Digital Time and Date

Welcome Note

Saturday, May 19, 2012

மூலிகை வளம் நிறைந்த குற்றால அருவிகள் !!!!



குற்றாலம் என்றதும் நமது நினைவுக்கு வருவது அழகிய நீர்வீழ்ச்சி.
பசுமையான மலைத்தொடரும்,அடர்ந்த வனங்களும், மூலிகைப் புதர்களும், அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத பூமி குற்றாலம். தென்னாட்டின் மூலிகைக் குளியலறை அல்லது தென்னகத்து ஸ்பா என்று பெருமையோடு அழைக்கப்படும் இந்த குற்றாலம் ஏழைகளும் அனுபவிக்கும் இயற்கை சீதனம். குற்றாலத்தின் குளுமையை அனுபவிக்கவே ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்நகருக்கு வந்து செல்கின்றனர். தென் தமிழ்நாட்டில் உள்ள புகழ்மிக்க அருவி நகரான குற்றாலத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

குற்றால சீசன் காலம்

தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கிவிட்டாலே தமிழ் நாட்டு எல்லையில் கேராளாவுடன் உரசிக் கொண்டிருக்கும் மலைத்தொடர்களில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும். இந்த மழை நீர் நதியாக உருவெடுத்து, மூலிகைக் காடுகள் வழியாக தவழ்ந்து வந்து குற்றாலத்து மலைகளில் அருவியாக கொட்டுகிறது. இந்த அருவி நீர் உடலையும், மனதையும் ஒருங்கே குளிர்வித்துக் கொண்டிருக்கும் இயற்கை அதிசயம்.

தென்மேற்குப் பருவ மழை உச்சத்தில் இருக்கும் பொழுது ஓயாத சாரலுடனும், பெருத்த காற்றுடனும், மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக வெள்ளியை உருக்கி விட்ட அருவிகளாகக் கொட்டுகிறது. அந்த உச்ச கட்ட பருவ காலத்தில் குற்றாலத்தில் தங்கியிருந்து அந்த இதமான சாரலை அனுபவிப்பது பொன்னான அனுபவம். ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் வரை அருவிகளில் தண்ணீர் கொட்டும் காலமே "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.

இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும். குற்றாலத்தில் பேரூராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான விடுதிகள் உள்ளன. முக்கிய அருவி எனப்படும் பேரருவியில் பெண்கள் குளிப்பதற்கு தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்கள் மிகவும் குளிர்ந்து காணப்படுவதால் அதற்கேற்ற உடைகளை எடுத்துச் செல்வது நல்லது.

மூலிகைகளும், பழவகைகளும்

இந்த அருவி நீர் பல்வேறு மூலிகை குணங்கள் உடையனவாகவும், பல நோய்களுக்கு குணமளிப்பதாகவும் ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் வெள்ளம், மூலிகைச் சாறுகளுடன் கலந்து தண்ணோடு பல்வேறு கனி மங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன. பாக்கும், தெளிதேனும், பாகும், பலாவும் நிறைந்த மலை. இங்கு 2000 வகையான மலர்களும், செடிகளும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ரங்குஸ்தான், மலை வாழை, டொரியன், பலா, மங்குஸ்தான், சீதா, கொய்யா, சப்போட்டா, மா, நெல்லி, போன்ற எண்ணற்ற பழ வகைகள் இந்த மலைகளில் காய்க்கின்றன. பல அறிய மூலிகைகள் மலையின் மேலும் பண்ணைகளிலும் வளருகின்றன.

குற்றாலம் அருவியில் குளிப்பது என்பது குதூகலமான ஒன்று என்பதையும் விட, இந்த அருவிக்கு மருத்துவ குணம் இருப்பதும், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது.

குற்றாலம் அருவி

குற்றாலம் அருவி
அமைவிடம் தென்காசி
ஆள்கூறு 8.9217° N 77.2786° E
மொத்த உயரம் 290 அடி

குற்றால அருவிகள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டகுற்றாலம் பேரூராட்சியில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளவை. இது தென்னகத்தின் "ஸ்பா" என்றழைக்கப்படுகிறது.

இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமாகும்.பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீர் ஆதலால் இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

ஒன்பது அருவிகள்

குற்றால அருவிகள் என மொத்தம் ஒன்பது அருவிகள் காணப்படுகின்றன.

1. பேரருவி - இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.

2. சிற்றருவி - இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.

3. செண்பகாதேவி அருவி - பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

4. தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

5. ஐந்தருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.

6. பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்)- இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு.


7. புலி அருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த அருவிக்கு பாசுபத சாஸ்தா அருவி என்ற மற்றொரு பெயரும் உண்டு.

8. பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 4 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது. சுமார் 100 அடி உயரத்திலிருந்து இந்த அருவியில் தண்ணீர் விழுகிறது.

9. பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது


No comments:

Post a Comment