கங்காராமய பகுதியில் பெய்ர என்ற பெயர்கொண்டு அழைக்கப்படும் வாவி இந்து சமுத்திரத்தோடு கலக்கிறது. அதன் நடுவே அமைந்திருக்கும் இந்தக் குட்டித் தீவை பிரதான நெடுஞ்சாலையிலிருந்து பாலம் ஒன்றிணைக்கிறது.

அந்தப் பாலத்தினூடாகச் சென்று குட்டித் தீவில் காலடி எடுத்து வைத்தாலே போதும், வேறெங்கோ தேசத்துக்கு வந்துவிட்டதுபோல இருக்கும்.
ஆதலால் தான் காதலர்களின் வருகைக்கு அளவே இல்லாமல் இருக்கிறது. அமைதியாக தமது உணவுர்வுகளைப் பரிமாறிக்கொள்வதற்கும் சுதந்தரக் காற்றை சுவாசித்து காதலின் இன்பத்தை அனுபவிப்பதற்காக வருகை தரும் காதலர்கள் தமது பொழுதை இங்கே கழிக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கும் இங்கு குறைவேயில்லை.
நீல வானம், மனதை வருடும் தென்றல் ஆகியனவும் மோதிப்பார்க்க முயற்சித்து தோற்றுப்போகும் சின்னச் சின்ன அலைகளும் ஆங்காங்கே நீந்தித் திரியும் அன்னப் பறவைகளும் அந்தப் பொழுதுகளை சுவாரஸ்யம் மிக்கதாக ஆக்குகின்றன.
அன்னப் பறவைகளைப் போன்றே உருவாக்கப்பட்ட படகுகள் உல்லாசப் பிரயாணிகளையும் உள்நாட்டவர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளன. குறிப்பிட்ட எல்லைக்குள் இருவர் இணைந்து அரைமணிநேரத்தை இந்தப் படகில் கழிக்கலாம். இதற்காக வயது வந்த ஒருவருக்கு நூறு ரூபாவும் 12 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு ஐம்பது ரூபாவும் அறவிடப்படுகிறது.

இந்தப் பணியை இலங்கை இராணுவத்தினர் செய்து வருகிறார்கள். அங்கு 12 படகுகள் சேவைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குட்டித் தீவைச் சுற்றி அன்னப் பறவை வடிவிலான படகில் சவாரி செய்வதே தனிச் சுகம்தான்.
இதனை அனுபவிப்பதற்காக தூர இடங்களிலிருந்தும் மக்கள் வருகை தருவதாக இராணுவத்தினர் எமக்குத் தெரிவித்தார்கள்.
இந்தக் குட்டித்தீவை அண்மித்ததாக இருக்கும் அழகிய விகாரை சீமா மாலகய என்று அழைக்கப்படுகிறது.
இலங்கையில் சீமா மாளிகா விகாரைக்குத் தனிச் சிறப்பு உண்டு. பெய்ர வாவியில் அமைந்திருக்கும் இந்த விகாரை தினமும் வருகை தரும் நூற்றுக்கணக்கானோரின் மனதில் சாந்தியை விதைக்கிறது.
விகாரைக்கு முன்னால் அமைந்துள்ள சயனநிலை புத்தர் சிலை வரவேற்கிறது.

உள்ளே செல்லும்போது ஏதோ ஓர் அமைதி எம்மை முழுமையாக ஆட்கொள்கிறது. மனதின் அத்தனை மையங்களையும் சாந்தம் என்ற ஒன்று நம்மைத் தொற்றிக்கொள்வதாயும் கௌதம புத்தர் போதித்த சகிப்புத் தன்மைக்கு அது அத்திபாரமிடுவதாயும் உணர்வு ஏற்படுகிறது.
உள்ளேயுள்ள அமைதியான புத்தர் சிலை ஆயிரம் நல்லர்த்தங்களை மனதில் விதைக்கிறது. ஆங்காங்கே உட்கார்ந்து தியானத்தில் ஆழ்ந்திருக்கும் துறவிகளை தொந்தரவு செய்யாவண்ணம் மக்கள் வழிபாட்டில் ஈடுபடுகிறார்கள்.
அதனைச் சார்ந்தே சிறு விகாரையொன்றும் அரச மரமும் அமைந்திருக்கின்றன.

தியானத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள இந்த விகாரையை நிர்மாணித்தவர் ஜெப்ரி பாவா எனப்படும் திறமைமிக்க கலைஞர்.
ஜெப்ரி பாவா

இலங்கையின் மிகச்சிறந்த கட்டிடக்கலை நிபுணர்களில் ஜெப்ரி பாவாவுக்குத் தனித்துவமான இடம் உண்டு. அதுமட்டுமல்ல ஆசியாவின் தலைசிறந்த நிபுணராகவும் மதிக்கப்படுகிறார்.
சீமா மாளிகா என்றழைக்கப்படும் இந்த பௌத்த தியான மண்டபத்தை நிர்மாணித்த பெருமை அவரையே சாரும்.
1919 ஆம் ஆண்டு பிறந்த ஜெப்ரி பாவா இலங்கை மட்டுமல்லாது இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், எகிப்து, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் தனது நிர்மாணத் திறமையை நிரூபித்துள்ளார்.
அவற்றுள் சாதனையாகக் கருதப்படுவது என்னவென்றால், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள இலங்கைப் பாராளுமன்றத்தை வடிவமைத்தவர் ஜெப்ரி பாவா என்பதுதான்.
ஆரம்பகாலங்களில் வீடுகள், விடுதிகள், பாடசாலைகளை நிர்மாணிப்பதில் ஆர்வம் காட்டிய பாவா பின்னர் பாரிய கட்டிடங்களை வடிவமைப்பதில் ஆர்வம் காட்டினார்.
அதில் சுற்றாடலுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலும் வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியத்தை கருத்திற்கொண்டும் செயலாற்றியமையை முழு உலகமும் பாராட்டியது.
அவரது நிர்மாணங்களில் ஒன்றுதான் சீமா மாளிகா எனப்படும் தியானத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் வகையில் கட்டப்பட்ட பௌத்த விகாரை. அலைபாயும் மனதை ஓரிடத்தில் நிலைநிறுத்துவதற்கு இந்தத் தியானமண்டபம் வழிவகுக்கிறது.
தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் வெளிநாட்டு பௌத்த துறவிகளும் தமது அதிகமான பொழுதுகளை இங்கே கழிக்கின்றனர்.
தியான மண்டபத்தைச் சூழ அமைந்திருக்கும் புத்தர் சிலைகளும் இயற்கையோடு ஒன்றிக்கச் செய்வதாய் அமைக்கப்பட்டிருக்கும் சிறு விகாரையும் அமைதி என்ற ஒன்றை மட்டுமே மனதில் விதைக்கின்றன.
தியானத்துக்கு ஏற்றாற்போல இதனை வடிவமைத்து நிர்மாணம் செய்த ஜெப்ரி பாவா இலங்கை வரலாற்றிலும் பாரம்பரியத்திலும் முக்கிய இடத்தை வகிக்கிறார்.
பெய்ர வாவிக்கு நடுவே இத்தனை அழகும் அமைதியும் ஒருமித்திருக்கிறது. இயற்கையின் அதிசயங்களில் இதுவும் ஒன்றுதான். ஏனென்றால் மனதுக்கு நிம்மதியைத் தரக்கூடிய வகையில் அத்தனை அமிசங்களும் ஒருங்கே அமைந்திருக்கின்றன.
இலங்கை அந்நியர் ஆட்சியில் இருந்த காலத்தில் பெய்ர வாவியானது படகினூடாக பொருட்கள் பரிமாறுவதற்கு பெரிதும் பயன்பட்டதாக வரலாறு கூறுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியின் பின்னரும் கட்டுமரங்கள், படகுகளில் மக்கள் சவாரி செய்ததாகவும் பொருட்களை ஏற்றிச்சென்று வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்பின் நிமித்தம் பெய்ர வாவியின் நடுவே அமைந்திருக்கும் குட்டித் தீவுக்கு மக்கள் அனுமதிக்கப்படவில்லை. அத்தோடு படகுச் சவாரிகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
தற்போது பொதுமக்கள் பயனடையும் வகையில் சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது.
இயற்கை கொடுத்த கொடையை சூழல் மாசுபடா வண்ணம் பாதுகாத்து பயனடைவோம்.
Ansaar hayaath
No comments:
Post a Comment