ஸ்பெக்ட்ரம்... கடந்த ஓராண்டாக இந்தியர்கள் இறைவனின் திருநாமத்தைவிட
அதிகம் உச்சரித்த பெயர். சில பல வணிக விளையாட்டுகள்,சில பல சதிகள், சில பல
அரசியல் சடுகுடுகள், அரசிற்கும்,நீதித்துறைக்குமான "தான் யார் என்ற அகங்காரங்கள்" இவற்றோடு மக்களிடையே மண்டையைக் குழப்பவைத்த
மீடியாக்கள் என்று ஓராட்டம் ஆடி இப்போது இரண்டாம் சுற்றில் நிற்கிறது.
என்னதான் நடந்தது இதில்? எதுதான் உண்மை?
ஸ்பெக்ட்ரம் என்பது அதிர்வெண்.அதாவது மெஹாஹெர்ட்ஸ்னு சொல்றோம் இல்லையா அதுதான். நாட்டில் உள்ள தாதுக்கள்,கனிமங்கள் போல இதுவும் ஒரு வளம். சரி இது எதுக்கு அரசாங்கத்துகிட்ட இருக்கணும்? விசயம் சிம்பிள்.. இதை அரசாங்கம் ஒழுங்கு செய்யாம ஆளுக்காள் ஒரே அலைவரிசையில் செயல்படுத்த ஆரமிச்சா தகவல் தொடர்பில் குழப்பம் வரும். சரி 2ஜி அப்படின்னா என்ன? இதுக்கு முன்னாடி 1ஜி இருந்ததால இது 2ஜி. ஆஹா.. அப்ப 1ஜி அப்படின்னா என்ன? முதன்முதலில் செல்பேசி சேவை அனலாக் முறையில் இயங்கியது. தாத்தா காலத்து டெக்னாலஜி. அதுல நீங்க பேசுனா நான் கேக்கலாம், நான் பேசுனா நீங்க கேக்கலாம்.இதைத்தாண்டி ஒரு வசதியும் கிடையாது. அதுவும்கூட அத்தனை துல்லியமாக சில நேரம் இருக்காது.
அடுத்து வந்தது டிஜிட்டல் தொழில்நுட்பம். இதுதான் 2ஜி. இது gsm மற்றும் cdma அப்படின்னு ரெண்டு வழில இயங்குது. இந்தச் சேவைகள், 800, 900, 1800, 1900 மெகா ஹெர்ட்சில் ஏதோ ஒன்றில் வேலை செய்யும். ஒவ்வோரு நாட்டுலயும் வேறவேற அதிர்வெண்ல இருக்கும். இந்தியாவில் 900, 1800 என்ற இரண்டு அதிர்வெண்களில் செல்பேசிச் சேவைகள் இயங்குகின்றன.
1800 மெகா ஹெர்ட்ஸில் செல்பேசிச் சேவை இயங்குறதுன்னா என்ன? இந்த அதிர்வெண்ணை அடிப்படையாகக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட அலைப் பரவலை (spectrum) இந்தச் சேவைக்காக ஒதுக்குவார்கள். செல்பேசிச் சேவைக்கு அதை நடத்தும் ஒவ்வொரு நிறுவனத்துக்கு இரண்டு பரவல் தேவை. ஒன்று, செல்பேசிச் சேவையின் மையம்.இது இவர்கள் தங்கள் செல்பேசி கோபுரங்களோடு தொடர்பு கொள்ள. மற்றொன்று கோபுரங்கள் தனிப்பட்ட செல்பேசிகளுடன் தொடர்பு கொள்ள. அதாவது அப்லிங் மற்றும் டவுன்லிங். இதுக்காக தகவல் தொடர்பு அமைச்சகம் 75 மெகாஹெர்ட்ஸ் அப்லிங்கிற்கும் 75 மெஹா ஹெர்ட்ஸ் டவுன்லிங்கிற்கும் தருகிறது. அதாவது மொத்தம் 150 மெஹா ஹர்ட்ஸ். இந்த 150 மெஹா ஹர்ட்ஸ்குள்ள அமைச்சகம் எத்தனை நிறுவனங்களை அனுமதிக்கலாம்? தகவல் தொடர்பு அமைச்சகம், ஒரு GSM நிறுவனத்துக்கு 10 மெகா ஹெர்ட்ஸ் பரவலும், ஒரு CDMA நிறுவனத்துக்கு 5 மெகா ஹெர்ட்ஸ் பரவலும் தரலாம் என்று அதற்குமேல் தரக்கூடாது என்பது சட்டம். ஆக, சுமார் 10 நிறுவனங்கள்தான் அதிகபட்சம் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் இருக்கமுடியும். 900, 1800 ஆகிய இரண்டையும் சேர்த்தால், இதைப்போல இரண்டு மடங்கு இருக்கமுடியும்.
சரியா! இப்போ இருக்குற மெகாஹர்ட்ஸைத் தாண்டி அதிகமான நிறுவனங்கள் விண்ணப்பிக்கும்போது அரசு என்ன செய்யும்? சிம்பிள் ஏலம்விடும். ஏன் ஏலம் விடணும்? அப்பதான் யார் அதிகம் கேக்குறாங்களோ அவங்களுக்கு குடுக்கலாம். அரசுக்கும் அதிக பணம் கிடைக்கும். ஆ.ராசா என்ன செஞ்சாரு? ஏலம் விடாம அமைச்சகமே ஒருவிலையை நிர்ணயித்து முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைக்கற்றையை ஒதுக்கினார். இதுனால என்னாச்சு? என்னாச்சா... எவ்வளவு பெரிய துரோகம் இது!! ஏலம் விட்டுருந்தா 1,76,000 கோடிக்கு போயிருக்கும். ஆனா இந்தாளு முன்னுரிமையில் குடுத்தால வெறும் 30,984.55 கோடிதான் அரசுக்கு வந்துச்சு. எவ்வளவு பெரிய பச்சை துரோகம் இந்தாள் செஞ்சது!! இல்லையா? இப்படித்தான் படிச்சதும் தோணும். கொஞ்சம் அதன் மறுபுறத்தையும் பார்ப்போமா?
ஏன் ராஜா இப்படிச் செஞ்சாரு? முதன்முதலில் 1997 இல் சென்னையில் ஸ்கைசெல் நிறுவனத்தின் செல்பேசி உபயோகித்தவர்களுக்குத் தெரியும். அவுட் கோயிங் ஒரு நிமிடத்திற்கு 20 ரூபாய், இன்கம்மிங் 15 ரூபாய். 20 ரூபாய் என்பது அன்று ஒரு தினக் கூலிக்காரரின் ஒருநாள் சம்பளம். ஏன் அவ்வளவு விலை?? காரணம் அன்று அலைக்கற்றை ஏலமுறையில் ஒதுக்கீடு செய்ததால் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மிக அதிகவிலை குடுத்து அந்த உரிமையை வாங்கியது, வாங்கிய தொகையை யார் தலையில் கட்டும்? பயனாளர் தலையில் கட்டும். அதனால்தான் அந்த ரேட்.
அன்று ஒரு தினக்கூலிக்காரரின் ஒருநாள் சம்பளத்தொகையை ஒரே ஒரு அழைப்பிற்காக செலவு செய்த நிலைபோய் இன்று ஒரு தினக்கூலிக்காரர் தான் எங்கே வேலைக்கு வரவேன்டும் என்பதை தன்னுடைய செல்பேசியில் கேட்டு தெரிந்துகொண்டு வரும் நிலைக்கு மலிவாகிவிட்டது தகவல்தொடர்பு. எப்படி? காரணம் அதே ஆ.ராசா. ஏலமுறையில் விலை ஏற்றிக் குடுக்காமல் நிர்ணய விலையில் அலைக்கற்றைகளை வழங்கியதால் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலையில் ஒதுக்கீடு கிடைத்தது. அதனால் அதிக விலை வைக்காமல் 50 பைசா என்ற அளவில் மிகக் குறைந்த விலையில் அழைப்பினை நிறுவனங்கள் வழங்குகிறது.
சரி சார், குப்பனும்,சுப்பனும் செல் பேசலை யார் சார் இப்ப அடிச்சுகிட்டா? நாட்டுல நாலு பெரிய மனுசன் பேசுனாப் போதாதா? அப்படிப் பார்த்தா இந்தாள் தேசத்துக்கு 1,76,000 கோடி இழப்பு ஏற்படுத்துனது உண்மைதானே சார்? ஆமாம் சார். உண்மைதான். ஏல முறையைத் தவிர்த்தால் இழப்பு ஏற்படும்னு தெரிஞ்சேதான் செஞ்சார். " அட அயோக்கியப் பயலுகாளா? தெரிஞ்சேதான் செஞ்சிகளாடா பாவிகளா"ன்னு தோணுதா? கொஞ்சம் வெயிட் பண்ணி அடுத்த பத்தியைப் படிச்சுட்டு அந்த முடிவு சரியா தப்பான்னு யோசிங்க.
நானும் நீங்களும் நாளை மீண்டும் நேரில் சந்திப்பதாக இன்று நேரில் பேசிக்கொண்டு இருக்கும்போது முடிவு செய்கிறோம். சந்தர்ப்ப வசத்தால் நாளை நான் வேறு இடத்திற்கு செல்ல வேன்டிய சூழல். என்ன செய்வேன்? இப்போது மலிவுவிலையில் செல் இருப்பதால் 50 பைசாவிற்கு உங்களை அழைத்து நான் வர இயலாததைச் சொல்லிவிடுவேன். நீங்களும் வரமாட்டிர்கள். ஆனால் நாட்டில் இப்போதும் அவுட் கோயிங் 20 ரூபாய் இன்கம்மிங் 15 ரூபாய் என்ற அளவிலேயே இருந்தால் என்ன ஆகும்? சத்தியமாக இதை எழுதும் என்னிடமும், இதைப் படிக்கும் உங்களிடமும் நிச்சயம் செல்பேசி இருக்காது. நான் உங்களைத் தொடர்புகொள்ள முடியாது. நாளை நீங்கள் என்னைப் பார்க்க வடபழனியில் இருந்து என் வீடு இருக்கும் ஆழ்வார்பேட்டை வருகின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வந்து பார்த்த பின்னர் வீட்டில் என் மனைவி சொல்லித்தான் நான் இல்லை என்பதே உங்களுக்குத் தெரியும். அங்கிருந்து வர 15 கிலோமீட்டர் போக 15 கிலோமீட்டர் என 30 கிமீக்கு குறைந்தது அரைலிட்டர் பெட்ரோல் செலவாகியிருக்கும். குறைந்தது 33 ரூபாய் உங்களுக்கு இழப்பு. உங்களுக்கு என்றால் உங்களுடைய இழப்பு அல்ல, எரிபொருள் என்ற அளவில் இது தேசத்தின் இழப்பு. இந்த 33 ரூபாயில் வரிக்கு முந்தைய அடக்கவிலையான குறைந்தது 15 ரூபாய் அன்னிய செலாவனியாக அரபு நாடுகளுக்குப் போய்விடும். நம் இருவரைப்போல நாட்டில் எத்தனை கோடி பேர்? எத்தனை கோடி லிட்டர் பெட்ரோல் மிச்சம்? இது ஒரு சிறு உதாரணம்தான். இதுபோல பல உதாரணங்களை தகவல் தொடர்பு மலிவினால் தேசத்திற்கு கிடைத்த சேமிப்பை என்னால் அடுக்கிக்கொண்டே போகமுடியும். ஆம் ஆ.ராசா 1,76,000 கோடி இழப்பை ஏற்படுத்தினார். அதே நேரத்தில் கணக்கிட முடியாத லட்சம்கோடியை இந்த தேசத்திற்கு சேமித்துள்ளார். காமாலைக்கரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள். பலருக்கும் அவர் ஏற்படுத்திய இழப்பு தெரிகிறது, எனக்கு அதனால் விளைந்த சேமிப்பு தெரிகிறது. ஒரு அமைச்சராக குப்பனையும்,சுப்பனையும் செல்பேச வைத்ததோடு இந்த தேசத்திற்கும் பலபலபல இலட்சம் கோடிகளை சேமித்துத்தந்த அமைச்சர் ஆ.ராசாவிற்கு என் வந்தனங்கள்.
- நன்றி கவிஞர் புதுகை எம்.எம்.அப்துல்லா
No comments:
Post a Comment