Digital Time and Date

Welcome Note

Monday, January 14, 2013

பழமையை பறைசாற்றும் பாம்பன் ரயில்பாலம்... ஓர் பார்வை

வங்காளவிரிகுடா கடலில் பாம்பன் தீவில் அமைந்துள்ளது ராமேஸ்வரம். தமிழ்நாட்டினையும் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் வகையில் கடந்த 1913ம் ஆண்டு ரயில்பாலம் கட்டப்பட்டது.

நூறு ஆண்டுகளை எட்டப்போகும் பழமையான இந்த பாலத்தின் மீது தற்போது இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்று மோதியுள்ளது. இதனால் பாலத்தின் தூண் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து ரயில்போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இந்தியாவின் முதல் கடல்பாலம்





தமிழ்நாட்டின் நிலப்பரப்பையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் பாக்ஜலசந்தியில் இந்தியாவிலேயே முதல் முதலாக கடல்பாலம் கட்டப்பட்டது. 2.3 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பாலம் இந்தியாவின் இரண்டாவது மிகநீளமாக கடற்பாலமாகும். இந்தப் பாலம் கட்டுமானப்பணிகள் 1913ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1914ம் ஆண்டு திறக்கப்பட்டது. பாலத்தின் கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது. கடலில் மணல், கல்லுடன் கூடிய பவளப்பாறையில் 6,776 அடி நீளத்திற்கு இந்த ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

பாரம்பரிய சின்னம்





இது கப்பல்கள் செல்லும் போது திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ரயில்வேயின் பாரம்பரியம் சின்னமாக அமைந்துள்ளது.1964 ல் ஏற்பட்ட புயலின் காரணமாக பாலம் பலமான சேதம் அடைந்தது. பின்னர் பாலம் புதுப்பிக்கப்பட்டு ரயில் பயணம் தொடங்கியது. தொடக்கத்தில் மீட்டர் கேஜ் பாதையாக இருந்த இந்த ரயில் பாலம் பின்னர் அகலரயில்பாதையாக ஆகஸ்ட் 12, 2007 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன


கடல் கொந்தளிப்பு அதிகம்





இப்பகுதி, கடல் கொந்தளிப்பு அடிக்கடி ஏற்படும் பகுதியுமாகும் பாம்பன் ரயில் பாலம் உலகின் மிகவும் துருப்பிடிக்கத்தக்க பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே நடைபெற்றது. இந்தப் பாலம் கட்டுவதற்கு 5000 டன் சிமென்ட், 18000 டன் இரும்பு எஃகு பயன்படுத்தியுள்ளனர். பாலம் கட்ட ஜல்லிக்கல், மணல் ஆகியவை பல நூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.

இடிபாடுகளில் சிக்கிய கப்பல்





இந்த நிலையில் கொல்கத்தாவில் இருந்து மும்பை செல்ல, ஜனவரி 9ம் தேதி பாம்பன் வழியாக வந்த இரு கப்பல்கள், நள்ளிரவில் வீசிய சூறாவளியில் சிக்கி, பாம்பன் ரயில் பாலம் அருகில் சிக்கிக் கொண்டன. 1964 புயலில் சேதமடைந்த பாலத்தின் இடிந்த விழுந்த கற்களுக்குள் அவை மாட்டிக்கொண்டன.

மீட்க போராட்டம்





ஜனவரி 10ம் தேதி இந்திய கடற்படை கப்பலை இழுத்து வந்த இழுவை கப்பலை மட்டும் மீட்க மாலுமிகள் முயன்றும் முடியவில்லை. மறுநாள், ராமேஸ்வரத்தில் இருந்து வரவழைத்த, 2 விசைப்படகுகள் மூலமாகவும் மீட்க முடியாததால், அன்று மாலை, பாம்பனில் இருந்து மேலும் 2 விசைப்படகுகளை வரவழைத்தனர். அவற்றின் உதவியுடன், இரவு 11 மணி வரை, போராடியும் பயனில்லாமல் போனது. நேற்று காலை, கடல் நீர் மட்டம் உயர்ந்து, காற்றின் வேகம் குறைவாக இருந்ததால், இழுவை கப்பலை மீட்டு விடலாம் என நினைத்த, கடைசி முயற்சியும் தோல்வி அடைந்தது.


மோதிய கப்பல் மீட்பு





இந்நிலையில், கடலில் அதிக நீரோட்டம் காரணமாக கப்பலின் நங்கூரம் பிடி தளர்ந்ததால், அந்த கப்பல் நகர்ந்து பாலத்தின் மீது மோதியது. இதனால் 24-வது எண் பாலம் சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து பெரும் போராட்டத்திற்குப் பின்னர் கப்பல் மீட்கப்பட்டது. கப்பல் மோதியதில் அந்த தூண் 60 டிகிரி கோணத்தில் திரும்பியுள்ளது. இதனால், அது சரி செய்யப்படும் வரை மண்டபம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள்





பாம்பன் கடல் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தரை தட்டி நின்றிருந்த கப்பலை எதிரே பேருந்து போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் பாலத்தில் நின்று சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ஏராளமான சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இன்று கப்பல் மோதியதையும், அதை மீட்க நடந்த போராட்டத்தையும் காண ஏராளமானோர் குவிந்ததால் அப்பகுதியில் பேருந்து போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

http://tamil.oneindia.in

No comments:

Post a Comment