Digital Time and Date

Welcome Note

Monday, August 6, 2012

ரமழானில் முஸ்லிம்கள் கண்ட சவால்கள்


சர்வ உலகையும் படைத்து பரிபாலிப்பவனும், “ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.” (2:183) என்கிற செய்தியையும் தெரியப் படுத்தியவனுமான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
மேலும் அவனது இறுதி தூதர் முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் (ஸல்) மீது அவனது அருளும் சாந்தியும் என்றென்றும் உண்டாவதாக.

ஈமான் கொண்டவர்களே, வல்ல அல்லாஹ் தனது படைப்பை சோதனைக்கு உற்படுத்தி, மனித சமூகமானது முடிவற்ற, எல்லையற்ற இன்பத்தை அடைந்து கொள்வதற்குமான புனித மாதமாக ரமழான் இருக்கின்றது. நோன்பு இருத்தலானது முழுமையான தூயமையடைதலையும், அல்லாஹ்வின் இருப்பை நினைவுப்படுத்தும் மனப்பாங்கையும் வளர்ப்பதனை எதிர்பார்க்கின்றது. ஷைத்தானுடைய சதிவலைகளில் இருந்தும்,இவ்வுலகின் கஷ்டங்களில் இருந்தும் பாதுகாப்பு பெறுவதற்கு, அல்லாஹ்வின் இருப்பு பற்றிய நினைவுபடுத்தலானது (தக்வா) இன்றிமையாததாக இருக்கின்றது. அல்லாஹ் எம்மை நோக்கி பின்வருமாறு கூறுகின்றான்:

“மேலும், சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்; அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது – தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.” (65:2)

முஸ்லிம்களில் அநேகர் இன்று நோன்பைப் பற்றியும், நோன்பாளியின் செய்கைகள் பற்றியும் தெளிவற்று இருக்கின்றனர். அவர்கள் யாவரும் அறை குறை ஓய்வுநிலையில், பகல் வேளையில் அநேக நேரத்தை கட்டிலில் கழிப்பவர்களாக இருக்கின்றனர். அல்லாஹ்வை பயப்படும் போது தொழுகைக்காக எழுந்து நின்றாலும், உடனே தூக்கத்துக்குச் செல்கின்றனர். இந்த அசாதாரண தூக்கமானது அவர்களை சோம்பேறிகளாக அல்லது அநேக சந்தர்ப்பங்களில் களைப்படைந்தவர்களாக மாற்றம் பெறச்செய்கின்றது.

உண்மையிலே ரமழான் ஆனது, அதிகப்படியான உண்ணல், பருகல் செயற்பாடுகளினால் ஏற்படும் பாரங்களில் இருந்து கொஞ்சம் தளர்ந்து ஒதுங்கிய ஒரு நம்பிக்கையாளனிடம், அல்லாஹ்வுக்காக போராடி, சிரமப்படும் மனோநிலையில் ஒரு அதிகரிப்பை எதிர்பார்க்கும் மாதமாகும். ஹிஜ்ரத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 9 ரமழான்களை நபி (ஸல்) அவர்கள் கண்டுள்ளார்கள். அவை ஒவ்வொன்றும் வரலாற்றை தீர்மானித்த நிகழ்வுகளால் நிரம்பி இருந்ததோடு நில்லாமல், தியாக சிந்தை, அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து கட்டுப்படல் போன்ற பலவேறு ஒளிமயமிக்க உதாரணங்களை எமக்கு காட்டி நிற்கின்றன.

ஹிஜரத் முடிந்த முதலாவது வருடத்தில் நபி (ஸல்) அவர்கள் ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) அவர்களை முப்பது குதிரை வீரர்களுடன் சைப் அல் பஹ்ர் எனும் பகுதயில், குரைஷி வீரர்கள் 300 பேர் வழமைக்கு மாற்றமான முறையில் கூடாரமிட்டிருப்பதை விசாரித்தறிவதற்காக அனுப்புனினார்கள். முஸ்லிம்கள் அணி, இறைமறுப்பாளர்களுடன் போரிடுவதற்காக தயாராக இருந்த தருணத்தில் மஜ்தி இப்னு உமர் அல் ஜுஹனி என்பவர் தலையிட்டு இருபக்கத்திலும் சமரசப் பேச்சுவார்ர்த்தை நடாத்தி போரைத் தவிர்க்கச் செய்தார். மக்காவிலுள்ள நயவஞ்சகர்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் தமக்கென்று ஒரு மஸ்ஜிதை கட்டினர் (மஸ்ஜித் அல் திரார்). நபியவர்கள் அம்மஸ்ஜிதை உடைக்குமாறு கோரியது ரமழானில்.


ஹிஜ்ரி 3, ரமழான் 17 இல், வல்ல அல்லாஹ் சத்தியத்தை அசத்தியத்திலிருந்து வேறுபிரித்துக் காட்டிய பதர் யுத்தம் நடைபெற்றது. மக்காவில் தாம் விட்டு வந்த பொருட்களை சுமந்த, மக்காவிலிருந்து புறப்பட்டுள்ள ஒரு வியாபார கோஷ்டியினை வழிமறிப்பதற்காக நபியவர்களும் , தமது தோழர்களில் 313 பேரும் புறப்பட்டனர். அபூசுப்யான் அவர்களால் தலைமைதாங்கப்பட்ட அந்த வியாபார சரக்குகளின் பெறுமதி சுமார் 60,000 தினார்கள் என்று சொல்லப்படுகின்றது. வியாபார கோஷ்டியினை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு ஏமாற்றம் காத்திருந்தது. செல்வாக்கு மிக்க குரைஷி படைகள் போதிய யுத்த ஏற்பாடுகளுடன் , இஸ்லாத்தை அடியோடு தீர்த்து கட்டும் நோக்கில் குழுமியிருந்தனர். மூன்றுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் அவர்களது படைகளின் பலம் அதிகரித்து காணப்பட்ட போதிலும், தமது தரப்பு பலமற்று, தயாரற்று காணப்பட்ட நிலையில், நபியையும், தாம் கொண்டிருக்கும் மார்க்கத்தையும் பாதுகாப்பதற்காக தமது உயிரை கொடுத்து வீர மரணம் எய்து தம் இறைவனை சந்திப்பதற்காக முழு மூச்சுடன் தயாராகினர் முஸ்லிம்கள். அல்லாஹ், குறித்த இந்த ரமழான் தினத்தில் வரலாற்றில் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத மகத்தான வெற்றியை கொடுத்தான்.


ஹிஜ்ரி 6 இல் ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்களின் தலைமையில் வாதி அல் குரா எனும் பகுதிக்கு அரசியாக இருந்த பாத்திமா பின்த் ராபியாஹ் எனும் பெண்ணை எதிர்ப்பதற்காக அனுப்பப்பட்டார்கள். இதற்கு முன்னர் ஜைத்(ரழி) அவர்களின் தலைமையில் சென்ற ஒரு வியாபார கூட்டத்தை பாத்திமா தாக்கி அதிலுள்ள செல்வங்களை கொள்ளையடித்து இருந்தாள். அராபியாவிலேயே மிகவும் பாதுகாப்புக்கு மத்தியில் இருந்த பெண்ணாக அவள் கருதப்பட்டாள். தமது நெருங்கிய உறவினர்களினது வாள்கள் ஐம்பதினை தமது வீட்டில் கொழுவி இருந்ததாக கூறப்படுகின்றது. இஸ்லாத்தின் பகிரங்க எதிரியாக பாத்திமா காணப்பட்டாள். ரமழான் மாதம் ஒன்றில் இந்த முஸ்லிம்களுடனான யுத்தத்தின் போது அவள் கொல்லப்பட்டாள்.

ஹிஜ்ரி 8 அளவில் ஹுதைபிய்யா உடன்படிக்கை மீறப்பட்டிருந்தது. முஸ்லிம் படைகளும் வடக்கில் பைசாந்தியர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த காலமது. இந்நிலையில் மக்காவை கைப்பற்றி அராபிய தீபகற்பத்தில் இறை மறுப்புக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய தேவையை முஹம்மத் (ஸல்) அவர்கள் உணர்ந்தார்கள். அல்லாஹ், தனது ஆலயப் பிரதேசத்துக்குள் அமைதி,பாதுகாப்பு மற்றும் புனிதம் பேணப்பட வேண்டும் என்று பிரஸ்தாபித்திருந்தான். நிர்வாணத்தன்மை மற்றும் இன்னோரன்ன அசிங்கங்களிலிருந்தும் அப்புறப்படுத்தி கஃபாவை தூய்மையாக்க வேண்டிய காலம் வந்தது. மதீனா நகரம் முன்பொருபோதும் காணாத ஆயுதப்படையுடன் நபியவர்கள் மக்காவை நோக்கி புறப்பட்டார்கள். மக்காவை நெருங்க நெருங்க படைகளில் புத்துணர்ச்சியும் புதுத்தெம்பும் உதித்தன. அல்லாஹ்வின் உதவி கொண்டு ,நம்பிக்கையாளர்களின் மனதில் இருந்த உறுதியினால், மக்கா நகரம் ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல் ரமழான் 20 அன்று கைப்பற்றப்பட்டது. இந்நாள் இஸ்லாமிய நாட்களில் மிகவும் முக்கிய நாளாக கருதப்படுகின்றது. காரணம், இதற்கு பிறகே இஸ்லாம் அராபிய தீபகற்பத்தில் தனக்கென்ற இடத்தை உறுதியாக பதித்துக் கொண்டது. அதே மாதம், அதே ஆண்டில் மக்காவில் உள்ள சிலைகளை சிதைத்த பிறகு, இணைவைப்பு மையங்களுக்கு படைப்பிரிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன. அல்-லாத், மனாத், ஸுவா போன்ற அராபியாவின் பெரும் சிலைகள் தகர்க்கப்பட்டன.

இவ்வாறு தான் நபியவர்களது காலத்தில் ரமழான் இருந்தது. உள்ளத்தை தூய்மை படுத்தி, நன்மையை ஏவி, தீமையை தடுத்து, தமது வாழ்வுக்கும், செல்வத்துக்கும் எதிராக கடுமையாக உழைக்கும் ஒரு காலமாக இருந்தது. நபியவர்களது மரணத்தின் பின்னால் இந்த பாரம்பரியத்தை முஸ்லிம்கள் சுமந்தனர். அல்லாஹ் உண்மையான நம்பிக்கையாளர்களை கொண்டு பிற்பட்ட காலத்தில் வரலாற்றை மாற்றி அமைத்தான். ரமழான், சோதனைகள் நிறைந்ததாகவும், முக்கிய நிகழ்வுகளை கொண்டதாகவும் பிற்பட்ட காலத்தில் தொடர்ந்தது.

ஹிஜ்ரிக்கு பின் தொண்ணூற்று இரண்டு வருடங்களுக்கு பின்னர் இஸ்லாம், வட ஆபிரிக்கா,ஈரான், ஆப்கானிஸ்தான், எமன் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளுக்கு வியாபித்திருந்தது. விசிகொத்களின் கொடுங்கோல் அரசனான ரோடேறிக் என்பவனின் ஆட்சிக்கு கீழ் ஸ்பெயின் இருந்தது. ரோடேறிக் தனது அறுபது இலட்சம் சேர்ப் படைகளை கொண்டு யூதர்களை கொடுமை படுத்தியபோது, யூதர்கள் வட ஆபிரிக்கவிலுள்ள முஸ்லிம்களின் உதவியை நாடினர். இதற்கு பதில் அளிக்கும் முகமாக, உமையாக்களின் வட ஆபிரிக்காவின் கவர்னராக இருந்த மூஸா இப்னு ஹுசைர் தமது துணிச்சல் மிக்க தளபதியான தாரிக் பின் zஸியாத் அவர்களின் தலைமையில் 12,000 பாபாரிய, மற்றும் அராபிய துருப்புக்களை அனுப்பி வைத்தார். அவ்வாண்டின் ரமழான் மாதத்தில் முஸ்லிம் படைகள், ரோடேறிக் தலைமையில் வந்திருந்த 90,0௦௦ கிறிஸ்தவ படைகளை எதிர்கொண்டனர். வெள்ளை கழுதைகளால் சுமக்கப்பட்ட, பெறுமதி மிக்க மாணிக்கங்களால் பொறிக்கக்கப்பட்ட, வெண்மையான வெள்ளி நிற அரியணையில் ரோடேறிக் வீற்றிருந்தான். அவனுடைய படகுகளை எரித்த தாரிக், முஸ்லிம்களை நோக்கி, சுவர்க்கம் எமக்கு முன்னால் இருப்பதாகவும், கடலும், தோல்வியும் காலடியில் இருப்பதாகவும் உரத்த குரலில் அறைகூவல் விடுத்தார். இந்த அறைகூவல் கொடுத்த உஷாரில் முஸ்லிம்கள் ரோடேறிக்கின் படைகள் மீது பாய்ந்தனர். அல்லாஹ் இறை மறுப்பாளர்களின் அணிக்கு எதிராக மகத்தான வெற்றியை அளித்தான். இந்த யுத்தத்தால் ரோடேறிக்கும், அவனது படைகளும் முற்றாக ஒழிந்தது மாத்திரமன்றி ஸ்பெயின்,சிசிலி மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றை முற்றாக விடுவிப்பதில் மூஸாவும், தாரிக்கும் வெற்றி பெற்றனர். இதுவே பிற்காலத்தில் 700 ஆண்டுகள் வரை முஸ்லிம்கள் ஆட்சி செய்ய வழி வகுத்த அல்-அந்தலுஸ்ஸின் பொற்காலத்தின் ஆரம்பத்தை குறிக்கின்றது.

ஹிஜ்ரி 682 இல் சலாஹுத்தீன் அல் அய்யூபி அவர்கள் கொடுங்கோல் கிறிஸ்தவர்களுடன் (Crusaders) பல ஆண்டுகள் போரிட்ட பின், இறுதியாக சிரியாவை விட்டும், பாலஸ்தீனை விட்டும் அவர்கள் ஆக்கிரமித்து இருந்த நிலங்களில் இருந்தும் விரட்டியடித்ததும் அல் அக்ஸா மஸ்ஜிதை முஸ்லிம்களின் ஆளுமைக்குள் கொண்டு வந்ததும் ரமழான் மாதத்திலேயே.

ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டில் மொங்கோலிய படைகள் ஆசியா முழுவதும் தமது அராஜக அட்டகாசத்தை புரிந்து கொண்டிருந்தனர். செல்லும் வழியில் காண்பதை எல்லாம் அழித்து தரைமட்டமாக்கினர். “மனிதர்களின் பாவங்களுக்கு தண்டனை வழங்குவதற்காக இறைவனால் அனுப்பட்ட சவுக்கு” என்பதாக ஜெங்கிஸ் கான் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டான். ஹிஜ்ரி 617 இல் சம்ர்கந்த்,ராய் மற்றும் ஹம்தான் மாநிலங்கள் வாள்களுக்கு இரையாகின. 700,000 இற்கும் அதிகமான மக்கள் கொலை அல்லது கைது செய்யப்பட்டனர். ஹிஜ்ரி 656 இல் ஜெங்கிஸ் கானுடைய பேரனான ஹுலாகு, இந்த அட்டூழியத்தை தொடர்ந்தான். முஸ்லிம் உலகின் முன்னணி நகரமான பக்தாத் கூட விட்டு வைக்கப்படவில்லை. இப்பெரும் வெறியாட்டத்தில் கிட்டத்தட்ட 1,800,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது. கிறிஸ்தவர்கள் வெளிப்படையாக பன்றி இறைச்சியையும், மதுபானத்தையும் அருந்துவதற்கு கேட்டுக்கொள்ளப்பட்டனர். எஞ்சி இருந்த முஸ்லிம்கள், அளவுக்கதிகமாக மதுபானம் அருந்தப்படுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். மஸ்ஜித்கள் தோறும் மதுபானம் தெளிக்கப்பட்டது; தொழுகைக்கான அதான் கூட மறுக்கப்பட்டது. இவ்வாறான பொறுக்க முடியாத அட்டூழியங்கள் முஸ்லிம் உலகில் பீடித்திருந்த நிலையிலும், ஐரோப்பாவும் அதற்கு சரணடைய இருந்த நிலையிலும், அல்லாஹ் எகிப்தின் மாம்லூக்களில் இருந்து சைபுத்தீன் குத்ஸ்z எனும் மா வீரரை திரண்தெழச் செய்தான். இவர் முஸ்லிம் படைகளை அணி திரட்டிக் கொண்டு ஐன் ஜாலூத் எனும் இடத்தில் ஹிஜ்ரி 658, ரமழான் 26 அன்று மொங்கோலிய படைகளை சந்தித்தார். மிகுந்த அழுத்தத்துக்கு மத்தியிலும், முஸ்லிம்கள், அல்லாஹ்வின் உதவியைக் கொண்டும், தந்திரோபாய உத்திகளின் மூலமும், அச்சமற்ற துணிச்சலுடனும் மொங்கோலிய படைகளை சிதறடித்து, இந்த அக்கிரம அலைகளின் போக்கை அணைத்தனர். முழு நாகரிக உலகமும் இந்த இஸ்லாமிய மகன்களின் துணிச்சலையும், வெற்றியையும் கண்டு வியந்து, பாராட்டி, நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ரமழானுடைய இந்த ஆன்மிக சக்தி தான், எமது மூதாதையர்கள் எந்தளவு கஷ்டமான சவால்களையும் இலகுவாக எதிர் கொள்ள வழிவகுத்தது. பகல் பொழுதை குதிரைகளிலும், இரவு நேரங்களில் அல்லாஹ்வின் அன்பையும் பாவ மன்னிப்பையும் எதிர்பார்த்து வணக்கங்களில் ஈடுபடுவதுமாக, தொடர்ச்சியான செயற்பாடுகளை கொண்ட காலமாக இருந்தது.

இன்று முஸ்லிம் சமூகம் வறட்சி,இராணுவ ஆக்கிரமிப்பு, பரவலான துஷ்பிரயோகம், மற்றும் சடவாத சிந்தனைகளால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றது. நிச்சயமாக நாம், எம் அன்புக்குரிய நபி (ஸல்) அவர்கள், அவர்கள் வழி நின்ற அபாரமான சஹாபாக்கள், தாரிக் பின் zஸியாத், குத்ஸ்,ஸலாஹுத்தீன் மற்றும் எண்ணற்ற இஸ்லாமிய வீரர்களின் பாதையில் நடக்கக்கூடிய நம்பிக்கையாளர்களை வேண்டி நிற்கின்றோம்; நிச்சயமாக நாம், இறை மறுப்பாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு கிலி கொள்ளாத, அதே வேளை நம்பிக்கை கொள்ளும் மக்களுடன் பணிவாகவும், அன்பாகவும் நடக்கக்கூடிய நமபிக்கையாளர்களை வேண்டி நிற்கின்றோம்; வெறுமனே தாகித்தோ, பசித்தோ இருக்கும் நோன்பை விட, முழுமையான நோன்பு நோற்கக்கூடிய அத்தகைய முஸ்லிம்கள் தேவைப்படுகின்றனர்.

இஸ்லாத்தை இந்த பூமியின் எல்லா மூலைகளுக்கும் எடுத்துச்செல்லக்கூடிய, இந்த காலப்பகுதிக்கு பொருந்திச் செல்லக்கூடிய ஒரு முஸ்லிம் பரம்பரையை எழச்செய்வானாக…! மேலும் அவர்களுக்கு திடமான அத்திபாரத்தை வழங்குவதற்கான பலத்தையும், வெற்றியையும் எமக்கு நல்கச் செய்வானாக…! ரமழானிலும், அதற்கு பின்னரும் எமது இஸ்லாத்தை எடுத்துச்செல்லக்கூடிய கூட்டத்தினரில் எம்மைச் சேர்ப்பானாக…! மேலும் தாம் செய்யாத ஒரு செயலை பிறருக்கு ஏவும் கூட்டத்தில் எம்மை சேர்க்காதிருப்பானாக…!

நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது ஸலாம் கூறிக்கொண்டு இருக்கின்றனர். நம்பிக்கையாளர்களே..! நீங்களும் அன்னாருக்கு என்றென்றும் உங்களது ஸலாத்தை தெரிவிப்பீர்களாக…!

– Dr. Abdullah Hakim Quick (http://www.islamicity.com/Articles/articles.asp?ref=IC0211-1786)

தமிழில்: முஹம்மது மfபாஸ்

நன்றி - www.puttalamonline.com

No comments:

Post a Comment