Digital Time and Date

Welcome Note

Saturday, May 5, 2012

திராவிட மாயை(!?)


ஒரு இனம் உலகெங்கும் உள்ள மொழியியல், தொன்மையியல் ஆராய்ச்சியாளர்களால் அந்த இனத்தின் மொழியாலேயே, அந்த மொழியின் தொன்மையாலேயே இனம் காணப்படுகிறது. சமஸ்கிருதம், ஹீப்ரூ உட்பட பல தொன்மையான மொழிகள் இன்று செத்த மொழிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் உயிருடன், வீச்சுடன், செழுமையுடன் வாழும் மிகச்சில தொன்மையான மொழிகளுள் தமிழும் ஒன்று. அதனால் இந்தியர்களுக்கு, தமிழர்களுக்கு அதன் முக்கியத்துவமும் பெருமையும் தெரிகிறதோ இல்லையோ உலக அறிஞர்களும், பல வளர்ந்த நாடுகளும் தமிழுக்கான மரியாதையை, தமிழுக்கான முக்கியத்துவத்தை தங்கள் மொழி சார்ந்த நிகழ்ச்சிகளில் கொடுக்கின்றன, கொடுக்கிறார்கள்.
periyar_329 
தமிழில் இருந்து நீண்ட நெடுங்காலத்திற்கு முன் பிரிந்த தெலுங்காகட்டும், சில நூறு ஆண்டுகளுக்கு முன் பிரிந்த கன்னடமாகட்டும், வெகு சில ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மலையாளமாகட்டும் அனைத்தும் தமிழ் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையே. ஆரியர்களைப் பொறுத்தவரை சிந்து சமவெளி நிலப்பரப்பில் இருந்த கறுப்பர்கள் யாவரும் திராவிடர்களே. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அவர்களின் வருகையின் போது தமிழ் இப்போது உள்ள வடிவத்தில் இல்லையென்றாலும் அது பல மொழிகளாக பிரிந்திருக்கவில்லையென்றும், ஒரே மொழியாகத்தான் இருந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும் ஆரியர்கள் தமிழர்களைக் குறிக்க பயன்படுத்திய இந்த 'திராவிட' எனும் சொல் தமிழ், பின் திரமிள என்பதில் இருந்து மருவிய சொல்லேயாதலால் அதனை சமஸ்கிருத சொல்லாக ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் திராவிட என்பதற்கு சமஸ்கிருதத்தில் வேறு எந்த அர்த்தமும் கிடையாது. அதனால் திராவிட என்பது தமிழர்களைக் குறிக்க பிரத்யேகமாக ஆரியர்களால் உபயோகிக்கப்பட்ட வார்த்தையே ஆகும். நாம் பெரும்பான்மையாக வாழ்ந்த நிலப்பரப்பையும் 'திராவிடர் நிலம்' என்றே வழங்கினார்கள். (ஆதாரம்: ரிக்வேத கால ஆரியர்கள் நூல். எழுதியவர்: ராகுல சாங்கிருத்தியாயன்)
திராவிட (தமிழ்) இனத்திற்கு எதிரானவர்கள், முக்கியமாக சமஸ்கிருதத்தை தங்கள் கடவுளர் மொழியாகக் கொண்டுள்ள இந்து மதவாதிகள் கூறும் இன்னொரு குற்றச்சாட்டு, கால்டுவெல் அடிப்படையில் ஒரு பாதிரியார் என்றும் அதனால் மதத்தை பரப்ப அவர் செய்த சதியே ஆரிய-திராவிட மொழிக்குடும்ப பிரிப்பு என்பதும் ஆகும்! சரி அப்படியே ஆகட்டும்! நாம் கால்டுவெல்லை கணக்கில் எடுத்துக்கொள்ளவே வேண்டாம். ஆங்கிலேய அரசின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் ICS (Indian Civil Service) அதிகாரியாக, இராமநாதபுரம், சென்னை உட்பட்ட இடங்களின் ஆட்சியாளராக பல ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றியவர் எல்லிஸ். திராவிட மொழிகளை இனங்கண்டதில், திராவிட மொழிகளின் தனித்துவத்தை கண்டறிந்ததில் இவரது பணி போற்றத்தக்கது. (இவர் பிற்காலத்தில் தன் பெயரை தமிழ் மேல் கொண்ட காதலால் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற வண்ணம் எல்லிஸன் என மாற்றிக்கொண்டார்.)
1804ல் வில்லியம் காரே என்ற அறிஞர் தமது சமஸ்கிருத இலக்கண நூலில் இந்தியாவில் பேசப்பட்ட அனைத்து மொழிகளுக்குமே வேர்-மொழி சமஸ்கிருதம் என்ற கருத்தை முன்வைத்த போது அதற்கு எல்லிஸ் தலைமையில் இயங்கிய சென்னைக் கல்விச் சங்கக் குழு ஆதாரங்களுடன் வன்மையாக எதிர்ப்பு தெரிவித்தது. பின் அக்கல்லூரியின் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த அலெக்ஸாண்டர் காம்பெலின் 'தெலுங்கு மொழி இலக்கணம்' என்னும் நூலுக்கான முன்னுரையில் திராவிட மொழிகளின் தனித்துவத்தையும், அவற்றுள் தமிழுக்கான முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டிருக்கிறார் எல்லிஸ். அதாவது கால்டுவெல்லுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே! கால்டுவெல் தன் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ஆராய்ச்சி நூல் மூலம் திராவிட மொழிக் குடும்பத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியிருந்தாலுமே கூட, அவருக்கு பல ஆண்டுகள் முன்பே எல்லிஸ் அந்த பணிகளை துவங்கிவிட்டார். முதன்முதலில் சமஸ்கிருதத்தில் இருந்து தென்னிந்திய மொழிகள் முற்றிலும் வேறுபட்டவை என்று பறைசாற்றியவர் எல்லிஸ். தாமஸ் ட்ரவுட்மேன் என்ற மொழியியல் ஆராய்ச்சியாளர் தன் 'திராவிடச் சான்று' புத்தகத்தில் ஆதாரங்களுடன் இவற்றை எடுத்துவைத்திருக்கிறார். அதனால் எல்லிஸ் ஆரம்பித்த, செய்த பணிகளை முழுமைப்படுத்திய கால்டுவெல்லை பற்றிய மதம் சார்ந்த குற்றச்சாட்டுக்களை நாம் கருத்தில் கொள்ளவே தேவையில்லை.
அடுத்து, ஏன் மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் தங்களை திராவிடர்கள் என அழைத்துக்கொள்வதில்லை என்று கேட்கப்படுகிறது. திராவிடம் என்ற சொல்லில் (superior or root language) வேர்மொழி தமிழ் தான் என்று அனைத்து ஆராய்ச்சிகளும், அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒருமித்த குரலில் தெரிவிக்கும் போது 'திராவிடம்' என்ற சொல்லாடலை அவர்கள் பயன்படுத்தினால் தமிழர்க்கு கீழ் அவர்கள் என்ற தோற்றம் ஏற்படும் தானே! அதாவது இந்துக்களில் பார்ப்பனர்களுக்கு கீழ் மற்ற சாதியினர் என்பதைப் போல! அதனால் தான் அவர்கள் அதை உபயோகிப்பதில்லை. இந்த ஏற்றத்தாழ்வு சாதியைப் போல கட்டுக்கதைகளாலும், புராணங்களாலும் வரையறுக்கப்பட்டதல்ல. தமிழின் தொன்மையால் நம் இனத்திற்குக் கிடைத்த பேறு. இந்தப் பேறை நாம் ஒதுக்கலாமா? 
திராவிடம் எனச் சொல்வது அனைத்து திராவிட மொழிகளுக்கும் நம் மொழியான 'தமிழ்' தாயாக இருந்தது என்பதாகத் தான் அர்த்தப்படுமேயொழிய, நம் மொழிக்கு உயர்வுதானேயொழிய எந்த வகையிலும் சிறுமை இல்லை. திராவிடன், திராவிடம் என்ற சொற்பதங்களை நாம் புறக்கணித்தோமானால் நாளை இந்தப் பெருமையும், உண்மையும், நம் தொன்மையும் மறைக்கப்படலாம், மறந்து போகலாம், காணாமல் போகலாம்!
திராவிடம் என்பதற்கான இலக்கணம் இப்போது திரிந்து சீர்க் கெட்டுக் கிடக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. இப்போது திராவிடம் என்பதை வெறும் அரசியல் கட்சிகளாக பலர் அடையாளம் காண்கின்றனர். திராவிடக் கட்சிகளைப் பிடிக்காதவர்கள் திராவிடக் கொள்கைகளை, திராவிட கருத்தாக்கத்தை பிடிக்காததது போல் நடந்துகொள்வது அறியாமையே! உதாரணத்திற்கு இன்றைய தமிழ்த் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் நாளை தப்பு செய்தால், அந்தத் தலைவர்களை திட்டுவார்களா? தமிழ்த் தேசியக் கொள்கையை திட்டுவார்களா என்பதே என் ஐயம்!
மேலும் மதராஸ் மாகாணமாக இருந்தபோது திராவிட நாடு என்பது ஒட்டுமொத்த தென்னிந்திய திராவிட நிலப்பரப்பையும் குறிப்பதாய் இருந்தது. உறவுச் சிக்கல் ஏற்பட்டு உணர்வு ரீதியாக பிற மொழியினருடன் இயைந்து வாழமுடியாது என்ற நிலை ஏற்பட்டு நிகழ்ந்த மாநிலப் பிரிவுக்குப் பின், பெரியார் காலத்திலேயே தமிழ்நாடு தமிழர்க்கே, திராவிடநாடு தமிழர்க்கே என்ற முழக்கங்கள் எழத்துவங்கி விட்டன. விடுதலை நாளிதழிலேயும் அப்படியான முழக்கங்களே வெளிவந்தன. இன்றும் பெரியார் திடலில் அந்த முழக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
இதையெல்லாம் திராவிட இயக்கங்கள் முன்வைத்த திராவிடநாடு என்பது தமிழ்நாடே என நிரூபிக்க மிகப்பெரிய வரலாற்றுச் சம்பவம் ஒன்று உண்டு. இந்தியா முழுவதையும் சில பெரிய மாநிலங்களாகப் பிரித்தால் மாநிலங்கள் பலம் வாய்ந்ததாக இருக்கும் என்ற கருத்து மேற்குவங்காள முதல்வர் பி.சி.ராயால் முன்மொழியப்பட்டது. அதாவது தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவற்றை ஒன்றாக தட்சிணப்பிரதேசம் என்ற மிகப்பெரிய மாநிலமாக அறிவிக்கலாம் என்றும் அதை தட்சிணப்பிரதேசம் என்றும் குறிப்பிடலாம் என்றும்! இதுகுறித்த தீர்மானம் 1956ல் அமிர்தசரஸீல் பி.சி.ராயால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நேருவின் அமைச்சரவை இது குறித்து முதல்வர்களிடம் கருத்து கேட்டபோது காமராசர் முதலில் ஒப்புக்கொண்டார். பின் பெரியார் அவசரமாக காமராசருக்கு ஒரு தந்தி அடித்து இதற்கு ஒப்புக்கொண்டால் தமிழ்நாட்டில் தமிழர்களின் முக்கியத்துவம் குறைந்து, பிறமொழியினரின் ஆதிக்கம் வந்து எல்லா துறையிலும் தமிழர்கள் ஓரங்கட்டப்படுவார்கள் என அறிவுரை வழங்கினார். இதையேற்ற காமராசர் தன் ஒப்புதலில் பின்வாங்கினார். (அண்ணாவும் இந்த தட்சிணப்பிரதேச திட்டத்தை ஏற்கவில்லை) அதன்பின் பல முதல்வர்களுக்கு விருப்பமில்லாததால் நேருவால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதாவது இன்றைக்கு தமிழ்த் தேசியவாதிகள் தூற்றும் திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார், தான் விரும்பிய திராவிட நாட்டில், தான் முன்வைத்த திராவிட நாட்டில் உணர்வில் வேறுபட்ட மலையாளிகளையோ, கன்னடரையோ, தெலுங்கரையோ ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. மேலும் திராவிட இயக்கங்கள் முன்மொழிந்த திராவிட நாடானது தனித்தமிழ்நாடே என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?
திராவிட இயக்கங்கள், கட்சிகள் வலுப்பெற்று இருக்கும் இந்த 50 ஆண்டுகளில் தமிழகம் ஏராளமாக வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதுயும், பிற வடமாநிலங்களை விட தொழிலிலும், உட்கட்டமைப்பிலும் பலபடிகள் முன்னே இருக்கிறது என்பதும் நிதர்சனம். இந்தியாவின் பிற மாநிலங்களுக்குச் சென்றவர்களுக்கு இந்த உண்மை புரியும்.
அதே நேரத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் சமஸ்கிருதத்தின் பாதிப்பு பெரிய அளவில் இன்று இருக்கிறது. (அம்மொழிகள் தமிழ் பெரு அளவிலும், சமஸ்கிருதம் பின்னாளில் சிறு அளவில் கலந்து உருவான மொழிகள் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.) தமிழில் கூட சுமார் 40 அல்லது 50 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட பத்திரங்களாகட்டும், அச்சிடப்பட்ட செய்தித்தாள்களாகட்டும் பெருமளவில் சமஸ்கிருதம் கலந்திருந்தது. படிப்படியாக அதை நீக்கி தமிழின் தனித்தன்மையை மீட்டெடுத்ததும் திராவிட இயக்கங்களே! (சிறு தகவல்: எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை அரசாணையாக்கி எல்லா பத்திரிக்கைகளுக்கும் அனுப்பியபோது அதை ஏற்காத ஒரே பத்திரிக்கை துக்ளக்! இன்றும் அந்தப் பத்திரிக்கையில் வேறு எந்த ஊடகத்திலும் இல்லாத அளவிற்கு வடமொழி வார்த்தைகள் சரளமாக உபயோகப்படுத்தப்படுவதைப் பார்க்கலாம்.)
தமிழ்த் தேசிய முழக்கம் திராவிடக் கொள்கைக்குள் அடங்குமேயொழிய அது தனியொரு கொள்கை ஆகாது! இன்று புதிதாய் முளைத்துள்ள சில தலைவர்கள் தங்கள் சுயலாபத்துக்காக திராவிடக்கொள்கையை தமிழர்களுக்கு எதிரி போல் திரிக்கிறார்கள். தமிழை, தமிழுக்கு எதிரியாய் திரித்தல் எவ்வளவு ஆபத்தோ, அறிவீனமோ அதைப் போல, சாதிய அடக்குமுறைக்கு எதிராக திராவிட இயக்கங்களால் நிறுவப்பட்ட 'திராவிடக் கொள்கை' அம்பேத்கர் சொன்னதைப் போல, என்.எஸ்.கிருஷ்ணன் பாடியதைப் போல "கருப்பு சிவப்பு என்ற பேதத்தை நீக்கும்.. பள்ளு பறையரோடு கள்ளர் மறவரென உள்ள பேதங்களை ஒழித்துக்கட்டும்" என்ற கொள்கை கொண்டதால் தற்கால சாதிய உணர்வோடு செயல்படும் தமிழ்த் தேசியவாதிகளுக்கு உவர்ப்பாக இருக்கிறது என்பதே உண்மை!
சமீபத்தில் முளைத்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சி - தனது கொள்கையாக - தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத யாரையும் தான் முன்வைக்கும் தமிழ்த் தேசியத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்று பல மேடைகளில் அறிவித்திருக்கிறது. இதன்படி தமிழர்களின் அழிவிற்காக அயராமல் பாடுபடும் சுப்பிரமணியஸ்வாமியும், தமிழ் எழுத்து சீர் பெறுவதைக் கூட விரும்பாத சோவும் தமிழர்கள் ஆவார்கள். தமிழகத்தை ஆள்வதற்கு தகுதியுடைவர்கள் ஆவார்கள். ஆனால் காலம் காலமாக தமிழகத்தில் ரத்தம் சிந்தி உழைக்கும் தெலுங்கு பேசும் அருந்ததியர் போன்ற ஆதி திராவிடர்கள் தமிழர்கள் ஆகமாட்டார்கள்! அவர்களை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்! இவர்கள் 'திராவிடர்கள்' என்று எதிர்ப்பது யாரைத் தெரிகிறதா? 
இதுபோன்ற கொள்கையுடைய போலி தமிழ்த்தேசியவாதிகள் தான் சாதியத்துக்கு எதிராக இருக்கும் திராவிடத்தின் மீது சேற்றையள்ளி இறைக்கிறார்கள். பெரியாரைத் திட்டுகிறார்கள். அம்பேத்கரைத் தூற்றுகிறார்கள். வரலாறு அறியாமல் பிதற்றுகிறார்கள். பல ஆண்டுகாலம் தமிழருக்காக, தமிழர் நலனுக்காக உழைப்பவர்களைக் கூட, உலகத் தமிழர்கள் போற்றும் தலைவர்களைக் கூட அவர்களின் சாதி அடையாளத்தை மனதில் கொண்டு, நன்றி மறந்து "நீ யார்?" என்கிறார்கள்!
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். சாதி-மத பேதமற்ற தமிழ்நாடு தமிழருக்கே என்பதே திராவிடக் கொள்கை. திராவிடம் என்பது என்ன எனப் புரிந்தால்தான் தமிழ்த் தேசியத்தின் உண்மையான முகம் புரியும். தமிழ்த் தேசியம் என்பது திராவிடக் கொள்கையேயொழிய புதியதொரு கொள்கை அல்ல! எதிரியை விட்டுவிட்டு சுயநலத்தின் பொருட்டு வளர்த்துவிட்டவர்களின் மார்பில் பாய்கிறவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு சாதி மத பேதமற்ற தமிழ்ச்சமுதாயம் படைப்போம்.

திராவிடர் என்பது இனம்! திராவிடம் என்பது அடக்குமுறைக்கெதிரான கொள்கை! திராவிட மொழி என்பது தமிழ்! திராவிடன் என்போன் தமிழன்!

No comments:

Post a Comment