Digital Time and Date

Welcome Note

Thursday, April 26, 2012

கௌரவம் பாராத மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்




நாயகம் (ஸல்) அவர்களின் உருவ அமைப்பும், குணாதிசயங்களும்


நபித்துவ முத்திரை

ஸாயிப் இப்னு யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது : எனது சிறிய தாயார் என்னை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரியின் மகன் நோய் வாய்ப்பட்டுள்ளான் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் எனது தலையை தடவி எனது அபிவிருத்திக்காகப் பிராத்தித்தார்கள். (பின்னர்) உளுச் செய்தார்கள். அவர்கள் மீதம் வைத்திருத்த தண்ணீரிலிருந்து நான் குடித்தேன். நபி (ஸல்) அவர்களுடைய முதுகிற்கு பின்னால் எழுந்து நின்றேன். அப்போது அவர்களுடைய இரு புஜங்களுக்கிடையில் நபித்துவத்தின் முத்திரையை நான் பார்த்தேன். அது ஒரு கௌதாரியின் முட்டையைப் போன்று இருந்தது. (நூல் - ஸூனன் திர்மிதி, புகாரி)

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களின் தலைமுடி இருகாதுகளின் பாதி வரை (தொங்கிக் கொண்டு) இருக்கும். (நூல் - முஸ்லீம், அபூதாவுத், நஸயீ)


தலைவாருதல்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் வகிடு எடுக்காமல் தலைவாரி வந்தார்கள். அப்போது இணைவைப்பாளர்கள் வகிடு எடுத்து தலைவாரி வந்தார்கள். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் வகிடு எடுக்காமல் தலைவாரி வந்தார்கள். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் விசயமாக எந்தக் கட்டளையும் வராhததால் அவர்களுக்கு ஒத்து நடக்க நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். பின்னர் வகிடு எடுத்துத் தலைவாரினார்கள். (நூல் - புகாரி, அபூதாவுத்)

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் அதிகம் எண்ணெய் தேய்ப்பவர்களாகவும் தாடிக்குச் சீப்பிடுபவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் தலையில் அதிகமாக ஒரு துணி இருந்து கொண்டே இருக்கும். (தலையில் அதிகம் எண்ணெய் இருந்ததால்) அத்துணி நனைந்ததைப் போல் இருக்கும்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் தலையிலும், தாடியிலும் பதிநான்கு நரைமுடிக்கு அதிகமாக நான் எண்ணவில்லை.

அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களுக்கு சுமார் 20 நரைமுடிகளே இருந்தன. (நூல் - இப்னுமாஜா)

ஸிமாக் இப்னு ஹர்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களின் தலையில் நரைமுடிகள் இருந்தனவா? என்று ஜாபிர் இப்னு ஸமுரா ( ரலி) இடம் வினவினேன். அதற்கவர் நபி (ஸல்) அவர்கள் வகிடு எடுக்கும் பகுதியில் சில முடிகளைத் தவிர வேறு எங்கும் நரைமுடிகள் இருக்கவில்லை. எண்ணெய்த் தேய்த்து இருந்தால் (அதுகூட) அவற்றை (நரையை) மறைத்துவிடும் என்று பதிலளித்தார்கள்.


சாயம் ஏற்றல்

பஷிர் இப்னு காஸாஸியாவின் மனைவி ஜஹ்தா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் குளித்துவிட்டு தலை(முடி) யை உதறியவர்களாக தன் வீட்டிலிருந்து வெளியேறினார்கள். அப்போது அவர்கள் தலையில் மருதாணி சாயமிருந்ததை நான் கண்டேன்.


ஆடை

பரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது : இரண்டு தோள் புஜங்களுக்கு நெருக்கமாக தலைமுடி தொங்கிக் கொண்டு, சிவப்பு நிற ஆடை அணிந்த நபி (ஸல்) அவர்களை விட அழகானவராக மனிதர்களில் எவரையும் நான் கண்டதில்லை. (நூல் - புகாரி, நஸயீ)


காலணி

கதாதா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் காலணி எப்படியிருந்தது என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் கேட்டபோது, அவற்றில் இரண்டு வார்ப்பட்டைகள் இருந்தன என்று பதிலளித்தார்கள். (நூல் - ஸூனன் திர்மிதி, புகாரி)


மோதிரம்

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களின் மோதிரம் வெள்ளியால் செய்யப்பட்டிருந்தது. அதன் மேல்பகுதியில் அபீஸினியா நாட்டின் வேலைப்பாடு இருந்தது. (நூல் - ஸூனன் திர்மிதி, முஸ்லீம், அபுதாவுத், நஸயீ, இப்னுமாஜா)


வலது கரத்தில் மோதிரம் அணிதல்

அலீ இப்னு அபுதாலிப்; (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் வலது கரத்தில் மோதிரம் அணிபவர்களாக இருந்தனர். (நூல் - அபுதாவுத், நஸயீ)


வாள்

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் வாளின் கைப்பிடி வெள்ளியாலாகியிருந்தது. (நூல் - ஸூனன் திர்மிதி, முஸ்லீம், அபுதாவுத், நஸயீ, தாரமீ)


உருக்குச் சட்டை

ஸூபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவர்கள் கூறியதாவது : உஹதுப் போர் அன்று நபி (ஸல்) அவர்கள் இரண்டு உருக்குச் சட்டை அணிந்திருந்தனர். (அதை அணிந்த வண்ணம்) ஒரு கற்பாறையில் ஏறமுயன்றனர். ஆனால் முடியவில்லை. அபுதல்ஹா (ரலி) அவர்களை கீழே அமரச் செய்து (அவர்கள் மேலேறி) அதில் ஏறி அமர்ந்துக் கொண்டார்கள். (அப்போது) நபி (ஸல்) அவர்கள் தல்ஹா (எனது பரிந்துரையை) கடமையாக்கிக் கொண்டார் என்று கூறியதை நான் செவியுற்றேன். (நூல் - ஸூனன் திர்மிதி, அஹமத்)


தலைப்பாகை

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது மக்காவில் நுழைந்தார்கள். அப்போது அவர்கள் தலையில் கருப்புத் தலைப்பாகை இருந்தது. (நூல் - ஸூனன் திர்மிதி, முஸ்லீம், அபுதாவுத், நஸயீ, இப்னுமாஜா)


கீழாடை

அபூதர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது : ஆயிஷா (ரலி) அவர்கள் ஒட்டுப்போட்ட ஒரு போர்வையையும், கடினமான ஒரு வேட்டியையும் எங்களிடம் காட்டி இந்த இரண்டையும் அணிந்த நிலையில் தான் நபி (ஸல்) அவர்களுடைய உயிர் கைப்பற்றப்பட்டது என்று கூறினார்கள். (நூல் - ஸூனன் திர்மிதி, புகாரி, முஸ்லீம்)


நடை

அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களை விட அழகான எவரையும் நான் கண்டதில்லை. அவர்கள் முகத்தில் சூரியன் இலங்கிக் கொண்டிருப்பது போலிருக்கும். நபி (ஸல்) அவர்களைப் போன்று விரைவாக நடப்பவர்களை நான் கண்டதில்லை. பூமி அவர்களுக்கு சுருட்டப்பட்டது போல் இருக்கும். நாங்கள் (அவர்களோடு) செல்ல பெரும் சிரமத்தை எடுத்துக் கொள்வோம். ஆனால் அவர்களுக்கு எச்சிரமமும் இருக்காது. (நூல் - ஸூனன் திர்மிதி, அஹமத், இப்னுஹிப்பான்)


உணவருந்துதல்

கஆப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் மூன்று விரல்களால் சாப்பிடுவார்கள். அந்த மூன்று விரல்களைச் சூப்பவும் செய்வார்கள். (நூல் - முஸ்லீம்)


பேச்சு

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் உங்களைப் போன்று விரைவாகப் பேசக்கூடியவர்களாக இருந்ததில்லை. அவரிடம் அமர்ந்திருப்பவர் மனனம் செய்யும் வண்ணம் இடைவெளிவிட்டு தெளிவாக அவர்களின் பேச்சு இருக்கும். (நூல் - ஸூனன் திர்மிதி, அபுதாவுத், நஸயீ)

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் (சில வேளைகளில்) விளங்கிக் கொள்வதற்காக ஒரு வார்த்தையை மூன்று முறை கூறுவார்கள். (நூல் - ஸூனன் திர்மிதி, புகாரி)


சிரிப்பு

அப்துல்லா இப்னு ஹாரிஸ் இப்னு ஜஸ்வு (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களை விட அதிகம் புன்னகை புரியக் கூடிய எவரையும் நான் பார்த்தில்லை. (நூல் - ஸூனன் திர்மிதி)

ஆமிர் இப்னு ஸஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது : கன்தக் போர் (அகழ் போர்) அன்று நபி (ஸல்) அவர்கள் கடவாய் பற்கள் தெரியுமளவுக்குச் சிரித்தார்கள். எதற்காகச் சிரித்தார்கள் என்று ஸஅத்(ரலி) யிடம் கேட்டேன். அதற்கவர்கள் (அகழ் போர் அன்று எதிரி) ஒருவன் கேடயத்தை வைத்துக் கொண்டு நான் விடும் அம்புகளை எல்லாம் தனது நெற்றியைத் தாக்குவதை விட்டும் தடுத்துக் கொண்டிருந்தான். நான் அம்பை எடுத்து (சமயம் பார்த்துக் கொண்டிருந்தேன்) அவன் தலையை உயர்த்திய போது அம்பை எறிந்தேன். அது குறிதவறாமல் அவன் நெற்றியை பதம் பார்த்தது. அவன் கீழே விழுந்து காலை உயரத் தூக்கிக் கொண்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள் கடவாய்ப் பற்கள் தெரியுமளவு சிரித்தார்கள். நீங்கள் எதற்க்காகச் சிரித்தீர்கள்? என்று கேட்டேன். அந்த மனிதரிடம் நீர் நடந்து கொண்ட முறையைப் பார்த்துத் தான் என்று கூறினார்கள்.


நகைச்சுவை

அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களிடம் நகைச்சுவையாகப் பேசுகிறீர்களே என்று கேட்டபோது, ஆம்! எனினும் நான் உண்மையைத் தவிர வேறு எதையும் கூறமாட்டேன் என்று கூறினார்கள். (நூல் - ஸூனன் திர்மிதி)

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது : ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ஏறிச்செல்ல ஒரு வாகனம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உம்மை ஒரு ஒட்டக குட்டியின் மீது ஏற்றி விடுகிறேன் என்றார்கள். அதற்கு அம்மனிதர் ஒட்டகக் குட்டியை நான் என்ன செய்வேன் அல்லாஹ்வின் தூதரே! என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் எந்த ஒட்டகமும் (தாய்) ஒட்டகத்தின் குட்டி தானே! என்றார்கள். (நூல் - ஸூனன் திர்மிதி, அபூதாவுத்)

ஹஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிழவி வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் சுவர்க்கம் செல்ல துஆச் செய்யுங்கள்! என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நிச்சயமாக கிழவி சுவர்க்கத்தில் நுழைய முடியாது என்றார்கள். அப்பெண்மணி அழுதவர்களாக திரும்பிச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பெண்மணியிடம் கூறுங்கள். அப்பெண்மணி கிழவியாக இருக்கும் நிலையில் சுவர்க்கம் செல்லமாட்டார்கள். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக நாம் அப்பெண்களை புதிய படைப்பாக உண்டாக்கி அவர்களைக் கன்னிகளாகவும், பாசமுடைய சமவயதினராகவும் ஆக்குவோம். (அல்குர்ஆன் : 56 : 35 - 37)


தூக்கம்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் உறங்கினால் குறட்டைவிடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை குறட்டைவிடுமளவுக்கு உறங்கினார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்கள் தொழுகைக்கு அறிவிப்புச் செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்து தொழுதார்கள். ஆனால் உளுச் செய்யவில்லை. (நூல் - புகாரி, முஸ்லீம், அபூதாவுத், நஸயீ, இப்னுமாஜா)

அபுகதாதா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் பயணிக்கும்போது இரவில் ஒய்வெடுக்க எண்ணினால் வலதுபுறமாகப் படுத்துக் கொள்வார்கள். ஸூப்ஹ் நேரத்தின் நெருக்கத்தில் ஒய்வெடுக்க விரும்பினால் கையை நட்ட வைத்து தலையை (வலது) கையின் உள்ளங்கையில் வைத்துக் கொள்வார்கள். (நூல் - முஸ்லீம், இப்னுகுஸைமா, இப்னுஹிப்பான்)


படுக்கை

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் உறங்கும் படுக்கை தோலாலானது. அதன் உள்ளே பேரீத்தநார்கள் நிரப்பப்பட்டிருக்கும். (நூல் - ஸூனன் திர்மிதி, புகாரி, முஸ்லீம்)


Reference By:

அன்புடன் ,
முஹம்மத் இக்பால்,
நிர்வாகி,
இஸ்லாமிக் தாவா குழுமம்.(www.facebook.com/groups/islamicdawah1)

No comments:

Post a Comment