Digital Time and Date

Welcome Note

Thursday, September 20, 2012

வீதி வரை மனைவி; காடு வரை பிள்ளை அர்ஜென்டினாவில் கடைசி வரை நாய்

                                                   வீதி வரை மனைவி; காடு வரை பிள்ளை அர்ஜென்டினாவில் கடைசி வரை நாய்
நியூயார்க்:காடு வரை பிள்ளை; கடைசி வரை யாரோ? என பாடலில் கேட்டிருக்கலாம். அதற்கு பதில் தரும் வகையில், அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு நாய், ஆறு ஆண்டாக, தன் எஜமானரின் சமாதியை வசிப்பிடமாக மாற்றிக் கொண்டு, பார்ப்போரை பிரமிக்க வைத்திருக்கிறது.
அர்ஜென்டினாவில், கார்லோஸ் பாஸ் நகரை சேர்ந்தவர், மிகுல் கஸ்மேன். உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2006ல் மரணமடைந்தார். ஊர் கூடி கதறியழுது, அவரது உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று, சில கி.மீ., தூரத்தில் இருந்தசுடுகாட்டில் அடக்கம் செய்தது. ஊர்வலம் சென்றபோது, கஸ்மேன் வளர்த்த நாய் கேபிடனும், உடன் சென்றது. பின், அவர்களுடனே வீட்டுக்கு திரும்பி விட்டது.
அதன் பின், நாயை காணவில்லை. அதை, கஸ்மேன் வீட்டாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆறு ஆண்டுக்கு பின், கஸ்மேன் சமாதிக்கு, அவரது மகன் டேமியன், மனைவி வெரோனிகா, இரண்டு நாளுக்கு முன் சென்றனர். அப்போது, அங்கு படுத்திருந்த நாயை கண்டு, அதிர்ந்த டேமியன், கேபிடன் என சத்தம் போட்டு கூப்பிட்டான். குரலை கேட்டு துள்ளிக் குதித்து வந்த நாய் வாலாட்டியவாறு, டேமியனை நாக்கால் வருடியபடி நின்றது.
இடுகாட்டை நிர்வகித்து வரும் ஹெக்டர் பசேகாவும், சமாதி அருகே நாய், கடந்த ஆறு ஆண்டாக வசித்து வருவதை உறுதி செய்தார்.
இதைக் கேட்டு டேமியனும், வெரோனிகாவும் அடைந்த ஆச்சரியத்துக்கு அளவே இல்லை.
கஸ்மேன், நாயை சிறு குட்டியாக வீட்டுக்கு எடுத்து வந்தபோது, முகம் சுளித்து கோபப்பட்டனர் இருவரும். அதே நாய், கஸ்மேன் மீது உயிரையே வைத்திருப்பது கண்டு, நெகிழ்ந்து கண்ணீர் விட்டனர்.
பின், கேபிடனை வீட்டுக்கு அழைத்து செல்ல முயற்சி செய்தனர். ஆனால், இடுகாட்டை விட்டு வெளியே வர, நாய் விரும்பவில்லை.
கேபிடன், உணவு தேடி வெளியே சென்றாலும், சரியாக மாலை ஆறு மணிக்கு கஸ்மேன் சமாதிக்கு வந்து விடுமாம். அதன் பின், மறு நாள்தான், மீண்டும் உணவுக்காக வெளியே செல்லுமாம். தகவலை சொல்லி கண் கலங்குகிறார் சுடுகாட்டு நிர்வாகி.

No comments:

Post a Comment