான் இப்போது இஸ்லாமிய பெருநாள்களை கொண்டாடுகிறேன். அதேபோன்று கிறிஸ்மஸின் போது எனது பெற்றோருடன் இணைந்து ஹலாலான இரவு உணவையும் அருந்துகிறேன்.
நான் இஸ்லாத்தின் வரையறைகளை விரும்புகிறேன். நான் சுவர்க்கம் செல்வேன் என்றும் எதிர்பார்க்கிறேன்.
ஜெய்ன் செம்ப் (28)
கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இஸ்லாத்தைத் தழுவி தனது பெயரை "ஆமினா'வாக மாற்றிக்கொண்ட ஜெய்ன் செம்ப் பிரித்தானியாவின் மென்செஸ்டர் நகரில் சமூக ஒத்துழைப்பு பொலிஸ் அதிகாரியாகக் கடமையாற்றுகிறார்.
கடமையின்போது கூட ஹிஜாப் அணிந்து வீதியில் வலம்வரும் இவர், வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காகச் செல்ல வேண்டும் என்பதற்காக மேலதிக நேரங்களிலும் பணியாற்றுகிறார். "டுவிட்டர்' இணையத்தளம் மூலமõக முஸ்லிம்களோடு கருத்துப் பரிமாறல்களில் ஈடுபட்ட போதே தனக்கு இஸ்லாம் அறிமுகமானதாகக் குறிப்பிடும் ஜெய்ன் செம்ப் உள்ளூர் பள்ளிவாசல் ஒன்றின் "டுவிட்டர்' கணக்கை நிர்வகிக்கும் முஹம்மது மன்சூர் என்பவரே இஸ்லாம் பற்றி தனக்கு அதிகம் தெரிந்துகொள்ள உதவியவர் என்றும் குறிப்பிடுகிறார்.
இனி இஸ்லாம் பற்றி ஜெய்ன் சொல்வதைக் கேளுங்கள்.
இஸ்லாம் பெண்களை "சமையலறை அடிமைகளாகவே' வைத்திருக்கிறது என்றே நான் முன்பு எண்ணியிருந்தேன். ஆனால் இப்போதுதான் இஸ்லாம் எந்தளவு தூரம் சகிப்புத் தன்மை உடையது, மற்றவர்களுக்கு மதிப்பளிக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது.
எனது கேள்விகளுக்கு விடையளிக்கக் கூடிய வேறு எந்தவொரு சமயத்தையும் என்னால் அந்தத் தருணத்தில் காண முடியவில்லை. இஸ்லாத்தைத் தவிர அதனால்தான் இஸ்லாத்தின் மீதான ஈர்ப்பினால் நான் காதலில் வீழ்ந்துவிட்டேன். நான் இஸ்லாத்தை எனது வாழ்க்கைநெறியாக ஏற்றுக் கெண்டுள்ள போதிலும் எனது குடும்பத்தினரும் சக பணியாளர்களும் என்னை விட்டும் பிரிந்து சென்று விடவில்லை. எனது கணவரும் இரு பிள்ளைகளும் கத்தோலிக்கர்களாகவே இருக்கிறார்கள். அவர்களும் இஸ்லாத்தைத் தழுவவேண்டும் என்று நான் ஒருபோதும் நிர்ப்பந்திக்கப்போவதில்லை.
நான் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து எனது குடும்பத்தினர், உறவினர்கள் சந்தோஷமடைகிறார்கள். நான் ஹிஜாப் அணிந்தே பொலிஸ் கடமையை ஆற்றுகிறேன். இது எனக்கும் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஒரு புது அனுபவம். பொலிஸில் கடமையாற்றும் முஸ்லிம் பெண்கள் கடமையின் போது "ஹிஜாப்' அணிவது குறித்த ஒழுங்கு விதிகள் சிலவற்றை நான் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.நான் என்னைப் பற்றி வெளிப்படையாகக் கூறிக்கொள்வதன் மூலமாக முஸ்லிம் பெண்கள் பொலிஸில் பணியாற்ற முடியும் என்பதை வெளிப்படுத்த விரும்புகிறேன். இதன் மூலம் இஸ்லாம் தொடர்பான தவறான அபிப்பிராயங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என எண்ணுகிறேன்.
க்ளையர் ஈவன்ஸ் (24)
சிலருக்கு காதல்தான் இஸ்லாத்தைத் தெரியப்படுத்துகிறது. ஆனால் இவரது வாழ்வில் ஏற்பட்ட "காதல் முறிவு' தான் இவருக்கு இஸ்லாத்தை பற்றி அறியும் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் நகரில் வசிக்கும் க்ளைமர் ஈவன்ஸ், கடந்த வருடம் ஜூலை மாதம் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.
நான் காதலித்த முஸ்லிம் நபர் என்னைக் கைவிட்டுச் சென்ற போது இஸ்லாம் மிக மோசமானதும் இரக்கமற்றதுமான மார்க்கம் என்றே நான் கருதினேன்.ஆனால் எனது தாயார்தான் அது தப்பான எண்ணம் என்பதை எனக்குப் புரிய வைத்தார். நான் காதலித்த நபர் இஸ்லாத்தின் அடிப்படைகள் எதனையும் தனது வாழ்வில் கடைப்பிடிக்கவில்லை என்பதை தாய் தான் எனக்கு விளக்கிக் கூறினார்.
அதன் பிற்பாடுதான் இஸ்லாம் அமைதியும் சமாதானத்தையும் ஊக்குவிக்கும் மார்க்கம் என்பதை நான் உணர்ந்துகொண்டேன்.
இஸ்லாத்தைத் தழுவும் வரைக்கும் எந்தவொரு மதத்தையும் நான் வாழ்வில் பின்பற்றியிருக்கவில்லை. நான் கடவுள் மீது நம்பிக்கை கொள்ளவுமில்லை. நான் இப்போது எனது தலையை மறைத்துக்கொள்கிறேன். ஹிஜாப் அணிகிறேன். இது எனது வாழ்வில் நான் எடுத்த மிகப்பெரும் தீர்மானம். எனது தந்தை நான் ஹிஜாப் அணிவதை விரும்பவில்லை. அதனால் அவரோடு இருக்கும் காலங்களில் மாத்திரம் நான் ஹிஜாப் அணிவதை தவிர்த்துக்கொள்கிறேன்.
நான் இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்ப காலங்களில் பல்வேறு விதமான தேவையற்ற விமர்சனங்களை எதிர்கொண்டேன். ஆனால் கடந்த ஆறு மாத காலமாக எனக்குள் மிகுந்த நம்பிக்கை வளர்ந்து வருகிறது. இப்போது நான் தினமும் தொழுகிறேன். வாரத்தில் ஒரு தடவை பள்ளிவாசலுக்கும் செல்கிறேன்.
நான் எனது பெயரை சாபிர் என மாற்றிக்கொண்டுள்ளேன். இருப்பினும் "க்ளையர்' எனும் எனது பழைய பெயரையும் பயன்படுத்துகிறேன்.எனது வாழ்க்கைத் துணையையும் நான் இப்போது தேர்ந்தெடுத்திருக்கிறேன். அவரும் முஸ்லிம்தான். ஆனால் நாங்கள் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இஸ்லாம் என்னை ஒரு சாந்தமான பெண்ணாக மாற்றியிருக்கிறது. இப்போதுதான் எனது வாழ்வில் முதன்முறையாக ஒரு பூரண திருப்தியைக் காணுகிறேன்.
நான் இஸ்லாத்தைத் தழுவியதால் முன்பிருந்த வாழ்க்கையில் அனுபவித்த எவற்றையும் இழந்துவிடவில்லை. ஆனால் இப்போது பன்றி இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்துவிட்டேன்.
ஆயிஷா ஒலுமைட் (24)
2009இல் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த சமயம் இஸ்லாத்தைத் தழுவிய இவரது இயற்பெயர் இயூனிஸ். பிரட்டனின் எடின்பேர்க் நகரைச் சேர்ந்த இவர் தான் இஸ்லாத்தைத் தழுவிய கதையை இப்படிச் சொல்கிறார்.
"இஸ்லாத்தைத் தழுவ முன்பு நான் ஒரு கிறிஸ்தவ பெண்ணாகவே இருந்தேன். எனது குடும்பம் மேற்கு ஆபிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. அங்கு இஸ்லாமும் கிறிஸ்தவமும் பின்பற்றப்படுகின்ற போதிலும் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் பாடத்தைக் கற்ற போதுதான் இஸ்லாம் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் இஸ்லாம் மிகவும் தீவிரப்போக்கு கொண்ட மார்க்கம் என்றே நான் எண்ணியிருந்தேன். ஆனால் நான் குர்ஆனைப் படிக்க ஆரம்பித்த போது என்னையறியாமலேயே அதில் வீழ்ந்து விட்டேன்.
இயற்கை மற்றும் விஞ்ஞானம் தொடர்பில் குர்ஆன் கூறும் விளக்கங்களால் நான் ஆகர்ஷிக்கப்பட்டேன். விஞ்ஞானம் தொடர்பில் உங்களால் விளக்க முடியாத பல்வேறு கேள்விகளுக்கும் குர்ஆனும் இஸ்லாமும் எனக்கு விடை தந்தன.
15 வயதாக இருக்கும் போதே நான் மொடலிங் துறைக்குள் நுழைந்தேன். உதைபந்தாட்டம், மெய்வல்லுனர் துறைகளில் ஈடுபõடு காட்டிய போதிலும் "நவநாகரீக மொடலிங்' துறையிலேயே கூடுதலாக எனது கவனத்தைச் செலுத்தினேன். ஆனால், நான் இஸ்லாத்தைத் தழுவிய பின்புதான் அழகு என்பதன் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து கொண்டேன்.
ஆரம்பத்தில் நான் ஒரு நவநாகரீக பெண்ணாக இருந்துவிட்டு பின்னர் முஸ்லிம்களோடு எவ்வாறு இணைந்துகொள்வது என்பது பற்றி சற்று சங்கடப்பட்டேன். ஆனால் எனது முஸ்லிம் சகோதரி ஒருவர்தான் எனக்கு வழிகாட்டினார். இஸ்லாம் ஒரு போதும் தீவிரப் போக்குடைய மார்க்கம் அல்ல எனவும் இஸ்லாத்தை தீவிரப் போக்குடைய மார்க்கமாக பார்ப்பது தவறு என்றும் அவர் சொன்னார்.
நான் இப்போது எனது வாழ்வில் 99 வீதமான நேரத்திலும் தலையை மறைத்துக்கொள்கிறேன். நான் இப்போது அரை நிர்வாண ஆடைகளை அணிவதை தவிர்த்துவிட்டேன்.
நான் தினமும் தொழுகிறேன். அவ்வப்போது பள்ளிவாசலுக்கும் செல்கிறேன். விரைவில் குடும்ப வாழ்வை ஆரம்பிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் நான் ஒருபோதும் முஸ்லிமல்லாத ஒருவரை திருமணம் முடிக்கப்போவதில்லை.
No comments:
Post a Comment