பீஜிங்:தெற்கு
சீனாவின் வியட்நாம் ப்ளாக்கில் இருந்து எண்ணெய் துரப்பண பணிகளை
நடத்துவதற்கு இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின்
ஆசிய விவகாரத்துறை இயக்குநர் ஜெனரல் சன் வெய்டாங் கூறியது: எண்ணெய் வளம்
மிக்க தென் சீனக் கடல் பகுதியில் பொதுவான ஒரு வளர்ச்சித் திட்டம் இருக்க
வேண்டும் என்பது எங்கள் நோக்கம். எனவே அங்கு இந்தியா, பிரச்னையை
ஏற்படுத்தாது என்று நம்புகிறோம். அப்பகுதியில் அமைதியையும், பாதுகாப்பையும்
உறுதி செய்ய இந்தியா முயற்சிக்கும் என்ற நம்பிக்கையுள்ளது என்றார்.
சீனா சென்றுள்ள இந்திய
பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அப்போது,
“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஷ்மீரில் சீன நிறுவனங்கள் உள்கட்டமைப்பு வசதிப்
பணிகளை மேற்கொள்ள இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால் தான் இப்போது
வியட்நாம் ப்ளாக்கில் இந்தியா மேற்கொள்ளும் எண்ணெய் துரப்பண பணிக்கு சீனா
எதிர்ப்புத் தெரிவிக்கிறதா?” என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு, இவை இரண்டுமே முற்றிலும் வேறுபட்ட
பிரச்னைகள். கஷ்மீர் என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள
பிரச்னை. இதனை இருதரப்பும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே எங்கள்
கருத்து. கஷ்மீரில் சீன நிறுவனங்கள் அடிப்படை வசதிப் பணிகளைத்தான்
மேற்கொள்கின்றன. அது எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. ஆனால் தென் சீனக்
கடல் பகுதி என்பது பல நாடுகள் சம்பந்தப்பட்ட விஷயம். மிகவும் சிக்கலானது,
பெரும் பிரச்னையை ஏற்படுத்தக்கூடியது” என்று வெய்டாங் பதிலளித்தார்.
வியட்நாம் ப்ளாக்கில் தென் சீனக் கடல்
பகுதியில் எண்ணெய் துரப்பணப் பணிகளை மேற்கொள்ள இந்தியா, வியட்நாமுடன்
ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி அங்கு கிடைக்கும் எண்ணெய் வளத்தை
இருநாடுகளும் பகிர்ந்து கொள்ளும். இதனை செயல்படுத்தவிடக் கூடாது என்ற
நோக்கில் சீனா செயல்பட்டு வருகிறது. ஆனால் எண்ணெய் எடுக்கும் பணியை
மேற்கொள்வதில் இந்தியா உறுதியாக உள்ளது.
******************* ************************ ************************
No comments:
Post a Comment