
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கல்பத்தை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜான்சன். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லீலெட் (வயது 19) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
கடந்த 2003–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26–ந் தேதி இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் விமரிசையாக நடைபெற்றது. 2004 ஜனவரியில் திருமணம் செய்யவும் இருவீட்டாரின் பெற்றோரும் முடிவு செய்து இருந்தனர்.
திருமண நிச்சயத்தின் போது லீலெட் கல்லூரியில் படித்து வந்தார். தொடர்ந்து அவர் கல்லூரிக்கு சென்று வந்தார். கடந்த 2004–ம் ஆண்டு ஜனவரி 4–ந் தேதி அவர் வழக்கம்போல கல்லூரிக்கு பஸ்சில் சென்றார். அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி சுவரில் மோதியது. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லீலெட் உயிர் தப்பினார். ஆனால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள் இடுப்புக்கு கீழ் பகுதி முற்றிலுமாக செயல் இழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் லீலெட்டும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். தொடர்ந்து லீலெட்டுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. லீலெட் மன உறுதியை கைவிடாமல் டாக்டர்கள் அளித்த சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
அந்த சிகிச்சைக்கள் வேதனையை தந்தாலும் அதை தாங்கிக்கொண்டு லீலெட் மன உறுதியுடன் போராடினார். இதற்கிடையில் லீலெட் விபத்தில் சிக்கிய தகவல் முதலில் ஜான்சனுக்கு அதிர்ச்சி தந்தாலும் அவர் மனம் தளராமல் லீலெட்டுக்கு ஆறுதலாக செயல்பட்டார். தினமும் அவரை சந்தித்து ஆறுதல் கூறி அவரை உற்சாகப்படுத்தினார்.
விபத்து காரணமாக தனது திருமணம் தடைப்பட்டு விடுமோ? என்ற பயம் வேண்டாம். உன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என்று ஜான்சன் உறுதி அளித்தார். இப்படி 10 வருடங்கள் உருண்டு ஓடியது. தற்போது சக்கர நாற்காலியில் அமர்ந்து வாழ்க்கையை ஓட்டும் அளவுக்கு லீலெட் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து லீலெட்டுக்கும், ஜான்சனுக்கும் நேற்று ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் இருவீட்டார் ஆசியுடன் திருமணம் நடந்தது. இதுபற்றி லீலெட் கூறும்போது வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி நானும் எனது வீட்டாரும் கூறிய போதும் ஜான்சன் உறுதியாக இருந்து என்னை திருமணம் செய்து கொண்டார். இனி மரணம் வரை சேர்ந்து வாழ்வோம் என்றார்.
No comments:
Post a Comment