Digital Time and Date

Welcome Note

Wednesday, December 26, 2012

2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள்

2012-ம் ஆண்டு மக்களிடையே அதிகம் பேசப்பட்டவர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது யாகூ இணையதளம்.

இதில் அதிகம் இடம் பிடித்தவர்கள் வழக்கம்போல அரசியல்வாதிகள்தான்.

அரவிந்த் கெஜ்ரிவால்
: இந்திய வருவாய்த் துறையில் பணியாற்றிய இவர் சமூக ஆர்வலாக தன்னை மாற்றிக் கொண்டார். பல்வேறு ஊழல்களில் தொடர்புடையவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடுவதற்கு முன்னால் அண்ணா ஹசாரேவின் வலது கையாக விளங்கினார். சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட்டார். அதில் இந்தியாவின் முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் அனைத்து ஊடகங்களிலும் இவர் மிகவும் பிரபலமானார். இறுதியில் "ஆம்ஆத்மி' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

நரேந்திர மோடி:
குஜராத்தில் ஒரு சாதாரண அரசியல் தொண்டனாக வாழ்க்கையைத் தொடங்கி சக்தி வாய்ந்த அரசியல் தலைவராக உருமாறியவர். இவரை சிலர் தேசிய பாதுகாப்பு அரண் என்றும் சிலர் மேம்பாட்டிற்கான தலைவர் என்றும் நம்புகிறார்கள். மேலும் சிலர் இவரை வருங்கால பிரதமர் என்றும் சிலர் இந்துக்களின் பாதுகாவலர் என்று வர்ணிக்கின்றனர். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரதமர் வேட்பாளராக மோடி நிர்ணயிக்கப்படுவார் என்று பேசப்படுகிறது. எது எப்படியோ 2012-ம் ஆண்டு அரசியலை ஒரு கலக்கு கலக்கியவர் மோடி என்று பட்டியலிடப்பட்டுள்ளார்.

அகிலேஷ் யாதவ்: உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியின் வெற்றி வாய்ப்பைத் தட்டி பறித்தார் இன்னொரு இளைஞரான அகிலேஷ் யாதவ். சட்டமன்றத் தேர்தலில் 403 இடங்களில் 224 இடங்களைப் பிடித்தார். உ.பி. தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து தனித்து ஆட்சி அமைத்தார். நடை பயணம், சைக்கிள் ஆகிய இரண்டையும் ஆயுதமாகக் கொண்டு எளிய மக்களை பிரசாரத்தின்போது சந்தித்தார். அடிமட்ட மக்களின் மனதில் இடம்பிடித்தார். இவர் முலாயம் சிங்கின் மகன் என்பது கூடுதல் பலம்.

மலாலா யூசஃப்ஸôய்: பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் சமூக ஆர்வலர்தான் மலாலா யூசஃப்ஸôய். 15 வயதான இந்தச் சிறுமி பெண் கல்விக்காவும், பெண் உரிமைக்காகவும் பாடுபட்டு வருகிறார். இவர் படிக்கும் பள்ளியில் பெண் குழந்தைகள் படிக்க வரக்கூடாது என்று தாலிபான்கள் தடைவிதித்தனர். எனவே ஓர் இணையதள பிளாக்கைத் தொடங்கி அதில் தாலிபான்கள் பிடியில் வாழ்க்கை எப்படியிருந்தது என்று எழுதினார். இவரின் வாழ்க்கையை அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் என்ற நிறுவனம் ஆவணப்படமாக எடுத்தது. தொடர்ந்து பெண் கல்விக்காக தொலைக்காட்சி, செய்தித்தாள்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டே இருந்தார். தாலிபான்களும் தொடர்ந்து இவருக்கு கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டேயிருந்தனர். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர் பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இவர் சுடப்பட்டார். ஆபத்தான நிலையில் லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார். எனினும் தொடர்ந்து தாலிபான்களுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்.

ராபர்ட் வதேரா: டி.எல்.எஃப் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் ராபர்ட் வதேராவின் வர்த்தகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை எழுப்பினார் கெஜ்ரிவால். கடந்த ஆண்டு டி.எல்.எஃப் நிறுவனத்திற்கு தனது இடத்தை ரூ.58 கோடிக்கு விற்றதாகவும், அதற்கான பணத்தை அடுத்த நான்காண்டுகளில் கொடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன் மூலம் ரூ.42.61 கோடி லாபத்தைச் சம்பாதித்தார் ராபர்ட் வதேரா என்கிறார் கெஜ்ரிவால். இதன் மூலம் 3 ஆண்டுகளுக்குள் வதேராவின் ரியல் எஸ்டேட் வர்த்தகம் பல்மடங்கு உயர்ந்து அதன் சொத்து மதிப்பு ரூ.200 கோடியாக உயர்ந்துள்ளதும், இதில் முறைகேடுகள் நடைபெற்றது எனவும், டி.எல்.எஃப். நிறுவனம் அதன் வர்த்தகத்தில் ஏன் ராபர்ட் வதேராவை இணைத்துக்கொண்டது என்பது கேள்வியாக உள்ளது. சோனியா காந்தியின் மருமகன் என்பதாலா அல்லது டி.எல்.எஃப். நிறுவன உரிமையாளர் வதேராரவின் நண்பர் என்பதாலா?

மன்மோகன் சிங்: இந்த ஆண்டு 80 வயதைத் தொட்ட மன்மோகன் சிங்கை, இங்கிலாந்தைச் சேர்ந்த தினசரி நாளிதழ் ஒன்று "இந்தியாவின் ரட்சகரா அல்லது சோனியா காந்தியின் கைப்பாவையா?' என்றும், "டைம்' பத்திரிகை "செயல்படாத பிரதமர்' என்றும் விமர்சித்தது. இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும் மன்மோகன்சிங் குறித்து பல்வேறு வகையான விமர்சனங்கள், கேலிச்சித்திரங்கள் இடம்பெற்றன. இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தவாதி என்று பெயர் பெற்றவர் என்றாலும், இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்தவர் என்றும் பெயரெடுத்தார்.


பராக் ஒபாமா: அமெரிக்க வரலாற்றிலேயே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களும் சரிபாதி வெற்றி வாய்ப்பைப் பெற்றிருந்தது இந்தமுறை தான். ஆனால் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மிட் ரோம்னியை எளிதாக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகையை கைப்பற்றினார் ஒபாமா. அமெரிக்க வாக்காளர்கள் ஒபாமாவின் ஆட்சியின் தோல்விகளை புறக்கணித்து, அவருக்கு மற்றொரு வாய்ப்பை அளித்தனர். வெற்றி பெற்ற பின் உரையாற்றிய ஒபாமா, அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

யுவராஜ் சிங்: ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் அடித்து புகழ் பெற்றவர் யுவராஜ் சிங். உலகக் கோப்பையை பெற்றுத் தந்த இவர் அரிய ரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டதும் இவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வெளியேறிவிடுவார் என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு ஆதரவாக பிரார்த்தனைகளும், சமூக வலைதளங்களில் ஆதரவும் பெருகிக்கொண்டேயிருந்தது. அமெரிக்காவுக்கு சிகிச்சைக்குச் சென்ற யுவராஜ், அங்கிருந்தபபடியே சமூக வலைதளத்தில் தன் புகைப்படத்தையும், தன் உடல்நலத்தையும் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொண்டேயிருந்தார். யாரும் எதிர்பாராத வண்ணம் குணமடைந்து போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியுள்ளார். புற்றுநோய் தன்னுள் புதிய உத்வேகத்தையும், குறிக்கோளையும் உருவாக்கியுள்ளது என்கிறார் யுவராஜ் சிங்.

தினமணி

No comments:

Post a Comment