Digital Time and Date

Welcome Note

Wednesday, June 26, 2013

ATM பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டியவை

எளிமையான வங்கிச் சேவைக்காக இன்று பல வசதிகள் வந்துவிட்டன. அதில் குறிப்பிடத்தக்கதாக இருப்பது ஏடிஎம் என்ற தானியங்கி பண வழங்கி வசதியாகும்.
வங்கிக் கணக்கு வைத்திருப்பவரிடம் ஏடிஎம் கார்டு இல்லையென்றால் அவரை வேற்று கிரக வாசியைப் பார்ப்பது போல மேலும் கீழுமாக பார்க்கும் காலமிது.

உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எங்கும், எந்த நேரத்திலும் எடுத்துக் கொள்ளலாம் என்ற இந்த ஏடிஎம் வசதி பிக்பாக்கெட், வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்களிலிருந்து ஓரளவிற்கு பாதுகாப்பை வழங்கியிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், அதே நேரத்தில் இவ்வசதி சமீப நாட்களில் பல மோசடிச் சம்பவங்களால் நாளிதழ் செய்திகளில் தொடர்ந்து இடம் பிடிப்பதாக மாறிவருவது கவலையளிக்கக் கூடிய விஷயமாகும்.

ஏடிஎம்-மில் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி ஏமாற்றினார், போலி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளை என்பதோடல்லாமல் ஏடிஎம் எந்திரத்தை கடத்திச் சென்றனர் என்ற செய்தி கூட பத்திரிகைகளில் வந்ததை நீங்கள் படித்திருக்கக்கூடும்.

கண்காணிப்புக் கேமராக்கள், பாதுகாவலர்கள் இருந்தாலும் இத்தகைய திருட்டுக்கள் நடைபெறுவதைத் தவிர்க்க முடியவில்லை. இதற்கு வங்கி மட்டுமே காரணமல்ல, நம்முடைய கவனக் குறைவும்தான். ஏடிஎம் அட்டைகளை வைத்திருப்போர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய சில நடத்தை விதிமுறைகளை காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவும், ரிசர்வ் வங்கியும் பட்டியலிட்டுள்ளன. அவற்றைப் படித்து அதன்படி நடந்து கொண்டால் நம்முடைய இழப்பை தவிர்க்க முடியும்.

ஏடிஎம் பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டியவை:

உங்கள் ஏடிஎம் கார்டை பிறரிடம் கொடுத்துப் பணம் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

பின் எண்ணை காகிதத்திலோ, ஏடிஎம் அட்டையிலோ, பாஸ் புத்தகத்திலோ, பர்சிலோ அல்லது வேறு எங்குமோ எழுதி வைக்காதீர்கள். மறந்து விடுவோம் என்றெண்ணினால் உங்கள் வீட்டில் உள்ள நோட்டிலோ, காகிதத்திலோ எழுதிப் பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.

ஏடிஎம் கார்டை டெபிட் கார்டாக உபயோகித்து கடைகளில் பொருள் வாங்கும்போது கார்டை உங்கள் கண் முன்னரே எந்திரத்தில் செலுத்த அனுமதியுங்கள்.

கடவுச் சொல்லை நீங்களே நேரடியாக எந்திரத்தில் பதிவு செய்யுங்கள்.

எக்காரணம் கொண்டும் ஏடிஎம் அட்டையை விற்பனையாளர் எடுத்துச் செல்வதற்கோ, கடவுச் சொல்லை கேட்டாலோ கொடுக்காதீர்.

மேலும், நம்பகமான கடைகளிலேயே இவ்வட்டையைப் பயன்படுத்தவும். பொருட்காட்சி மற்றும் விழாக்கால உடனடிக் கடைகளிலோ, அறிமுகமில்லாத கடைகளிலோ பயன்படுத்தாதீர்.

ஏடிஎம் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றுங்கள். அதே போல உங்கள் பிறந்த ஆண்டு, வாகன எண், தொலைபேசி எண் என்பது போல உங்களுடன் தொடர்புடைய எந்த எண்ணையும் பயன்படுத்தி பின் எண்ணை உருவாக்காதீர். உங்களுக்கு நினைவில் நிற்கக்கூடிய வேறொரு எண்ணையே பயன்படுத்தவும்.

வெளி நபர்களிடம் பின் எண்ணை சொல்லவேண்டி நேர்ந்தால் உடனடியாக அதனை மாற்றிவிடவும்.

ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது அது குறித்த விபரத்தை குறுஞ்செய்தியாக கைபேசிக்கு அனுப்பும் சேவை பெரும்பாலான வங்கிகளில் உள்ளது. இவ்வசதியை நீங்கள் பயன்படுத்தாவிடில் உடனே பதிவு செய்து செயல்பாட்டில் வைக்கவும்.

ஏடிஎம் கார்டு தொலைந்து போனால் உடனே உங்கள் வங்கிக்கு தகவல் தெரிவிக்கவும்.
அதனால் உங்கள் அட்டையை பிறர் பயன்படுத்தி பணம் எடுக்க முயற்சிப்பதைத் தடுக்கலாம்.

எனவே வங்கி உதவி எண்ணை எப்போதும் நினைவில் வைக்கவும் அல்லது பத்திரமாக எழுதி வைத்துக்கொள்ளவும். உதவி எண் ஏடிஎம் அட்டை, வங்கி பாஸ் புக் மற்றும் ஏடிஎம் மையங்களில் அச்சிடப்பட்டிருக்கும்.

பயோ மெட்ரிக் என்ற கைரேகை அல்லது கண் ரேகையைக் கொண்டு ஏடிஎம்-மில் பணம் எடுக்க அனுமதிக்கும் வசதியை ஏற்படுத்துவது பரிசீலனையில் உள்ளது. இத்தகைய பாதுகாப்பு வசதி வருவது நல்லது என்றாலும், சில சமயங்களில் நாம் சென்று பணம் எடுக்க முடியாத சூழலில் நம் குடும்ப உறுப்பினரை அனுப்பி பணம் எடுத்துவரச் சொல்வோம். அத்தகைய வாய்ப்பு பயோமெட்ரிக் முறையால் இழக்க நேரிடுவதை தவிர்க்க முடியாது.

நன்றி nathikarai.in