அப்சல்குருவோடு நீதிக்கும் தூக்கு!
பாராளுமன்றத்தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்து பி.வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி.பி.நவ்லேகர்
என்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் கடந்த 04/08/2005
அன்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் அபசல் குரு கடந்த
வாரம் தூக்கிலிடப்பட்டார். அப்சல் குருவோடு சேர்த்து இந்த நாட்டின் நீதி
பரிபாலனமும் தூக்கிலிடப்பட்டுள்ளது.
இந்தத்தீர்ப்பின் மூலம் நம்
நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கின்றதா? இந்திய அரசியலமைப்புச் சாசனச்
சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றனவா? என்ற
சந்தேகம் நம்முடைய உள்ளத்தில் எழுந்துள்ளது.
பாபர் மசூதி விவகாரத்தில் சாகடிக்கப்பட்ட நீதி:
இதற்கு முன்பாக பாபர் மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில்
பள்ளிவாசலை இடித்த பயங்கரவாதிகளுக்கு இரண்டு பங்கும், பள்ளிவாசலை இழந்த
முஸ்லிம்களுக்கு ஒரு பங்கும் வழங்கி அற்புதமான(?) கட்டப்பஞ்சாயத்து
தீர்ப்பை வழங்கி நீதியை நிலைநாட்டினார்கள்(?) நமது நீதிபதிகள்.
அதுபோலத்தான் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனை குறித்த தீர்ப்பும் அமைந்துள்ளது.
இதோ தீர்ப்பின் வாசகங்கள்:
அப்சல் குரு எந்தவொரு பயங்கரவாத குழு அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்
என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. ‘பெரும்பாலான சதித்திட்டங்களில், குற்றச்
சதியில் பங்கேற்றதற்கான நேரடி சாட்சியம் இருக்க முடியாது. இருப்பினும்,
குற்றம் சாட்டப்பட்ட அப்சல் கொல்லப்பட்ட தற்கொலைப் படை பயங்கரவாதிகளுடன்
ஒத்துழைத்தார் என்பது சூழ்நிலைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் போது
தெளிவாகிறது’.
“குற்றம் மிக பெரியது, கொடியது என்பதால் முழு
நாடுமே இதனால் அதிர்ந்துள்ளது என்பதால் “collective conscience of the
society” – ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கூட்டு மனசாட்சியை அப்சல்
குருவிற்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால்தான் திருப்திப்படுத்த முடியும்.
அந்த உச்ச கட்ட தண்டனை மரணதண்டனையாக இருக்க வேண்டும்” என்று நீதிபதிகள்
தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.
ஒருவருக்கு மரணதண்டனை
வழங்குவதாக இருந்தால் அவர் அந்தக் குற்றத்தைச் செய்ததை கண்ணால் கண்ட
சாட்சியம் இருந்தாக வேண்டும் என்பதுதான் மரணதண்டனை வழங்கப்படுவதற்கான நமது
இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் முக்கிய விதிகளில் ஒரு விதியாகும்.
நமது அரசியல் சாசனச் சட்டம் மரணதண்டனை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை
மேற்கண்டவாறு தெளிவாக கூறியுள்ள நிலையில், அப்சல் குரு என்பவர்
பாராளுமன்றத்தாக்குதலை நடத்தினார் என்பதற்கு எவ்வித (கண்ணால் கண்ட
சாட்சிகள்) ஐவிட்னஸும் இல்லாத நிலையில் அவருக்கு மரணதண்டனை விதித்து உச்ச
நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்திருப்பது நம் நாட்டின் நீதிபரிபாலனத்தையே
கேலிக்குள்ளாக ஆக்கியுள்ளது.
அத்தோடு மட்டுமல்லாமல் மரணதண்டனை
வழங்குவதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறிய காரணம் எள்ளி நகையாடக்கூடிய
வகையிலும், நீதிமன்றத் தீர்ப்பைக் காரி உமிழக்கூடிய தரத்திலும் உள்ளது.
மக்களின் கூட்டு மனசாட்சி (“collective conscience of the society”)
அப்சல் குருவை தூக்கிலிட வேண்டும் என்று விரும்புவதால்தான் இவருக்கு தூக்கு
தண்டனை என்று இவர்கள் தீர்ப்பெழுதுவார்களேயானால், மக்களின் கூட்டு
மனசாட்சியை அப்போதுதான் திருப்திப்படுத்த முடியும் என்று இவர்கள்
கூறுவார்களேயானால் இவர்களிடத்தில் சில கேள்விகளை நாம் கேட்க
விரும்புகின்றோம்:
மக்களின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்துவதுதான் நோக்கம் என்றால் ஒருவருக்கு மரணதண்டனை வழங்க எந்த சாட்சிகளும் தேவையில்லையா?
ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டுமா?
இல்லையா? என்பதை மக்களின் கூட்டு மனசாட்சிதான் முடிவெடுக்கும் என்றால் பிறகெதற்கு நீதிமன்றங்கள்?
பிறகு எதற்கு காவல் நிலையங்கள்?
பிறகெதற்கு அரசியல் சாசனச் சட்டம்?
அனைத்தையும் கலைத்துவிட்டு மக்களின் கூட்டு மனசாட்சியையே உச்சநீதிமன்ற உயர் பெஞ்ச் என்று அறிவித்துவிட்டுப் போக வேண்டியதுதானே!
குஜராத்தில் 2000 முஸ்லிம்களைக் கொன்று குவித்து நரவேட்டையாடிய மோடியைத்
தூக்கில் தொங்கவிடவேண்டும். அதுதான் சரியான தீர்வாக அமையும் என்று இந்திய
முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், உலகத்திலுள்ள அனைத்து முஸ்லிம்கள் உட்பட
நடுநிலையான இந்துப் பெருமக்கள் முதற்கொண்டு அமெரிக்காவிலுள்ள ஆட்சியாளர்கள்
வரை அனைவரது கூட்டு மனசாட்சியும் தீர்ப்பளிக்கின்றது.
இதைக் காரணம்
காட்டி மோடிக்கும் சங்பரிவாரக்கும்பல்களுக்கும் மக்களின் கூட்டு மனசாட்சி
அடிப்படையில் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள்
தீர்ப்பளிப்பார்களா?
மேற்கண்ட கேள்விகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார்கள்.
அப்சல் குரு எந்தவொரு பயங்கரவாத குழுவைச் சேர்ந்தவரும் இல்லை – உச்சநீதிமன்றம்:
எந்தவொரு பயங்கரவாத குழு அல்லது அமைப்பைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம்
எதுவுமில்லை என்று தெளிவாக தங்களது தீர்ப்பில் கூறியுள்ள உச்சநீதிமன்ற
நீதிபதிகள் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தண்டனை அனுமானத்தின்
அடிப்படையிலும், யூகத்தின் அடிப்படையிலுமானதுதான் என்பதை கீழ்க்கண்ட
தங்களது தீர்ப்பு வரிகளில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
‘பெரும்பாலான
சதித்திட்டங்களில், குற்றச் சதியில் பங்கேற்றதற்கான நேரடி சாட்சியம் இருக்க
முடியாது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட அப்சல் கொல்லப்பட்ட தற்கொலைப்
படை பயங்கரவாதிகளுடன் ஒத்துழைத்தார் என்பது சூழ்நிலைகளைச் சீர்தூக்கிப்
பார்க்கும் போது தெளிவாகிறது’
இவர் குற்றம் செய்தார் என்பதற்கு
நேரடியான சாட்சிகள் இல்லை என்பதுதான் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு.
மேலும் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு ஒத்துழைத்தார் என்பதும்
கூட சாட்சியங்களின் மூலமாக தெரிய வருகின்றது என்று நீதிபதிகள் கூறவில்லை.
மாறாக சூழ்நிலைகளை சீர்தூக்கிப் பார்க்கும்ப்போது தெரிய வருகின்றது என்று
கூறி தங்களது தீர்ப்பின் லட்சணத்தை தாங்களே தெளிவுபடுத்தியுள்ளனர்.
8ஆண்டுகள் தூக்குக்கு காத்திருந்தவரை தூக்கிலிட தடைசெய்த உச்சநீதிமன்றம்:
பஞ்சாப் முதலமைச்சராக இருந்த பிரதாப் சிங் கெய்ரோன் சுட்டுக்கொல்லப்பட்ட
வழக்கில் தயா சிங் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதைவிட ஒரு
பயங்கரவாத செயல் வேறொன்றும் இருக்க முடியாது. ஆனால் இந்த பயங்கரவாதிக்கு
வழங்கப்பட்ட தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது உச்சநீதிமன்றம்.
இந்த வழக்கில் மரணதண்டனை விதித்த பிறகு ஒருவர் நீண்ட காலம் தண்டனை
வழங்கப்படாமலே தண்டனையை சந்திக்கப் போகிறோம் என்ற மனநிலையில் 13 ஆண்டுகாலம்
சிறையில் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்திருக்கிறார். எனவே நாங்கள்
தூக்குத் தண்டனையை ரத்து செய்து அதற்கு குறைவான தண்டனையான ஆயுள் தண்டனையாக
குறைக்கின்றோம் என்று தீர்ப்பு சொன்னார்கள் உச்சநீதி மன்ற நீதிபதிகள்.
இதற்கு முன்பாக எத்தனையோ படுபாதக கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட எத்தனையோ
நபர்களை மன்னித்து அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குமேல் மரணதண்டனையை
எதிர்நோக்கி இருந்துள்ளார்கள் என்று காரணம் கூறி, அந்தக்காரணத்தால்
அவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனையை நாங்கள் ரத்து செய்கின்றோம் என்று
தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், அப்சல் குரு முஸ்லிம் என்பதால் மக்களின்
கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த வேண்டும் என்பதாக
தீர்ப்பெழுதியிருப்பது விநோதத்திலும் விநோதம்தான்.
இவர்கள்
விரும்பினால் தூக்குதண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி 8ஆண்டுகாலம்
தூக்குதண்டனையை எதிர்நோக்கி வெந்துகொண்டிருந்துள்ளார். அதனால் தூக்கு
தண்டனையை ரத்து செய்கின்றோம் என்று சொல்வார்கள்.
இவர்களுக்கு
பிடிக்காவிட்டால், தூக்குதண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி 8ஆண்டுகாலமாகியும்
தூக்கில் போடாமல் வைத்துள்ளீர்கள். என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள்?.
உடனே அவனை தூக்கில் போடுங்கள் என்று சொல்வார்கள் என்றால் இதுவெல்லாம்
முஸ்லிம்களுக்கு மட்டும் திட்டம் தீட்டி எழுதப்பட்ட தீர்ப்புகளாகத்தான்
நாம் கருத வேண்டியுள்ளது.
அப்சல் குருவுக்கு தண்டனை கொடுத்ததிலும் விநோதம்:
அதுமட்டுமல்லாமல் பாராளுமன்றத்தாக்குதல் வழக்கில் அப்சல் குரு கைது
செய்யப்பட்டதான் பின்னணி விநோதத்திலும் விநோதமான ஒன்று. பாராளுமன்றத்தைத்
தாக்கியவர்களை சுட்டுக்கொன்ற போது இறந்து கிடந்தவர்கள் தொலைபேசியில்
அவர்கள் தங்களது தொலைபேசி வாயிலாக அப்சல் குருவை தொடர்பு
கொண்டிருந்தார்களாம். இதுதான் அப்சல் குரு குற்றவாளி என்பதற்கான ஆதாரமாம்.
இதில் பிரதான குற்றவாளியாக கைது செய்யப்பட்ட கிலானி என்ற பேராசிரியர்
உட்பட மூன்று நபர்களில் இருவர் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால்
விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். ஒருவருக்குமட்டும் 10ஆண்டு சிறைத்தண்டனை
வழங்கிய உச்ச நீதிமன்றம், பாராளுமன்றத்தாக்குதலில் அப்சல் குரு நேரடியாக
ஈடுபட்டார் என்றும் குற்றம் சாட்டவில்லை. இப்படி நேரடியாக குற்றம்
சாட்டப்படாத நிலையிலும், அதற்கான நேரடி சாட்சிகள் இல்லாத நிலையிலும் இந்த
வழக்கில் யாருக்காவது தூக்குதண்டனை வழங்க வேண்டும் என்று இவர்களாக
முடிவெடுத்து அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்து
மக்களின் கூட்டு மனசாட்சியின் மீது பழியைப்போட்டுள்ளார்கள்.
அரசியல்
சாசனத்திற்கு முரணாக தங்களது மனோஇச்சைப்பிரகாரம் அப்சல் குருவுக்கு
மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்து இந்திய அரசின் இறையாண்மையையும், நீதி
பரிபாலனத்தையும் இந்த நீதிபதிகள் தூக்கிலிட்டுள்ளார்கள் என்பதுதான்
இதிலிருந்து நாம் அறிந்து கொண்ட உண்மை.
நம்பிக்கை கொண்டோரே!
உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை
நிலை நாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி
விடுங்கள்! (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக
இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ
இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ,
புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
அல்குர் ஆன் 4 : 135
No comments:
Post a Comment