சீன விண்வெளி வீரர்கள் 5வது முறையாக விண்வெளிப் பயணத்தை கடந்த 11ம் திகதி
செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனர். இதுவரையில் 5 முறை விண்வெளி வீரர்களை
விண்ணுக்கு அனுப்பி, வெற்றிகரமாக அவர்களை பூமியில் தரையிறக்கிச் சாதனை
செய்துள்ளது சீனா.
இந்நிலையில், சீனாவின் கான்சு மாகாணம் ஜியுகான்
ஏவுதளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை ஷென்சூ-10 (Shenzhou-10) விண்வெளி
ஓடத்துடன் இணைக்கப்பட்ட லோங் மார்ச் - 2எஃப் (Long March 2F) உந்துகணை
வெற்றிகரமாக ஏவப்பட்டது.
சர்வதேச வெண்வெளி ஆய்வு கூடத்தைப்போல் சீனா
தனக்கென தனியானதொரு வெண்வெளி ஆய்வு கூடத்தை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு
வருகிறது. அதற்கு டியான்காங்-1 என பெயரிட்டுள்ளது. அதில் சீன விஞ்ஞானிகள்
தங்களின் ஆய்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். இந்த ஆய்வு கூடத்திற்கு இதுவரை
நான்கு தடவைகள் விண்வெளி வீரர்களை அனுப்பிவைத்துள்ளது. தற்போது 5வது
தடவையாக ஒரு பெண் உட்பட 3 வீரர்களை சீனா அனுப்பியுள்ளது.
விண்வெளி
வீரர் நியி ஹெய்ஷெங் தலைமையிலான இக்குழுவில் ஜாங் யிஸாகுவாங், வாங் யாபிங்
(35 வயதான பெண்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் வாங் யாபிங்
விண்வெளியில் இரண்டாவது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார். இதேவேளை, கடந்த
ஆண்டு சீனாவின் முதல் பெண்ணாக லியு யாங் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார்.
சீனா முதல் முறையாக பெண் வீராங்கனையை விண்வெளிக்கு அனுப்பும்
திட்டத்தின்போது, வாங் யாபிங்கும் இடம்பெற்றிருந்தார். ஆனால், நூலிழையில்
இந்த வாய்ப்பு, லியு யாங்குக்கு சென்றுவிட்டது. இந்நிலையில், தவறவிட்ட
வாய்ப்பை வாங் தற்போது பெற்றுள்ளார்.
விண்வெளிக்குச் சென்ற மூன்று
சீன விஞ்ஞானிகள் அங்கிருந்த விண்வெளிக் கூடத்திற்குள் நுழைந்துள்ளனர். இதனை
சீனாவின் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஆயிரகணக்கான கிலோ மீற்றர்
வேகத்தில் வெவ்வேறு பாதையில் பயணிக்கும் இரண்டு விண்கலங்களை அருகருகே
கொண்டு வந்து ஒன்றிலிருந்த ஆட்களை மற்றொன்றுக்கு மாற்றுவது கடினமான
பணியாகும். இந்தச் சவாலான பணியில் இப்போது சீனா வெற்றி பெற்றுள்ளது.
3
வீரர்களும் இதுவரை இல்லாத வகையில் 15 நாட்கள் விண்வெளியில் தங்கி ஆய்வுப்
பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். முன்னதாக, கடந்த ஆண்டு ஏவப்பட்ட விண்கலம் மூலம்
சீன விண்வெளி வீரர்கள் 13 நாட்கள் விண்வெளியில் இருந்ததே அதிகபட்சமான
நாட்களாக இருந்தனர். தற்போது அதனைவிட இரண்டு நாட்கள் அதிகமாக
தங்கியிருக்கப்போகின்றனர்.
சீனா தற்போது விண்வெளியில் சோதனை
அடிப்படையில் டியான்காங்-1 என்ற ஆய்வு மையத்தை அமைத்து வருகிறது. இப்போது
செலுத்தப்பட்டுள்ள ஷென்சூ விண்வெளி ஓடம், இந்த ஆய்வு மையத்துடன்
இணைக்கப்படும். பின்னர், ஆய்வு மையத்தில் தங்கி 15 நாட்கள் ஆய்வு செய்ய
விண்வெளி வீரர்கள் திட்டமிட்டுள்ளனர்.
விண்வெளியில் பெரிய அளவிலான
ஆய்வு மையத்தை அமைக்கும் பணியை 2020ற்குள் நிறைவு செய்ய சீனா
திட்டமிட்டுள்ளது. விண்வெளியில் ஆய்வு மையம் அமைப்பது தொடர்பான திட்டத்தின்
தலைவர் ஜாங் யுஸியா கூறுகையில், ‘மருத்துவ மற்றும் தொழில்நுட்ப ரீதியான
ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ள வீரர்கள், விண்வெளியில் தங்களுக்கு ஏற்படும்
அனுபவங்களை அங்கிருந்தபடியே சீனாவில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு
உரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார். இதன் மூலம் விண்வெளியில்
பாடம் எடுத்து முதல் ஆசிரியை என்ற பெருமை சீனப் பெண்ணான வாங் யாபிங் இற்கு
கிடைக்கவுள்ளது. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகள்
விண்வெளி ஆய்வு மையத்துக்கு அழைத்து வரப்பட்டவுள்ளனர் என்று, சீன
விண்வெளித்துறை செய்தித் தொடர்பாளர் ஊ பிங் தெரிவித்துள்ளார்.
மேலும்,
அவர் கூறுகையில், ‘விண்வெளியில் இருந்தபடி நீர்மத்தின் பரப்பு இழுவிசை,
நியூட்டன் விதிகள், விண்வெளியில் எடையிழப்பு, இழுவிசை உள்ளிட்டவை குறித்து
வாங் பாடம் எடுக்க உள்ளார். இது மாணவர்கள் எளிதில் புரிந்துக் கொள்ள
வழிவகுக்கும்’ என்றார். முன்னதாக விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும்
வீரர்களுக்கு அதிபர் ஜீ ஜின்பிங் வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறுகையில்,
‘நீங்கள் சீன மக்களை பெருமையடைய செய்துள்ளீர்கள். விண்வெளித் துறையில்
சாதனை புரிய வேண்டும் என்ற நாட்டின் கனவையும் உங்களுடன் சுமந்து
செல்கிறீர்கள். உங்களின் பயணத்தை முடித்துக் கொண்டு வெற்றிகரமாகத் திரும்பி
வர வாழ்த்துகள்’ என்றார்.
ரஷ்யா, அமெரிக்காவை தொடர்ந்து
விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.
இப்போது, விண்வெளியில் ஆய்வு மையத்தை நிறுவும் முயற்சியிலும் அந்நாடு
ஈடுபட்டுள்ளது. அமெரிக்க, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் விண்வெளியில் சர்வதேச
விண்வெளி மையத்தை கூட்டாக அமைத்து வருகின்றன. ஆனாலும், அதிலும்,
தங்களுக்கு சில பகுதிகளை, அமெரிக்காவும், ரஷ்யாவும் பிரித்துக் கொண்டுள்ளன.
இந்நிலையில், கொம்யூனிச நாடான சீனாவும், தன் பஙகுக்கு விண்வெளியில்
ஆய்வுக்கூடத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஈகரை தமிழ் களஞ்சியம்
No comments:
Post a Comment