Digital Time and Date

Welcome Note

Thursday, May 3, 2012

கீழக்கரைக்கு பெருமை சேர்த்த வள்ளல் சீதக்காதி பற்றிய தகவல் !!

 



ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பெருமை இருக்கும் அந்த வகையில் கிழக்கரைக்கு பெருமை என்றால் அது வள்ளல் சீதக்காதி அவர்கள் தான் என்று சொல்லலாம் . செத்தும் கொடுத்தான் வள்ளல் சீதக்காதி என்று நாம் நிறைய இடங்களில் ,சினிமா படங்களில் பாடல்களில் கேட்டு இருப்போம் இல்லை கேள்வி பட்டு இருப்போம் . ஆனால் அவரை பற்றிய தகவல் நமக்கு அந்த அளவுக்கு தெரியாமல் தான் இருக்கும் . அதனால் தான் அவரை பற்றி தகவல் இன்னும் நிறைய நபர்கள் தெரிய வேண்டும் என்று நினைத்து இந்த பதிவை நான் பதிகிறேன் .சில நண்பர்களுக்கும் இதை வீட அவரை பற்றிய நிறைய தகவல் தெரிந்தால் அது நமக்கும் தெரிய ஒரு வாய்ப்பாக இருக்கும் இந்த பதிவின் மூலம் .

இன்றும் கிழக்கரையில் உள்ள ஒரு சாலைக்கு வள்ளல் சீதக்காதி சாலை என்று பெயர் இருக்கிறது என்பது குறிப்பிட தக்கது ,
சீதக்காதி பதினேழாம் நூற்றாண்டில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற வள்ளல் ஆவார். இவர் இயற்பெயர் 'ஷைகு அப்துல் காதிறு மரக்காயர்' என்பதாகும். இவர்பெயர் 'ஷெய்க் அப்துல் காதர்' என்றும் அழைக்கப்பெறும்.

இவரின் தந்தையார் 'மவ்லா சாகிப்' என்ற 'பெரியதம்பி மரக்காயர்' ஆவார். தாயார் 'சய்யிது அகமது நாய்ச்சியார்'. சீதக்காதியின் முன்னோர்கள் மரக்கலராயர் மரபில் வந்தவர்கள், அதாவது கப்பலில் வெளிநாடு சென்று கடல் வாணிகம் செய்தவர்கள்; செல்வம் மிக்கவர்கள்; ஊரின் தலைமைக்காரராக விளங்கியவர்கள். இவர் இறந்தநாள் கி.பி.1614ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் நாள் ஆகும்.இதனைக் கீழக்கரையில் உள்ள வாவலிமரக்காயரின் கல்லறையில் எழுதியுள்ள குறிப்பிலிருந்து அறியலாம்;

அவர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தது கீழக்கரை என்பதே சீதக்காதியின் ஊர் என்பர் ஆய்வாளர் கீழக்கரைக்குத் தென்காயல் என்றும் வேறு ஒரு பெயர் உண்டு.அந்த நகருக்குப் பௌத்திரமாணிக்கம், அனுத்தொகைமங்கலம், செம்பிநாடு, நினைத்தது முடித்தான் பட்டினம், வகுதை, வச்சிரநாடு முதலிய பெயர்களும் உண்டு என்பர் ஆய்வாளர்.

இவர் வாழ்ந்த காலம் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதி; தோராயமாகக் கி.பி.1650-1720 என்பர். சீதக்காதி ஒரு தமிழர். இசுலாம் சமயத்தவர்; புகழ்பெற்ற வள்ளல். இந்து-முசுலீம் என்று வேற்றுமை பாராட்டாது அனைவரையும் சமமாகக் கருதி ஆதரித்தவர்; தமிழ்ப் புலவர்களை ஆதரித்துப் போற்றிய பெருமகனார். சீதக்காதி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த இசுலாமியப் பெரியார் 'சதக்கத்துல்லா வலி' ஆவார்; இவர் இசுலாமியப் பேரறிஞர்; மார்க்கக் கல்வியைப் பரவச்செய்தவர். இராமநாதபுரத்தை ஆண்ட கிழவன்சேதுபதி இவரின் நெருங்கிய நண்பர். கிழவன் சேதுபதிக்குச் சீதக்காதி மதியுரை அமைச்சர்போன்று விளங்கினார். கிழவன் சேதுபதி அவர்களின் இயற்பெயர் 'விசய ரகுநாதத் தேவர்' என்பதாகும்; இவர் 1792 ஆம் ஆண்டில் மதுரையின் கீழ் உள்ள தொடர்பை அறுத்துக்கொண்டு தனியாட்சி நடத்தத் தொடங்கினார். அப்பொழுது பாதுகாப்பிற்காக இராமநாதபுரக்கோட்டையும் அரண்மனையும் புதிதாக விரிவாக்கிப் பெரும் பாதுகாப்புடன் கட்டப்பட்டன. அதற்குப் பொன்னும்,பொருளும் கொடுத்து உதவியவர் சீதக்காதி என்பர்

கிழவன் சேதுபதி, சீதக்காதியை உரிமைபாராட்டி அவருக்கு விசயரகுநாதப் பெரியதம்பி' எனத் தன்பெயரைச்சூட்டி மகிழ்ந்தார்.

மார்க்கப்பற்று மிக்க அறிஞரான சதக்கத்துல்லா வலி அவர்களின் சிறப்பினை அறிந்த அவுரங்கசீப் அவரை டில்லிக்கு வரும்படியும்,தென்னிந்தியாவின் கலீபாவாகப் பதவி ஏற்கும்படியும், அவரிடம் ஒப்புதல் கேட்டு மடல் எழுதினார். ஆனால் வலி அவர்கள் அதனை ஏற்கவில்லை; மாறாக, அவுரங்கசீப்புக்குஎழுதியமடலில் சீதக்காதிபற்றிக் குறிப்பிட்டு அவரின் சிறப்புக்களை எடுத்துக் கூறியிருந்தார். முகலாயமன்னர் மகிழ்ந்து சீதக்காதியை வங்காளத்தின்கலீபாவாக நியமித்தார். சீதக்காதியும் அப்பதவியை ஏற்றுத் தமிழகத்திற்குப் பெருமைசேர்த்தார். பின்சிறிது காலத்திற்குப்பின் தாய்நாடு திரும்பினார். மன்னருக்குச் 'சுண்டைக்காய்ப் பருமனுள்ள முத்துக்களால்ஆன செபமாலை('தஸ்பீஹ்மணி')ஒன்றை அனுப்பினார்; ஆண்டவன் தொழுகையில்பெரும் ஆர்வம்மிக்க அவுரங்கசீப் அதனை மனமகிழ்ந்து ஏற்றுக்கொண்டார்.

இவர் பரம்பரையாகப் பெரும் செல்வமிக்க வணிகக்குடும்பத்தில் தோன்றியவர்; அன்றியும் இவரே கப்பல் வணிகம் செய்து பெரும்பொருளீட்டினார்.அக்காலத்தில் இங்கு வணிகம் செய்யவந்த ஆங்கிலக் கும்பெனி யாருக்குச் சீதக்காதியார் எழுதிய கடிதக்குறிப்புக்கள் உண்டு. அதில் "கும்பெனியாருக்கு எவ்வளவு மிளகு தேவையாயிருந்தாலும் தம்மால் அனுப்பமுடியும்" என்று அவர் எழுதிய கடிதக்குறிப்பு உண்டு.எனவே,அக்கால மிளகுவணிகம் முழுவதும் இவர்மூலமாகவே நடந்து வந்தது என்பர் ஆய்வறிஞர்.எனவே வணிகத்தின் மூலம் வானளாவிய செல்வத்தை ஈட்டினார்.ஈட்டிய செல்வத்தினை அனைவருக்கும் வழங்கிச் "செல்வத்துப் பயனே ஈதல்" என்ற கொள்கைக்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தார்.

பெரும்கொடைவள்ளலான இவர்மீது பல சிற்றிலக்கியங்களும், தனிப்பாடல்களும் எழுந்துள்ளன. அவை:
1.செய்தக்காதி நொண்டிநாடகம்.
2.செய்தக்காதி மரக்காயர் திருமணவாழ்த்து- ஆசிரியர் உமறு கத்தாப் புலவர்.
3.சீதக்காதி பேரில் தனிப்பாடல்கள்.(படிக்காசுப்புலவர், நமச்சிவாயப்புலவர், தாசி முதலியோர் பாடியவை).

நபிகள்நாயக மான்மியத்தைச் 'சீறாப்புராணம்' மூலமாக, உலகிற்குப் பரப்பப் பொருள்வளம் மிக்க சீதக்காதி பெரிதும் உதவினார். ஆனால் சீறாப்புராணத்தில் இவர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. அபுல்காசிம் என்பவர் பற்றிய குறிப்புண்டு; மார்க்கப் பேரறிஞர் சதக்கத்துல்லா வலி பற்றிய குறிப்புண்டு; வள்ளல் சீதக்காதியை ஏன் அவர் சுட்டவில்லை என்பது குறித்துத் தமிழ் இலக்கிய உலகில் பல்வேறு விவாதங்கள் எழுந்ததுண்டு. 'செத்துங் கொடுத்தான் சீதக்காதி` என்று இன்றும் தமிழ் உலகில் வழங்கிவரும் முதுமொழி ஒன்றே அவரின் வள்ளன்மையை உலகுக்குப் பறைசாற்றும். இவரின் சிறப்பே, வறுமையில் வாடுவோர், செல்வர், புலவர்கள்,பாமரர் போன்ற அனைவருக்கும் -சாதி,மதம், இனம் பாராது வந்தோர்க்கெல்லாம்- இல்லையென்னாமல் வாரிவாரி வழங்கியமையே.

அவர்காலத்தில் மிகப்பெரும் பஞ்சமொன்று வந்தது. அதில் ஏராளமானோர் உண்ணஉணவின்றி மடிந்தனர். விலைவாசி உச்சக்கட்டத்தினை அடைந்தது. அத்தகைய பஞ்ச காலத்தில் ஏழை எளியோருக்கு எவவிதத் தடையும் இல்லாமல் உணவு வழங்கி உதவினார் சீதக்காதி. இதனை,

ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்
கார்தட்டிய பஞ்ச காலத்திலே தங்கள் காரியப்பேர்
ஆர்தட்டினும் தட்டு வராமலே அன்ன தானத்துக்கு
மார்தட்டிய துரை மால் சீதக்காதி வரோதயனே
-என்ற படிக்காசுப்புலவரின் பாடல் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

சீதக்காதி இறந்தபின் 'படிக்காசுப்புலவர்' பாடிய பாடல் படிப்போர் உள்ளத்தினை உருக்குவதாம்.

இவரின் மகள்வழிச் சந்ததியார் இன்னும் தமிழகத்தில் கீழக்கரையில் வாழ்ந்துவருகின்றனர். இவ்வாறு சீரும் சிறப்பும் பெற்ற சீதக்காதி வள்ளல் மிகப்பெரும் புகழ்வாழ்வு வாழ்ந்து மறைந்தாலும் இன்றும் தமிழர் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டுள்ளார். அவரின் மதவேறுபாடற்ற மனிதநேயம் இன்றைய உலகில் அனைவரும் கைக்கொள்ளவேண்டிய ஒன்று; மனிதநேயத்துடன் பிறருக்கு உதவியவாழ்வு அவர்வாழ்வு.

No comments:

Post a Comment