Digital Time and Date

Welcome Note

Saturday, July 14, 2012

இந்தியாவின் பூர்வக் குடிகள் திராவிடர்கள்.

இந்தியாவின் பூர்வக் குடிகள் திராவிடர்கள். இந்த திராவிட மக்களே சிந்து சமவெளி நாகரிகத்திற்கு உரிமையாளர்கள். பண்டைய இந்தியாவில் திராவிட இன மக்கள் வேளாண்மை, மட்பாண்டங்கள், நெசவு, மரவேலை, ஆபரணங்கள், வணிகம், மீன்பிடித்தல், தோல் பொருள், போர்வீரர்கள், என அனைத்து தொழில் செய்பவர்களாக, எவ்வித பிரிவினையுமின்றி வாழ்ந்தனர். அவர்களுக்கிடயே ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. உயர்ந்தவர் தாழ்ந்தவர்கள் இல்லை. இதற்கிடையே பண்டைய ஈரானிய இனமான ஆரியர்கள் (ஆரியர் என்பதன் பொருள் வெளிநாட்டார் என்பதாகும்) மத்திய ஆசியா பகுதியிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியே மேய்ச்சலுக்காக வந்தனர். திராவிட இன மக்களின் நாகரிகம், பண்பாடு, தொழில், ஆட்சியமைப்பு ஆகியவற்றை கண்டனர்.

இரண்டு இனங்கள் சந்திக்கும்போது எப்போதுமே ஒரு இனம் மற்றொரு இனத்தை அடக்கி ஆள முயலும். தோற்கும் இனத்தின் மொழி, சமயம், அரசு, பண்பாடு, வரலாறு என அனைத்தும் ஆதிக்க இனத்தால் பறிக்கப்படும் என்பது வரலாற்று உண்மை. அவ்வாறுதான் தென்னாப்ரிக்காவின் நீக்ரோக்கள், அமெரிக்காவின் செவ்விந்தியர்கள், ஆஸ்தி ரேலியாவின் டாஸ்மேனியர்கள், இலங்கையில் ஈழத்தமிழர்கள் என பல இனங்கள்  தங்களினத்தின் மண்ணையும் அடையாளங்களையும் இழந்தனர். அதே போலதான் திராவிடர்களின் அனைத்து அம்சங்களையும் ஆரியர்கள் பறித்துக் கொண்டனர்.

அடிமைபடுத்தப்படும் இனம் ஆளும் இனத்தை எதிர்த்து போராடுவதும் உலக வரலாற்று நிகழ்வுகளில் ஒன்று.  அவ்வாறு போராடும் இனமக்களை ஒன்று ஆதிக்கம் செலுத்தும் இனம் அழிக்க முற்படும், அல்லது இவ்வின மக்களில் பிளவினை உருவாக்கி, ஒற்றுமையை குலைத்து, மக்களில் சிறிய கூட்டத்தை நட்பாக்கிக் கொண்டு பெரிய கூட்டத்தை அடிமைபடுத்தும். அதுபோலவே ஆரியர் திரவிட இன மக்களை சாதிகளாக பிரித்தனர். தன் இனத்தை கடவுளின் தூதர்களாக கூறிகொண்டனர். வீரர்களை சத்திரியர்களாகவும், வனிகர்களை வைசியர்களாகவும், வேளாண்மை முதல் செருப்பு தைக்கும் தொழில் வரையுள்ள அனைத்து உழைக்கும் மக்களை சூத்திரர்களாகவும் பிரித்தனர். சூத்திரர்களைவிட வைசியர்கள் மேலானவர்க ளென்றும், வைசியர்களைவிட சத்திரியர்கள் மேலானவர்க ளென்றும், சத்திரியர்களைவிட கடவுளின் பிரதிநிதிகளான தாங்கள் (ஆரிய பிராமணர்கள்) மேலானவர்களென்றும் வர்ணாஸ்ரம தர்மத்தை கற்பித்தனர். இதனால் ஒவ்வொரு சாதியும் தனக்கு கீழ் உள்ள சாதியின் மீது இழிவும், தனக்கு மேல் உள்ள சாதியின் மீது பொறாமையும் கொண்டது. இதில் பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகியோர் இரு பிறப்பாளர்கள், சூத்திரர்கள் மட்டும் ஒரே பிறப்பாளர்கள் மற்றும் சண்டாளர்கள் (மனுதர்மம்,  அத்தியாயம் 8 சுலோகம் 415). ஏனெனில் பண்டைய இந்தியாவில் சத்திரியர்களிடம் படை வலிமையும், வைசியர்களிடம் பொருளாதார வலிமையும் இருந்ததால் அவர்களுக்கு முக்கித்துவம் தரப்பட்டன. சூத்திரர்கள் வெறும் உழைப்பாளிகள் என்பதால் சொத்துரிமை, கல்வி கற்கும் உரிமை, வழிப்பாட்டு உரிமை என அனைத்தும் மறுக்கப்பட்டது. அதேவேளையில் சத்திரியர்களை உயர்வு படுத்த இராமாயணம், மகாபாரதம் கதைகள் போதிக்கப் பட்டன. குறிப்பாக இராமாயணத்தில் இராமன் சத்திரியன் இராவணன் சூத்திரன். ஆக இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டியது, ஒரு இனம் மற்றொறு இனத்தை அடக்கி ஆள அம்மக்களை (ஆதிக்கத்திற்கு எதிராக போராடும் மக்களை) சாதிரீதியாக பிரிக்கப்படுகிறது. சாதியமைப்பு வலிமைபடுத்தப்படுகிறது, மக்களிடையே உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்படுகிறது. இத்தகைய சாதிப்பிரிவுகள் கொண்ட இந்திய சமூகத்தில் புத்தர், மகாவீரர் போன்ற மகான்கள் பிறந்தனர். இவர்கள் தான் சாதிமைப்பையும், பெண்ணடிமைத் தனத்தையும், வேதங்கள்-யாகங்களையும், ஆரியர்களின் புராணங்கள் மற்றும் வேள்விகளையும் கடுமையாக விமர்சித்தனர். பிராமணரல்லாத மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தியானம், அகிம்சை, ஒழுக்கம், கல்வி ஆகியவற்றை பிராமணரல்லாத மக்களுக்கு போதித்தனர். பொளத்தமும் சமணமும் ஆரியரின் வேதங்களை கடுமையாக விமர்சித்தன.

அடுத்து ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் என்ற பெயரில் வந்தனர். 1806-இல் வேலூர் புரட்சி நடந்தது. 1857 -இல் முதல் இந்திய சுதந்திரப் போர் (ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் இதை சிப்பாய் கலகம் என வர்ணித்தனர்)  நடைபெற்றது. இந்த இரண்டு போராட்டங் களும் மட்டுமல்லாமல் அதே காலக்கட்டத்தில் நாடெங்கும் பல பகுதிகளிலும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக பல போரட்டங்கள் நடந்தன. 1857 புரட்சி கடுமையாக அடக்கப் பட்ட பின்னர், நாடெங்கிலும் நடக்கும் போராட்டங்களை ஒடுக்கவும், மீண்டும் 1857 போல் ஒரு புரட்சி நடை பெறாமல் இருக்கவும் ஒரு ஆய்வு நடத்தினர் ஆங்கிலேயர்கள். அந்த ஆய்வில் ஐரோப்பியர் இனமான ஆங்கிலேயருக்கு ஈரானிய  இனமான ஆரிய இனத்தின் இரண்டாயிரம் ஆண்டு சூழ்ச்சி பிடித்துபோனது. அது மக்களை சாதிரீதியாக பிரித்து ஆள்வது. அதற்கு முதலில் இந்திய சமூகத்தில் உள்ள சாதிகளை அரசு ஆவணமாக்குவது. இதற்காக சாதியை உள்ளடக்கிய மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது என 1857 புரட்சியை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழு அறிக்கையளித்தது. அதன்படி அதிகாரப்பூர்வமாக முதன் முதலாக 1860-ஆம் ஆண்டில் தொடங்கி 1871 வரை கணக்கெடுப்பு நடத்தப் பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் தனித்தனியாக நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு, பின்னர் ஒன்றாக இணைக்கப்பட்டு 1872-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. பின்னர் பத்தாண்டு களுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்த திட்டம் வகுக்கப் பட்டது. 1931-ம் ஆண்டில் மட்டும் ஜாதிவாரியாக கணக் கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னர் அந்த மாதிரியான கணக் கெடுப்பு நடத்தப்படவில்லை.

ஆங்கிலேயரின் மக்கள் தொகை கணக்கெடுப்பை பற்றி தெரிவிக்கப்பட்ட கருத்துகள்.

* "மாவட்ட அளவிலான கையேடுகள் (manuals)  மற்றும் களஞ்சியம் (gazetteers)  ஆகியவற்றின் முழு அத்தியாயங்களும் சாதி தகவல்கள் உள்ளடக்கியது. பேரரசை சார்ந்த கணக்கெடுப்புகள் அனைத்தும் சாதி கண்டுபிடிக்கும் மைய்ய நோக்கத்தை கொண்டது. 1872 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதன்மையான பொருள் சாதியை பற்றியதே ஆகும். மக்கள்தொகை கணக் கெடுப்பு ஆணையர் எச்.எச்.ரைஸ்லே சாதி உள்ளடக்கிய இந்திய சமூக கணக்கெடுப்பு ஆங்கில பேரரசின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுவதாக உள்ளது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெளிவாக கூறியுள்ளார்: (Nicholas B Dirks, Castes of Mind: Colonialism and the Making of Modern India (New Jersey: Princeton University Press), Page 15.) 

* "சிப்பாய் கலகத்திற்க்கு பின்னர் ஆங்கில ஆட்சி யாளர்கள் வலியுடன் ஒரு விஷயத்தை உணர்ந்தனர். அது இந்தியாவின் சமூகத்தில் புரையோடியுள்ள சாதி அமைப்பை கணக்கிலெடுத்துக் கொள்ளாதது. இந்த சாதிய அமைப்பு வருங்காலத்தில் இப்படியொரு போராட்டம் மீண்டும் நிகழாமல் தமது அரசை காத்துக்கொள்ள உதவும் என நம்பினர். இதனால் ஒரு சாதியை மற்றோறு சாதிக்கு எதிராக தங்களின் நகர்வை திட்டமிட்டு செய்தனர் (Sekhar Bandyopadhyay, Caste, Politics and the Raj: Bengal 1872-1937 (Calcutta: K P Bagchi & Company), Page 29)

*"சாதி தகவல்களை உள்ளடக்கிய இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆங்கில அரசின் நிர்வாகத்திற்க்கு மிகுந்த பயனுள்ள தேவையாக இருந்தது (B S Cohn, Colonialism and Its Forms of Knowledge (Princeton: Princeton University Press), Page 8.)

* "மக்களுக்குள் பிளவு ஏற்படுத்துவது ஆட்சியாளர் களின் ராஜதந்திரத்தில் மிக அவசியமாகும்.' (ரஜனி பாமி தத், இன்றைய இந்தியா, பக்கம்- 539, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

ஆக ஆங்கிலேயரின் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது இந்திய மக்களிடையே உள்ள சாதி பிரிவுகளை அங்கீகரித்தல், 1857 புரட்சியில் அதிக அளவில் ஈடுபட்ட உயர்சாதியினரின் ஆதிக்கத்தை குறைக்க சூத்திரர்கள் (பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்) மற்றும் பஞ்சமர் (தாழ்த்தப்பட்டவர்கள்) ஆகியோர்களுக்கு கல்வி, அரசு பணிகளில் முன்னுரிமை கொடுத்தல், ஆங்கில அரசு நிர்வாகத்தில் ஆதிக்கம் செத்தும் பார்ப்பனர்கள்களை கட்டுப்படுத்துதல் ஆகிய ஆங்கிலேயர்களின் முடிவுகளுக்கு அப்போதைய மக்கள்தொகை கணக்கெடுப்பு உதவியது.  அதேசமயம் இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆங்கிலேயர் எதிர்பார்த்தப்படியே இந்திய சமூகத்தில் சாதிய எழுச்சிகள் தோன்ற ஆரம்பித்தன. முக்கியமாக பிற்படுத்தப் பட்ட சாதியினர் பிராமணர் ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தனர். அது பின்னர் பிராமணரல்லாதோர் இயக்கம் உருவாக காரணமானது. தாழ்த்தப்பட்ட மக்கள்தொகை அம்மக்களை ஒன்று சேரவும், இயக்கங்கள் உருவாகவும், பின்னர் இடஒதுக்கீடு கேட்கவும் காரணமானது. ஆக ஆரியர்களின் வரணாசிரம கொள்கை மக்களை சாதிரீதியாக பிரிக்கவைத்து ஆதிக்கம் செலுத்த உதவியது. அதே பாதையில் பயணிக்க முயன்ற ஆங்கிலேயர், சாதிகளை  அங்கீகரித்து, நவீன வடிவம் கொடுத்து, ஆட்சியை சுமூக மாக நடத்தவும், மக்களை பிரித்து ஆளவும் உதவியது. அதே நேரத்தில் இந்திய சாதி அமைப்பில் கடைசி அடுக்கில் உள்ள சூத்திரர்களும், பஞ்சமர்களும் அரசியல் அதிகாரத்திற் காகவும், இடஒதுக்கீடுக்காகவும் குரல் கொடுத்துக் கொண்டிருத்த வேளையில் இந்தியா விடுதலை அடைந்தது.

இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் இடஒதுக்கீட்டிற்கு முக்கியமாக பாடுபட்டவர்கள் மூவர்.  அவர்கள் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், சமூகநீதி காவலர் வி.பி.சிங். இந்த மூவர்தான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முப்பெரும் உண்மையான தலைவர்கள். இதில் அம்பேத்கரும் பெரியாரும் தோழர்கள். வி.பி.சிங் இரண்டு தலைவர்களையும் தமது வழிகாட்டிகளாக கொண்டவர். அதே சமயம் இந்த மூவரும் பார்ப்பனியத்தின் மிக முக்கிய எதிரிகளும்கூட.

சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் 1950 -இல் அமலுக்கு வந்தது. இதில் சாதி பற்றி நல்ல நோக்கோடு சேர்க்கப்பட்டிருந்த சில சரத்துக்களைப் பயன் படுத்தி, நீதிக்கட்சி ஆட்சியில் (1921-இல் நிறைவேற்றப்பட்ட வகுப்புவாரி ஆணை) சென்னை மாகாணத்தில் அளிக்கப் பட்டிருந்த பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இருந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்சநீதி மன்றம். எனவே, அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டிய அவசியம் வந்தது. இப்படித் திருத்தம் கோரி சென்னை மாகாணத்தில் மாபெரும் இயக்கம் நடத்தினார் பெரியார். அப்போது ஜவஹர்லால் நேரு இந்தியாவின் பிரதமர். நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர், உடனடியாக தமிழகத்தில் பெரியார் கோரிவரும் திருத்தத்தை மசோதாவாக தயாரித்தார். அதனை அன்றைய அரசியல் நிர்ணய சபையில் (அதுவே நாடாளுமன்றமும் கூட) தாக்கல் செய்தார். அந்த சமயத்தில் அழுத்தமானதொரு உரையையும் நிகழ்த்தினார். இந்திய  அரசமைப்புச் சட்டத்தின் (முதல் திருத்த) சட்டவரைவு விவாதம் 18.5.1951 அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றபோது அம்பேத்கர் ஆற்றிய உரை.

""அரசமைப்புச் சட்டத்தின் 15-வது பிரிவில் புதிய இணைப்பு (திருத்தம்) தேவை என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த விரும்பத்தகாத சூழலுக்கு மூலகாரணம், நீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகள்தான். இந்தத் தீர்ப்பை வழங்கியது, சென்னை உயர்நீதிமன்றம்.

""சென்னை (எதிர்) திருமதி செண்பகம் துரைராஜன் 2. வெங்கட்ராமன் (எதிர்) சென்னை அரசு. இந்த இருவரின் வழக்குகளால், அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற நிலை உருவாகியுள்ளது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசுப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற கருத்தை மையமாகக் கொண்டு நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் விளைவாக, சாதிரீதியான அரசாணை (Communal G.O.) உருவானது. இந்த அரசாணை செல்லாது என்று சட்ட வல்லுனர்களும், நமது மேதகு நாடாளுமன்ற அங்கத்தினர்களும் கூக்குரலி டுகின்றனர்.

அரசியல் அமைப்புச் சட்டம் 16(4) பிரிவு, மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி அல்லது எழுந்துள்ள தேவை களின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை முழுவதுமாக வழங்குகிறது. இந்த 16(4) பிரிவு, அரசமைப்புச் சட்டத்தின் 29-ஆம் பிரிவுடன் முரண் படுவதால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு தரக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கருதுகிறது. மேலும், சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது கூடாது; அது முற்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர் களிடையே பாரபட்சத்தைத் தோற்றுவித்துவிடும்' என்று உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளது. நான், உச்ச நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகளையும் கூர்ந்து படித்தேன். இந்த இரண்டு தீர்ப்புகளும் மிகுந்த அதிருப்தியைத் தருகிறது.

இந்தத் தீர்ப்புகள், நமது அரசியல் சாசனத்தின் பிரிவுகளோடு ஒத்துப்போகவில்லை. இது, என்னுடைய வாதம். உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புகளுக்காக நான் வருந்துகிறேன். (நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம். சபாநாயகர் இடைமறித்து, அம்பேத்கர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறார். ஆனால், அம்பேத்கர் அதைப் பொருட் படுத்தவில்லை. அதில் முக்கியமானவர் அன்றைய உள்துறை அமைச்சர் ராஜகோபாலாச்சாரி) அரசியல் சட்டப் பிரிவு 29(2)-இல், மட்டும்'' என்ற வார்த்தையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே இவற்றை நான் கருதுகிறேன். மதம், இனம் அல்லது ஆண், பெண் பேதம் ஆகியவற்றை மட்டும்' அடிப்படையாகக் கொள்ளக் கூடாது. இது 29(2)இன் பொருள். இங்கு ""மட்டும்'' என்ற வார்த்தை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவனிக்கவில்லை என்பது என்னுடைய வாதம். சாதியற்ற இந்துக்கள்' என்று இந்நாட்டில் எவரும் இல்லை. ஒவ்வொரு இந்துவுக்கும் சாதி உண்டு. பார்ப்பனர், மகராட்டா, குன்பி, கும்பார் அல்லது ஒரு தச்சன் இவர்களில் யாரும் சாதியைவிட்டு வாழும் இந்துவாக இல்லை. இந்த நாட்டில், பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்ட சாதியினராக இந்து மதத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்து மதத்தின் பன்னெடுங்கால கொடுமைக்கு ஓர் இடைக் காலத்தீர்வாக, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு மூலம் சில உரிமைகள் வழங்குவது மிகவும் அவசியமாகிறது. இதைக் கருத்தில் கொள்ளும் போது, நமது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஓர் அதிருப்தியான தீர்ப்பாகும். நான், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்குக் கட்டுப் பட்டவனாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அந்தத் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை. இது, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ள சுயேச்சையான உரிமை. இதை விட்டு விட நான் தயாராக இல்லை. இதுவே என்னுடைய அழுத்த மான முடிவாகும். மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 46-வது பிரிவு, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தேவை யான அனைத்து வகையான நலன்களை உறுதிப்படுத்தவும் மேம்படுத்தவும் மாநில அரசுகளுக்கு போதிய அதிகாரத்தை நிர்ணயித்துள்ளது. இந்த அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவை, நாடாளுமன்றத்திற்கு எழுந்துள்ளது. நாடாளுமன்றம் 16(4) மற்றும் 29 ஆகிய பிரிவுகளை விரிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் பிரிவு 15 போதிய விளக்க இணைப்பு (சட்டத் திருத்தம்) சேர்க்கப்பட வேண்டும். இது, ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான உயர்வை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க உதவும்.'' (பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 15 பக்கம் : 331). 1951 மே 19-ஆம் தேதியிட்ட விடுதலை ஏடு அவரது உரையை தலைப்புச் செய்தியாக இப்படி வெளியிட்டது : கம்யூனல் ஜி.ஓ. பற்றிய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு திருப்தியற்றது - பிற்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு உதவிபுரிவதே அரசாங்கத்தின் கடமை- பாராளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கரின் முழக்கம். இன்னொரு நிகழ்வையும் இங்கே நினைவுபடுத்த வேண்டும். இந்தத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்து, நிறைவேற்றித் தந்து, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உரிமையைப் பாதுகாத்துத் தந்த சில மாதங்களில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அம்பேத்கர்.

அரசியலமைப்புச் சட்டம் என்பது அம்பேத்கரின் தனி விருப்பத்துக்கு ஏற்பத் தயாரிக்கப்பட்ட ஒன்று அல்ல. அரசியல் நிர்ணயசபையில் நிறைய பார்ப்பனியவாதிகள் இருந்தார்கள். அவர்களை எதிர்த்து அவர் முடிந்த மட்டும் போராடினார். ஒரு சில உரிமைகளை தாழ்த்தப்பட்ட- பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பெற்றுத்தந்தார். மற்றபடி அந்தச் சபையின் பெரும்பான்மை முடிவுக்கு ஏற்பவே   அரசியலமைப்புச் சட்டம் உருவானது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டு உரிமையை மூலச் சட்டம் கொண்டிருக்கவில்லை. அதனால்தான் சென்னை மாகாண இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தது. அது ஒரு வழியாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக வாழ்நிலை பற்றி ஆராய ஓர் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் அமுலாக்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் கோரிக்கை வைத்தார். அதைக்கூடச் செய்யத் தயங்கி நின்றது மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசு. பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லையென கடுமையாகச் சாடினார்  அம்பேத்கர். பின்னர் காகா காலேகர் குழு, மண்டல் குழு என்றெல்லாம் பிற்காலத்தில் வந்து, பிற்படுத்தப்பட்டோருக்கு மத்தியில் இடஒதுக்கீடு என்பது வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில்தான் வந்தது. அவ்வளவு காலத்திற்கு அதை வெற்றிகரமாக இழுத்தடித்தது பார்ப்பனியம்.

மண்டல் கமிஷன் ஜனதா கட்சி ஆட்சியின்போது (1977 - 79) அமைக்கப்பட்டது. அந்த கமிஷனின் அறிக்கை  ஜனதா கட்சி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதற்குப் பிறகுதான் தாக்கல் செய்யப்பட்டது. ஜனதா கட்சி ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்த காங்கிரசின் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி அரசாங்கங்கள் அந்த அறிக்கையைக் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கிடப்பில் போட்டு வைத்திருந்தன. 1989-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வி.பி.சிங்கின் தலைமையிலிருந்த ஜனதா தளம், தி.மு.க., தெலுங்கு தேசம் கட்சி, அஸ்ஸாம் கண பரிஷத் முதலியன உள்ளிட்ட ""தேசிய முன்னணி' போட்டியிட்டது. தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் இருந்த முக்கிய வாக்குறுதிகளிலொன்று, அது ஆட்சிக்கு வந்தால், மண்டல் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்பதாகும். வி.பி.சிங் பிரதமரானார். மண்டல் குழு பரிந்துரைகளை பலத்த எதிர்ப்புகளையும் மீறி நடைமுறைப் படுத்தினார். பா.ஜ.க.வின் எதிர்ப்பு, பொருளாதார அளவு கோலை மட்டுமே வலியுறுத்தும் இடதுசாரிகளின் போக்கு ஆகியவற்றின் காரணமாக, மத்திய அரசுப் பணிகளில் 27 இடவிழுக்காடு ஒதுக்கீடு (இதுவும்கூட சில துறைகளுக்குப் பொருந்தாது) முறையை நடைமுறைப்படுத்தினார். இதன் பின்னர் உச்ச நீதிமன்றம் மண்டல் கமிஷன் தொடர்பான தீர்ப்பு ஒன்றில் ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 50%-ஐத் தாண்டக்கூடாது என்று கூறியது.

அம்பேத்கரை தனது வழிகாட்டியென கூறிக்கொண்ட வி.பி.சிங், அம்பேத்கர் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது ஆக்கங்கள் அனைத்தும் இந்தியிலும் பிற மாநில மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு சாமானிய மனிதருக்கும்கூட கிடைக்க ஏற்பாடு செய்தார்.   அம்பேத்கருக்கு ""பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டதும், அவரது உருவப்படம் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள்  திறந்து வைக்கப்பட்டதும் வி.பி. சிங் ஆட்சிக் காலத்தில்தான். அம்பேத்கரின் அறைகூவலை ஏற்று, பவுத்தம் தழுவிய தலித் மக்களுக்கும் பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீடு உண்டு என்று அறிவித்தார் வி.பி.சிங்.

தமிழகத்திற்கு வருகை தரும் இந்தியப் பிரதமர்கள், சங்கராச்சாரிகளையும், மேல்மருவத்தூர் சாமியார்களையும் சந்தித்து ஆசி பெற்று வந்த அரசியல் - பண்பாட்டு மரபு உருவாக்கப்பட்டிருந்த சமயத்தில் அவர்களுக்கு மட்டு மல்லாது, பல ""சமயச்சார்பற்ற' அரசியல் தலைவர்களுக்கும் ""அலர்ஜியாக' இருந்து வரும் தந்தை பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்திய ஒரே ஒரு இந்தியப் பிரதமர் வி.பி.சிங்தான். இவ்வாறு மூன்று தலைவர்களும் (அம்பேத்கர்-பெரியார்-வி.பி.சிங்) ஒரே வழியில் பயணித்தவர்கள். அதேசமயத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களின் ஆதரவாளரான வி.பி.சிங்கை எதிர்த்த சக்திகளிலொன்றுதான் ஜெயலலிதா.

2011-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது பிற்படுத்தப்பட்ட இன தலைவர்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றனர். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய மத்திய அரசு 11 அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமித்தது. இந்தக் குழு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் தவிர்த்து மற்ற சாதிகள் வாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த என்னென்ன நடைமுறைகளைக் கையாளுவது என்பது பற்றி ஆராய்ந்து பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்தது. இதன் அடிப்படையிலேயே சாதிவாரிக் கணக் கெடுப்புக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது என பொதுவாக கூறப்பட்டாலும், உண்மை வேறுவிதமானது.

கடந்த பத்தாண்டுகளாக அரசுக்கெதிரான வெகுஜன போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்துவருகிறது. அதிலும் குறிப்பாக ஜம்மு & காஷ்மீர், மேற்குவங்காளம், வடகிழக்கு மாநிலங்கள், ஆந்திர பிரதேசம், தமிழகம் போன்ற மாநிலங் களில் அதிகளவில் நடந்துவருகின்றன. மத்திய இந்தியாவில் பசுமை வேட்டை என்ற பெயரில் அறிவிக்கப்படாத உள்நாட்டு போர் (மத்தியப் பாதுகாப்பு படைக்கும் மாவோயிஸ்ட் அமைப்பிற்கும் இடையே) நடந்துவருகிறது. வருங்காலத்தில் அரேபிய நாடுகளிலும், ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளிலும் நடப்பதை போன்று பன்னாட்டு நிறுவனங் களுக்கு எதிராகவும், அன்னிய மூலதனத்திற்கு எதிராகவும் போராட்டம் நடைபெறும் நிலை வர அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன. இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு, மீண்டும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எடுப்பதன் மூலம், மக்களை சாதிவாரியாக பிரித்து (ஆரியர்-ஆங்கிலேயர்-வழியில்) ஆள மத்தியரசு திட்ட மிட்டுள்ளது. அதேசமயத்தில் இந்த கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டதாகவும் ஆகிவிடும். இந்த கருத்தை பலர் மறுத்து, இந்த கணக்கெடுப்பு மூலம் அந்தந்த சாதி மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு பெற முடியும் என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள். ஆனால் இனியும் இந்தியாவில் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதற் கான வாய்ப்புகள் மிக குறைவு. உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு வழக்குகளின் தீர்ப்புகள், இடஒதுக்கீட்டிற்கு எதிரான காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளின் அரசியல், வேகமாக உருவாகிவரும் தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு மூலதனம் இவற்றை கணக்கில் எடுத்து கொண்டால். மாறிவரும் சூழலில் சமூக நீதிக்கான வாய்ப்புகள் குறைந்துக் கொண்டே வருவது புரியும். அப்படி இருக்கும் போது இந்த சாதிவாரி கணக்கெடுப்பானது, அனைத்து சாதி கட்சிகளுக்கும் தங்கள் சாதி மக்களின் கணக்கை காட்டி அரசியல் செய்யவும், தேர்தலில் சீட் வாங்கவும் பயன்படும். அதே சமயத்தில் தமிழக அரசும் பெரும்பான்மை சாதியினருக்கு அதிகளவு திட்டங்களை வழங்கவும், சிறுபான்மை சாதியினரை கைவிடும் ஆபத்தும் உள்ளது. ஏனெனில் மக்கள் மட்டுமல்ல தமிழக அரசும் சாதி உணர்வு கொண்டதுதான்.   

கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து சாதி சங்க தலைவர்களின் சாதிய அறைகூவலும், தங்களின் சாதி பற்றிய பெருமிதங்களும் பெருமளவில் மிகைபடுத்தப்பட்டவை. ஒவ்வொரு சாதிகளும் போட்டிப்போட்டுக்கொண்டு மிகை படுத்தியவை வரலாற்றில் எந்த ஆதாரமில்லை. இன்று தமிழகத்தில் சிறந்த வரலாற்று ஆய்வாளர்களான தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியம் ஆகியோரின் கருத்துகள் உண்மையை தெரிந்துக்கொள்ள உதவும்.

* "தமிழ்நாட்டில் அனைத்துச் சாதியினருமே நாங்கள்தான் ஆண்ட பரம்பரையினர் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இது எந்தளவிற்கு உண்மை? வரலாற்று ஆசிரியர்கள் வேடிக்கையாகச் சொல்வார்கள். "ராஜா என்பவன் சாதி கெட்டவன்'. ஏனென்றால் அரசியல் காரணங்களுக்காக எல்லா சாதியிலும் ஒரு பெண்ணை எடுத்துக்கொள்வார்கள். ஒரு அரசியல்வாதி அரசியல் செல்வாக்கு உள்ள சாதியிலே பெண் எடுத்துக் கட்டுவான். அந்த சாதியின் வாக்கெல்லாம் அவனுக்குக் கிடைக்கும். அதேபோல்தான் அப்போதும். எனவே ராஜாக்கள் ஒரே ஜாதி இல்லை என்பதைவிட உண்மை இருந்திருக்க முடியாது.  அந்த ராஜாக்கள் பெயரை, பெருவாரியாக உள்ள ஜாதிகள் சில பட்டப் பெயராக வைத்துக் கொண்டு "நாங்கள்தான் ஆண்டோம்' என்று சொல்கிறார்கள்.' (திராவிடக் கருத்தியல் - ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை, தொ. பரமசிவன்)

* "வேந்தர்களின் மீது ஜாதிப் பெயரைச் சூட்டி இன்று அழைப்பதை அறியாமை. பாண்டியன் என்ற பட்டப் பெயர் பல ஜாதியிலே இட்டுக் கொள்கிறார்கள். பாண்டியன் என்று பெயர் இட்டுக்கொள்கிறவர்கள் எல்லாம் பாண்டியர்களா? ஆனால் சேரன், சோழன் என்று பெயர்கள் இட்டுக்கொள்ள வில்லை. பாண்டியன் பெயர் மட்டும் மக்கள் பெயராகத் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது. ஏனென்றால் அந்த அரச மரபுதான் பதினேழாம் நூற்றாண்டு வரைக்கும் உயிரோடிருந்தது. சேர, சோழ மரபுகள் காணாமல் போய் விட்டன‌. வேந்தர்கள், இனக் குழுக்கள் காலத்தில் பிறந்தவர்கள். அவர்களை சாதியோடு தொடர்புபடுத்தவே முடியாது.' (திராவிடக் கருத்தியல்- ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை, தொ.பரமசிவன்)

* "பல்லவர்கள் தமிழர்கள் அல்லர். ஏனென்றால் அவர்களின் தொடக்க கால செப்புப் பட்டயங்கள் - சாரு தேவி என்கிற ராணி வெளியிட்ட "கீரகடகல்', "குணபதேயம்' (இந்த நிலப்பகுதியெல்லாம் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ளன) பட்டயங்கள்- எல்லாம் வடமொழிப் பட்டயங்களாகவே இருந்தன‌. எனவே இவர்கள் எல்லாம் தமிழ் மன்னர்கள் இல்லை. தமிழ்நாட்டிற்கு வந்து, தங்களைத் தமிழர்களாக ஆக்கிக் கொண்டார்கள்' (திராவிடக் கருத்தியல் - ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை, தொ.பரமசிவன்)

* "மூவேந்தர்கள் என்று பேசும்போது, அவர்களின் பூர்வீகமே சிக்கலுடையது. சோழ மன்னர்கள் ஆந்திரப் பகுதியிலுள்ள வேங்கி நாட்டுப் பெண்களை மணந்து கொண்டு அதன் பிறகு வந்த பெண்வழி வாரிசுகள்தான் பிற்காலத்தில் மன்னர்களாக வந்தனர். அப்படியானால் தமிழ் மரபே உடைந்து போகிறதல்லவா? நான் வேடிக்கையாகக்கூட சொல்வது உண்டு. தமிழ்நாட்டில் எல்லா சாதியிலும் ஏதோ ஒரு வகையில் ராஜரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லா சாதிப்பெண்களையும் மன்னர்கள் அப்படி வைத்திருந்திருந்த னர். சாதிக்காரர்கள் தங்களை மன்னர் பரம்பரையினர் என்று சொல்லுவதை மேல்நிலையாக்கம்' என்று சொல்லலாம். அதைத் தவிர வரலாறாக அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதைப் பார்த்து சிரிக்கலாமே தவிர, எதிர்க்க வேண்டியதில்லை. இதில் என்ன முக்கியம் என்றால் ஒரு மன்னன் கூட இதற்கு விதிவிலக்கல்ல.  வரலாறு என்பது அறிவியல்பூர்வமான வரலாறாக இருந்திருக்குமேயானால், யாருமே தங்களை ராஜபரம்பரை' என்று சொல்ல வெட்கப்படுவார்கள். ராஜராஜ சோழன் நானூறுக்கும் மேற்பட்ட பெண்களை, அவர்களின் விருப்பம் பற்றி கவலைப்படாமல் அழைத்துக் கொண்டு வந்து சூடுபோட்டு "தேவரடி'யார்களாக மாற்றிய கொடுமைக்காரன். இத்தகைய வரலாறுகளையெல்லாம் சொன்னால், யாரும் மன்னர்களை சொந்தம் கொண்டாட மாட்டார்கள். இதற் கெல்லாம் வரலாற்று ஆவணம் உண்டு.' (ஆ.சிவசுப்பிரமணியம் அவர்களின் நேர்காணல், கீற்று).

No comments:

Post a Comment